தமிழகம் முழுவதும் 8,222 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணயம் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பள்ளிகளுக்கு சராசரியாக 10 சதவீத கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் மே மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப்பள்ளிகளுக்கான புதிய கட்டண விகிதத்தை நிர்ணயிக்கும் பணிகள் கடந்த ஜனவரிமுதல் நடைபெற்று வருகிறது.
அனைத்துப் பள்ளிகளிடமும் அவர்களுக்கான கூடுதல் செலவு, ஆசிரியர் சம்பளவிகிதம் போன்றவை தொடர்பாக கேள்விகள் அடங்கிய விண்ணப்பங்கள் வாயிலாகவும், நேரிலும் கருத்து கேட்கப்பட்டது.
பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்பட்டன. இதையடுத்து,முதற்கட்டமாக 8,222 தனியார் பள்ளிகளுக்கான கட்டண விகிதத்தை கட்டணநிர்ணயக் குழு வெளியிட்டுள்ளது.
2013 -2015 கல்வியாண்டு வரை பெரும்பாலான பள்ளிகளுக்கு 10 சதவீதம் வரை கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் எஸ்.ஆர். சிங்காரவேலு நிருபர்களிடம் நேற்று கூறியது:
தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விகிதம், கற்பித்தலுக்கு ஆகும் செலவினங்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. இதுதொடர்பாக பள்ளிகள் சமர்ப்பித்த கணக்குகளின் உண்மைத்தன்மையும் ஆராயப்பட்டது. அதன்பிறகு அனைத்துப் பள்ளிகளுக்கும் சராசரியாக 10 சதவீதம் வரை கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2015-16 கல்வியாண்டில் மேலும் 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு முன்னிலையில் ஆஜராகவில்லை. எனவே, இந்தப் பள்ளிகளுக்கு மீண்டும் ஆஜராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் தொடர்பாக ஆணைபிறப்பிக்கவில்லை. ஆனால், அங்கீகாரம் கிடைத்ததும் அந்தப் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கான கட்டணமும் விரைவில் நிர்ணயிக்கப்பட்டுவிடும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
|
Post a Comment