புதுவை: புதுவையில் மனநலம் குன்றிய இளம் பெண் வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.
புதுவை முத்திரையர் பாளையம் அணைக்கரை வீதி கோவிந்தன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான பரசுராமனின் மகள் இளைய பாரதி. இவர் சற்று மனநலம் குன்றியவர். நேற்று வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருக்க கண் தெரியாத தாத்தாவுடன் இளைய பாரதி வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேர்ந்த குமார் என்பவர் தனது நண்பருடன் வந்து இளைய பாரதியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவர்களுக்கு இளையபாரதி குடிக்க தண்ணீர் கொடுத்த போது வீட்டில் ஆள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குமார் மற்றும் அவரது நண்பர் இருவரும் இளைய பாரதியை கொடூரமாக வன்புணர்ந்துள்ளனர்..
இதில் திணறிய இளைய பாரதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பிணத்தை மறைக்க திட்டமிட்டனர். இளைய பாரதியின் வீட்டின் பின்புறம் இருந்த தென்னந்தோப்பு அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் குழி தோண்டி புதைத்தனர்.
மாலை 3:00 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய பாட்டி உள்ளிட்டோர் இளைய பாரதியை காணாமல் தேடினர். அப்போது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் குப்பைக்கு இடையே இளையபாரதி அணிந்திருந்த உடை தெரிந்தது.
இதனையடுத்து அங்கு தோண்டி பார்த்தனர். அங்கு இளைய பாரதி புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டு குமாரை கைது செய்து விசாரித்தபோது குமார் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். பின்னர் உரிய முறையில் விசாரணை செய்த போது தனது நண்பருடன் சேர்ந்து இளைய பாரதியை வன்புணர்ந்த போது இறந்து விட்டதால் புதைத்ததாக உணமையை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து குமார் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தலைமறைவாக உள்ள நண்பரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment