மைதுகுரி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 9 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான்கே நாளில் நடந்த 2–வது தாக்குதலால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் மைதுகுரி என்ற நகரம் உள்ளது. இங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் இன்று மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் திபுதிபுவென நுழைந்தார்கள். அவர்கள் கண்மூடித்தனமான வகையில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
பள்ளிக்கூட வளாகத்திற்கு வந்து கொண்டிருந்த மாணவர்கள், தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் இதைக்கண்டு பதற்றம் அடைந்தனர். உயிர் பிழைக்கும் தவிப்பில் அவர்கள் வகுப்பு அறைகளுக்குள் நுழைந்து கதவு, ஜன்னல்களை பூட்டினர்.
9 மாணவர்கள் பலி
இருப்பினும் இந்த சம்பவத்தில் 9 மாணவர்கள் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்கள். சம்பவத்தை நேரில் கண்ட இப்ராகிம் முகமது என்ற மாணவர் கூறுகையில், ‘‘நான் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்து, இலக்கு இல்லாமல் சுட்டார்கள். தேர்வு எழுதிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் பலியானதை நேரில் பார்த்தேன். பள்ளிக்கூட வளாகத்தில் நுழைந்து கொண்டிருந்த 4 மாணவர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்ததையும் பார்த்தேன்’’ என்றார்.
தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை பிணவறை உதவியாளர் அல்ஹாஜி பாபா என்பவர், பிணவறைக்கு 9 மாணவர்களின் உடல்கள் வந்து சேர்ந்துவிட்டதை உறுதி செய்தார்.
2–வது சம்பவம்
‘போக்கோ ஹராம்’ என்று அழைக்கப்படுகிற தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இவர்கள் மேற்கத்திய முறை கல்விக்கு எதிரானவர்கள். எண்ணெய் வளம் மிக்க நைஜீரியாவில் இந்த தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தீவிரவாதிகள் டமாதுரு என்ற நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடத்திய தாக்குதலில் 7 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி தீவிரவாதிகள் நான்கே நாளில் அடுத்தடுத்து பள்ளிக்கூடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பது நைஜீரிய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment