எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இறைவனால் ஏற்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பிரார்த்த்னை ஏற்கப்படும்; மற்ற நேரங்களில் ஏற்கப்படாது என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள சந்தர்ப்பங்கள் பற்றி ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.
இரவின் கடைசி நேரம்
இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.
இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494
ஸஜ்தாவின் போது..
அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 744
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை
நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட, அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 4912
ஜும்ஆ தொழுகையின் நேரம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், "ஜுமுஆ நாüல் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தி னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி 935
திங்கள் மற்றும் வியாழக்கிழமை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட் கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்;தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்'' என்று கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் :முஸ்லிம் 5014
பயணங்களின் போது . . .
பயணிகளின் துஆவுக்கு இறைவனின் தனிக்கவனம் இருக்கின்றது என்பதைப் பின் வரும் செய்தியிலிருந்து அறியலாம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்'' என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா' என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1844
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் யாருடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை விவரிக்கின்றார்கள். அதை சாதாரணமாக ஹராமில் உழல்பவனின் துஆ ஏற்கப்படாது என்று கூறினாலே போதுமானது. ஆனால் ஒரு பயணியின் துஆவைக் குறிப்பிட்டு அவன் ஹராமில் ஈடுபடுகிறான் என்பதினால் அவனது பிரார்த்தனை நிராகரிக்கப்படும் என்று கூறுவதிலிருந்து பயணிகளின் துஆ, இறைவனின் நெருக்கத்தைப் பெறுகிற துஆ என்பதை சந்தேமற அறியலாம். அப்படிப்பட்ட துஆக்கூட ஹராமில் ஈடுபடுவதினால் நிராகரிக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது என்று கவலையோடு தெரிவிக்கின்றார்கள். எனவே பயணத்தின் போது செய்யப்படுகின்ற துஆக்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதினால் அதிகமதிகம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
நன்றி - onlinepj
Post a Comment