இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள்!


உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர்.நோன்பு நோற்கின்றனர். தர்மம் அளிக்கின்றனர்.இது போன்ற நன்மையான காரியங்களில்,மார்க்கம் பணிக்கின்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.இவைகள் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காரியங்களே.இருப்பினும் சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில்,அதில் நாம் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கப்பட வேண்டுமெனில் நம்மிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதி என்ன?என்பதை சிந்திக்க மறந்து விட்டனர். 

இறையச்சம் தான் இறைவன் நிர்ணயித்திருக்கின்ற மிக முக்கிய தகுதி.நாம் இறைவனை உண்மையான முறையில் அஞ்சுபவர்களாக இருந்தால் மட்டுமே சொர்க்கத்திற்குள் நுழைய முடியும்.சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்க வேண்டுமெனில் இறையச்சம் எனும் தகுதி நிச்சயம் நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.இதை பின்வரும் வசனத்தி­ருந்து புரிந்து கொள்ளலாம். 

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சு வோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன் 3:133)

இறைவனை அஞ்சுவோருக்குத்தான் சொர்க்கம் படைக்கப் பட்டுள்ளது என்பதை இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.சொர்க்கத்தில் புக வேண்டும் என்று விரும்புபவர்கள் இறைவன் விரும்பும் இந்த தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் அது சாத்தியமில்லை.

இனியவர்களின் இலக்கணங்கள்:

இறைவனை அஞ்சுவோர்களே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதை கூறிவிட்டு,அவர்களுக்கு சில இலக்கணங்களையும், பண்புகளையும் குறிப்பிட்டு இவைகள் ஒவ்வொரு இறையச்சவாதியிடத்திலும் இருக்க வேண்டும், அவர்களே உண்மையில் இறைவனை அஞ்சுவோர்கள் என்பதாக இறைவன் தெரிவிக்கின்றான்.நாம் உண்மையில் இறைவனை அஞ்சுவோர்களாக இருந்தால் இறைவன் கூறும் அந்த இலக்கணங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். அந்த பண்புகள் அனைத்தையும் ஒரு சேர பெற்றுக்கொண்டாலே தவிர இறைவனது பார்வையில் அவனை உண்மையாய் அஞ்சும் விசுவாசிகளாக முடியும் என்பதை புரிந்து,அவைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

இனி இறைவன் கூறும் இலக்கணங்கள் :

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள்.அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்(அல்குர்ஆன்3:134, 135)
எந்நிலையிலும் தர்மம்   அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள்.(அல்குர்ஆன் 3 : 134,)

உண்மையான முறையில் இறைவனை அஞ்சுவோர்கள் எந்த ஒரு நிலையிலும் இறைவனது பாதையில் செலவிடுபவர்களாக இருப்பார்கள் என்பதாக ஒரு இலக்கணத்தை வகுக்கின்றான். அதாவது அவர்கள் இன்பத்தில் மூழ்கியிருந்தாலும் படைத்த இறைவனை மறக்காமல்,இந்த இன்பத்தை தந்தவன் இறைவனே என்று இறைவழியில் செலவிடுவார்கள், அதே போல் துன்பத்தில் துவண்டிருந்தாலும்,இதையளித்தவன் இறைவன் தான் என்றாலும் நம்மை சோதிப்பதற்காகவே இந்த துன்பத்தை அளித்திருக்கின்றான்.இதனால் என் இறைவனது 

பாதையில் தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன் என்பதில் உறுதியாய் இருப்பார்கள் என்பதாக  இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆனால் செல்வச் செழிப்புடன் இருக்கும் போது தர்மமளிக்கும் பல இஸ்லாமியர்கள் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டால் தாங்கள் தர்மம் செய்வதை நிறுத்திவிடுகின்றார்கள். எங்களுக்கு ஏன்? இறைவன் வறுமையை தர வேண்டும் என்று இறைவன் மீதே கோபித்துக் கொள்ளும் அதிக பிரசங்கித் தனத்தை மேற்கொள்கின்றார்கள்.

இன்னும் சிலர் தாங்கள் வறுமையில் இருக்கும் போது இறைவா! எங்கள் வறுமையை நீக்கிவிடு என்று பிரார்த்திப்பதுடன் அதற்காக  தர்மம் அளித்து வருவார்கள்.இறைவன் அவர்களது துன்பத்தை போக்கியவுடன் அத்தோடு இறைவனை மறந்து இன்பத்தில் மூழ்கி திளைத்திடுவார்கள்.இது போன்ற இழிவான குணம் இறைவனை அஞ்சுவோர்களிடம் இருக்காது.அவர்கள் தர்மம் அளித்து வருவதை இன்பம்,துன்பம்,வறுமை,செழிப்பு போன்ற எதுவும் தடுத்திராது என்று இறைவன் கூறுகின்றான்.இத்தகைய நிலையை நபிகளாரும்,அவர்களின் தோழர்களும் பெற்றிருந்தார்கள்.இந்த பண்பை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோபத்தை மென்று விழுங்குதல்:
கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். 

(அல்குர்ஆன் 3 : 134, )

இறைவனை அஞ்சும் அடியார்கள் தங்களுக்கு கோபம் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்திக் கொள்வார்கள் என மேற்கண்ட வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ர­), புகாரி 6114
இன்று கோபம் கொள்வது பெருமைக்குரிய விஷயமாக ஆகிவிட்டதை காண்கிறோம். ஒரு சிலர்கள் தாங்கள் கோபம் கொள்வதை(எனக்கெல்லாம் கோபம் வந்துச்சுன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது)என்பதாக பெருமை பொங்க கூறுகின்றார்கள்.பெண்கள் தங்கள் குழந்தைகளின் மீது கோபம் கொள்வதின் வெளிப்பாடாய் கொச்சையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்கின்றார்கள்.கணவன் மனைவிக்கிடையில் சிறு தகராறு ஏற்பட்டாலும் கையில் கிடைக்கும் பொருள் இவர்களின் கோபத்திற்கு இரையாகி விடுகின்றது.இது இறையச்சமுள்ளவர்களுக்கு அழகல்ல என்பதை விளங்கி கோபத்தை கட்டுப்படுத்துபவர்களாக இருந்திட வேண்டும்.
இதோ உமர் (ரலி)­ அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவத்தை கவனியுங்கள்.தன்னை ஒருவர் கோபமுறச் செய்யும் அளவிற்கு நடந்தும் கூட,தான் அக்கோபத்தின் பிடியில் சிக்காமல், தன் கட்டுப்பாட்டுக்குள் கோபத்தை கொண்டுவந்து விடுகின்றார். 

'உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹூதைஃபா' (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹூர் பின் கைஸ் (ரலி) அவர்கüடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்கüல் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக)ஹூர் பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்கüன் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், ''என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா'' என்று சொன்னார். அதற்கு அவர், ''உமர் (ரலி) அவர்கüடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்'' என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹூர் அவர்கள் அனுமதி கேட்டார். 

உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ''கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்கüடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பüப்பதில்லை'' என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹூர் அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ''இறை நம்பிக்கையாளர்கüன் தலைவரே!  உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, ''(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை  விட்டு விலகியிருப்பீராக!'' (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்கüல் ஒருவர்'' என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹூர் அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)நூல் : புகாரி 4642) 

நீதத்திற்கு பெயர் போன உமர் (ரலி)­ அவர்களை பற்றி உண்மைக்குப் புறம்பானதை,பொய்யான தகவலை எடுத்து ரைக்கின்றார்.உடனே உமர் ர­ அவர்கள் கோபம் கொண்டு அவரை அடிக்க முற்படுகின்றார்.அவரது ஆலோசகர் தகுந்த இறைவசனத்தை குறிப்பிட்டவுடன் தனக்கு ஏற்பட்ட அக்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்கின்றார்.நமது பிடியில் கோபத்தை வைத்திருக்கும் வரை நாம் இறைவனை அஞ்சுவோர்களே என்பதில் அஞ்ச வேண்டியதில்லை.

பிறரை மன்னித்தல்:

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள்.  (அல்குர்ஆன் 3 : 134,)

பிறர்கள் தங்களுக்கு ஏதேனும் தவறிழைத்து விட்டால் அவர்களை மன்னிக்கும் தயாள குணம் இறையச்ச முடையவர்களிடம் நிறைந்து காணப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது.நாம் இறைவனை அஞ்சுவோர் பட்டிய­ல் இணைய வேண்டும் என்று சொன்னால் நமக்கு ஏனையோர் தவறிழைத்திடும் போது அவற்றை அலட்சியப்படுத்திவிட வேண்டும். உடன் அவர்களை மன்னித்துவிட வேண்டும். 

நபிகளார் அவர்கள் தன்னை கொலை செய்ய முனைந்தவர்களை கூட மன்னிக்கும் மாண்புடையவர்களாக இருந்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களி­ருந்து அறிந்து கொள்ளலாம்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்கüடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பüப்பாகக் கொண்டு வந்தாள்.நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ''அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்கüடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், ''வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கüன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அறிவிப்பவர் : அனஸ் ர­ நூல் : புகாரி 2617)

('தாத்துர் ரிகாஉ' எனும்) நஜ்துப் போருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக் கொண்டு திரும்பிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத் தாக்கினை அடைந்த போது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே நிழல் பெற்று ஓய்வெடுத்தார்கள். 

தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்கüன் கீழே மக்கள் பிரிந்து சென்று நிழல் பெற்று (ஓய்வெடுத்துக்)  கொண்டிருந்தனர். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் (அவர்கüடம்) வந்தோம். அப்போது ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நான் தூங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் இவர் வந்து எனது வாளை உருவியெடுத்துக் கொண்டார். உடனே நான் விழித்துக் கொண்டேன். எனது வாளை உருவிய நிலையில் எனது தலைமாட்டில் இவர் நின்று கொண்டிருந்தார்.என்னிடமிருந்து உங்களைக் காப்பது யார்? என்று கேட்டார். நான்,அல்லாஹ் என்று பதிலüத்தேன். உடனே அவர் வாளை உறையிலிட்டார்.பிறகு அவர் அமர்ந்து கொண்டார். அது இவர் தான் என்று கூறினார்கள்.பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்காமல் (மன்னித்து) விட்டார் நூல் : புகாரி 4139

நபிகளாரிடம் பிறரை மன்னிக்கும் தயாள குணம் நிறைந்திருந்தது என்பதை இது போன்ற ஏராளமான செய்திகள் உறுதிபடுத்துகின்றன. எங்கே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.தன்னை கொலை செய்ய வந்தவர்களைக்கூட தண்டிக்காமல் மன்னித்திருக்கின்றார்கள் எனும் போது உண்மையில் நம்முடைய மேனி சி­ர்த்துவிடுகின்றது.

அவர்களின் சமுதாயமாகிய நாம் அற்ப விஷயத்திற்காக பரம்பரை பரம்பரையாய் பகை வளர்த்துக் கொள்பவர்களாய் இருக்கின்றோம்.சக நண்பர்களுக்கு மத்தியிலும், குடும்ப உறவினர்களுக்கு மத்தியிலும் பழிவாங்கும் உணர்ச்சியே மேலோங்கி நிற்பதை காண்கின்றோம்.பழிவாங்கும் உணர்வு நம்முடைய உள்ளத்தில் தளிர்த்திருக்கும் எனில் இறைவனை அஞ்சுவோர் பட்டிய­­ருந்து நாம் தொலைவில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை உணர மறந்து விடக்கூடாது.

தவறுகளை திருத்திக் கொள்ளுதல்

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 134)

இறைவனை அஞ்சுவோர்கள் ஏதேனும் ஒரு பாவத்தை செய்துவிட்டால் உடன் இறைவனை நினைவு கூர்ந்து, தாங்கள் செய்த பாவத்திற்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருவார்கள்.தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்த பிறகும் அதே பாவத்தில் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று இறைவன் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இறையச்சவாதி என்று நம்மை நாம் சொல்­க் கொள்வதாக இருந்தால் இந்த பண்பும் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.இன்று எத்தனையோ தீமைகளை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.அவைகள் யாவும் தீமைகள் என்று தெரிந்த பிறகும் அவைகளை விட்டொழிக்காமல் அதிலேயே பழக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம்.அவைகளை அன்றாட வழக்கமாக ஆக்கியிருக்கின்றோம் நம்முடைய நிலை இது வெனில் நாம் எப்படி உண்மையான இறையச்சவாதிகளாக ஆக முடியும்? 

தவறு என்று தெரிந்த பிறகும் அதில் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவது போல நாம் செய்யும் அனைத்து தீமைகளுக்காகவும் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதுடன் அவற்றி­ருந்து முற்றாக விலகுவதே நமக்கு நன்மை பயக்கும் என்பதை அறிவோமாக. சொர்க்கத்திற்கு தகுதியுள்ளவர்களாக நம்மை நாம் ஆக்கி கொள்வோமாக.

அன்பளிப்பு - துபாய் tntj 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger