ஆப்கானிஸ்தானில் முக்கிய அரசியல்வாதி ஒருவரை இலக்குவைத்து தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கான பொறுப்பினை அந்நாட்டுப் படையினரிடமே நேட்டோ ஒப்படைக்கும் அதிகாரபூர்வ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடக்கின்ற நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது துணை அதிபரும் ஹசாரா இனச்சிறுபான்மைச் சமூகத்தின் தலைவருமான ஹாஜி மொஹமட் மொஹாகெக் பயணித்த வாகனத் தொடரணியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஆனால் அவர் எவ்வித ஆபத்துமின்றி தப்பிவிட்டார்.
கடைசி 95 மாவட்டங்களின் பாதுகாப்புப் பொறுப்பை நேட்டோ படையினர் அந்நாட்டு அரசிடம் கையளிக்கின்றனர்.
காபூலில் நடந்த இந்த நிகழ்வில் அதிபர் ஹமீட் கர்சாயும் நேட்டோ தலைமைச் செயலர் ஆண்டர்ஸ் ஃபாக் ராஸ்முஸ்ஸனும் கலந்துகொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டின் இறுதிக்குள் வெளிநாட்டு இராணுவப் படைகள் அனைத்தும் அங்கிருந்து முழுமையாக வெளியேறவுள்ளன. சுமார் மூன்றரை லட்சம் பேர் கொண்ட ஆப்கன் தேசிய இராணுவத்திடம் நாட்டின் பாதுகாப்புக்கான பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
தாலிபன்களின் பிறப்பிடமான கந்தஹார் மாகாணத்தில் 13 மாவட்டங்களும் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கிளர்ச்சி மிக்க மற்றபல மாவட்டங்களும் கடைசியாக ஒப்படைக்கப்படும் பிரதேசங்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment