அங்கு அவசர நிவாரண உதவிகளைக் கொண்டுசெல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் இராணுவ நடவடிக்கைகள் முடிந்த பின்னரே அனுமதி கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.
அங்கு சிரியாவின் அரச படைகளுடன் லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இணைந்துகொண்டுள்ளது.கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த குஸெயர் நகர் மீது அரச படைகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், அந்தப் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்றி தவிக்கின்றார்கள்.
குஸெயர் நகரின் மீது 'அபாய எச்சரிக்கைப் பிரகடனம்' செய்ய ஐநா எடுத்த நடவடிக்கையும் ரஷ்யாவினால் தடுக்கப்பட்டுவிட்டது.
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அங்கு சிக்கியுள்ள மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டுமென்று ஐநா தலைமைச் செயலர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள மோசமான நிலைமையைக் கருத்தில்கொண்டு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டுவர முயற்சித்த அவசர நடவடிக்கையே ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்படியான பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கைகள் எல்லா உறுப்புநாடுகளின் ஏகோபித்த முடிவு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஹிஸ்புல்லா - சிரிய கிளர்ச்சிப் படை மோதல்'
இதற்கிடையே, ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கும் சிரிய கிளர்ச்சிப் படையினருக்கும் லெபனானின் கிழக்கு நகரான பால்பெக்கிலும் நேற்றிரவு கடுமையான மோதல்கள் நடந்துள்ளன.
ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் லெபனாலிருந்துவந்து சிரியாவில் அரச படைகளுக்கு ஆதரவாக எதிரணி கிளர்ச்சிப் படையினருடன் மோதிவருகின்றனர்.
சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்தின் படைகளுடன் ஹிஸ்புல்லா ஆயுததாரிகளும் சேர்ந்துகொண்டபின்னர்தான் கடந்த மாதத்திலிருந்து சிரியாவில் நிலைமை மோசமடையத் தொடங்கியது.
ஹிஸ்புல்லா குழுவினர் அரச படைகளுக்கு துணை போகின்றமைக்கு பதிலடியாக லெபனானுக்குள் தாக்குதல் நடத்தப்படும் என்று சிரியாவின் எதிரணி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்துவருகின்றனர்.
இதனிடையே, சிரியாவில் பெரும்பான்மை சுன்னி கிளர்ச்சிப் படையுடன் லெபனானிலிருந்து வந்துள்ள சுன்னி போராளிக்குழுக்களும் இணைந்துபோராடத் தொடங்கியுள்ளன.
அதிபர் அஸ்ஸத்துக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு மத்திய கிழக்கு முழுவதிலுமுள்ள சுன்னி முஸ்லிம்களுக்கு எகிப்தின் செல்வாக்கு மிக்க மதபோதகர் யூசுப் அல் கரதாவி அழைப்பு விடுத்துள்ளார்.
இரானும் ஹிஸ்புல்லாவும் சுன்னிகளை ஒழிப்பதற்காக அஸ்ஸாத்துடன் கைகோர்த்துள்ளதாக டோஹாவில் இடம்பெற்ற பேரணியொன்றில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment