இயேசு இறை மகனா - தொடர் 9

தந்தையின்றிப் பிறந்தால் கடவுளா?

"இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்'' எனக் கிறித்தவர்கள் காரணம் காட்டுகின்றனர். இந்த வாதமும் அறிவுடையோர் ஏற்கக் கூடிய வாதமன்று. இயேசுக்குத் தந்தையில்லை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். தந்தையின்றிப் பிறந்தார் என்பதில், தந்தையின்றி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து அவரைக் கடவுளாக்க முயற்சிக்கும் கிறித்தவர்கள், பிறந்தார் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையே அது ஏன்?

பல ஆண்டுகள் இல்லாமல் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் அவர் தோன்றியுள்ளார் என்பது தானே பிறந்தார் என்பதன் பொருள். "பல ஆண்டு காலம் இல்லாமலிருந்தார்'' என்பது கடவுளுக்குப் பொருந்தக் கூடியது தானா? பல ஆண்டுகள் இல்லாமலிருந்தவர் கடவுளாக முடியுமா? கடவுள் பல ஆண்டுகள் இல்லாமல் இருந்தால் உலகம் என்னவாகும்? தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் - மனிதர் தாம் - என்பதை நன்கு விளக்கவில்லையா?

"தந்தையின்றிப் பிறந்தார்" என்ற கூற்றில் "தந்தையின்றி" என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரிய வருமே! "தாயின்றிப் பிறக்கவில்லை'' என்ற கருத்தையே "தந்தையின்றிப் பிறந்தார் என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது. "கடவுள் என்பவனுக்குத் தந்தை தான் இருக்கக் கூடாது; தாய் இருக்கலாம்'' என்பது தான் கடவுளுக்குரிய இலக்கணமா? அப்படியானால் பரமபிதாவுக்கு - கர்த்தருக்கு ஒரு தாய் இருக்கிறார் என்று கிறித்தவர்கள் கூறப் போகிறார்களா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தந்தையில்லாமலிருப்பதால் மட்டும் ஒருவர் கடவுளாகி விட முடியாது என்பதே உண்மையாகும். பைபிளே இதை ஒப்புக் கொள்கிறது. இது பற்றி கடவுளின் இலக்கணம் என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. இயேசு எப்படி தந்தை இல்லாமல் பிறந்தாரோ அது போல் இன்னும் பலர் தந்தையில்லாமல் பிறந்ததாக பைபிள் கூறுகிறது. அவர்கள் எல்லாம் ஏன் இறைவனின் மகன்களாக ஆக்கப்படாதது ஏன் என்று கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

தந்தையில்லாதவர் பலர்:
"ஏனோஸ் சேத்தின் குமாரன். சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் தேவனாலே உண்டானவன் என்று பைபிள் கூறுகிறது." - (லூக்கா 3:38

தந்தையின்றிப் பிறந்ததால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் தந்தையுமின்றி, தாயுமின்றி, கருவறை வாசமுமின்றி, தேவனாலே நேரடியாக உண்டாக்கப்பட்ட ஆதாமுக்குக் கடவுளாக அதிகத் தகுதி இருக்கிறதல்லவா? அவரை ஏன் கடவுள் என்றோ, கடவுளின் மைந்தன் என்றோ கிறித்தவர்கள் நம்பவுது இல்லை? இயேசுவை விடப் பெரிய கடவுள் என்று சொல்லப்படுமளவுக்கு ஆதாமிடம் நியாயமிருந்தும் கூட இயேசுவுக்குச் சமமான கடவுளாகக் கூட ஆதாமை ஏற்காமலிருப்பது கிறித்தவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றவில்லையா?

"ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி? " - (யோபு 25:4)
ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்த யாரும் சுத்தமாக இருக்க முடியாது என்று பைபிள் கூறுகிறது. "இயேசு ஒரு ஸ்திரீயிடம் பிறந்துள்ளதால் அவரும் தூயவரல்லர்'' என்பது தானே இவ்வசனத்தின் கருத்து. ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தாயும் தந்தையும் இல்லை. ஆனால் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தாயின் கருவறையில் வாசம் செய்யும் இந்தப் பலவீனம் இல்லை. 

"அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப் பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர், தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்." - (ஆதியாகமம் 2:21,22)

மனிதர் அனைவரிடமும் காணப்படுகின்ற ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் என்ற நிலை இவ்விருவருக்கு மட்டுமே இல்லை. இயேசு ஸ்திரீயிடம் பிறந்ததால் அவர் சுத்தமில்லாதவர் என்று பைபிள் கூறுகிறது. சுத்தமில்லாதவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? சுத்தமில்லாதவரைத் தான் இறைவன் தனது புதல்வனாக எடுத்துக் கொள்வானா? பைபிளின் போதனைக்கே முரணாகக் கிறித்தவர்கள் நடக்கிறார்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?

மெல்கிதேசேக்குக்கு தாயும் தந்தையும் இல்லை:
மெல்கிசேதேக்கு என்பவனைப் பற்றி பைபிள் கூறுகிறது. இவன் கடவுளாகக் கருதப்பட இயேசுவை விட அதிகம் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.
"இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர் கொண்டு போய் அவனை ஆசீர்வதித்தான்." - (எபிரேயர் 7:1)
ஆபிரகாமுக்கே ஆசி வழங்கக் கூடிய தகுதி பெற்ற இவன் யார்? எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்? இதோ பைபிள் கூறுகிறது,

"இவன் தகப்பனும், தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்." - (எபிரேயர் 7:3)
"இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள். கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாம் முதலாய்க் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசம பாகம் கொடுத்தான்." - (எபிரேயர் 7:4)

தகப்பன் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக இயேசு இறைவனுக்கு மகனாகி விட்டார் என்று நம்புகின்ற கிறித்தவர்களால்
* தகப்பனுமில்லாத
* தாயுமில்லாத
* வம்ச வரலாறு கூட இல்லாத
* ஆரம்பமும், முடிவும் இல்லாத
* என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய
* "எவ்வளவு பெரியவன் பாருங்கள்'' என பைபிளே வியக்கக் கூடிய

மெல்கிசேதேக்கு என்பவன் கடவுளாகக் கருத முடியவில்லையே! அது ஏன்?
பைபிளில் கூறப்படும் எவரையாவது கடவுள் என்று நம்ப வேண்டுமானால் - அது கடவுளால் அனுமதிக்கப்பட்டதாக இருக்குமானால் - அதற்குரிய முழுத் தகுதியும் மெல்கிசேதேக்குவிடம் இருக்கிறது. இவனுடன் ஒப்பிடும் போது இயேசு எத்தனையோ மடங்கு குறைந்த தகுதியுடையவராகத் தென்படுகிறார். ஆனாலும் இவைனக் கூட கடவுளின் மகன் எனக் கிறித்தவர்கள் கூறுவதில்லை. இவன் பெயர் கூட கிறித்தவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பது தனி விஷயம்.

கடவுளுக்கு மகனிருக்க முடியாது. எவரும் கடவுளின் தன்மையைப் பெற முடியாது. கடவுள் கடவுள் தான். மனிதன் மனிதன் தான் என்று கிறித்தவர்களின் மனசாட்சி தீர்ப்பு வழங்குவதால் ஆதாம், ஏவாள், மெல்கிசேதேக்கு ஆகியோரைக் கடவுளர்கள் என்று கிறித்தவர்கள் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் இயேசு விஷயத்தில் மட்டும் தங்கள் மத குருமார்கள் போதித்த தவறான போதனைகளின் காரணமாகச் சிந்திக்க மறுக்கிறார்கள்!

பைபிளின் மீது கிறித்தவர்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்குமானால் இம்மூவரையும் பெரிய கடவுளர்களாகவும், இயேசுவை அவர்களை விட மிகச் சிறிய கடவுளாகவும் தான் ஏற்க வேண்டும். அல்லது கர்த்தராகிய ஒருவரைத் தவிர வேறு எவரும் கடவுளாக முடியாது என்று நம்ப வேண்டும். இதை விடுத்து இயேசுவையும், இம்மூவரையும் பிரித்துப் பார்த்தால் பைபிள் மீது கிறித்தவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது.

                                                                                       இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger