சிரியாவில் நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்துக்குள் இது இட்டுச்சென்றுள்ளது.
நரம்பு மண்டலத்தை பாதிக்கவல்ல சரின் வாயுவைக் கொண்டு சில தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றைம்பது பேர் வரை இறந்திருக்கிறார்கள் என தமக்கு இதுவரை கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலக அறிக்கை கூறுகிறது.
சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக சண்டையிடுபவர்கள் அப்படியான ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தீர்மானித்துள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் எந்த வடிவத்தில் அந்த உதவிகள் அமையும் என அவர் குறிப்பிடவில்லை.
இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அதிபர் அஸ்ஸாத்தின் அரசாங்கம் தொடர்ந்து மறுத்துவருகிறது.
சிரியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்துவருகின்ற சண்டைகளில் குறைந்தது 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது
Post a Comment