இது மறுமையில் அடையாளங்களில் ஒன்றா? அல்லது நடந்து முடிந்து விட்டதா?


மார்ச் மாத ஏகத்துவம் இதழில், அதீ இப்னு ஹாத்தம் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில், 'தங்கம், வெள்ளி பெருகி பெறுவோரற்ற நிலை ஏற்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை இனிமேல் தான் ஏற்படுமா? உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்பட்டு இந்த நிலை ஏற்பட்டதாக எனக்குப் பாடம் நடத்தப்பட்டது. எனவே இது மறுமையில் அடையாளங்களில் ஒன்றா? அல்லது நடந்து முடிந்து விட்டதா? - க.மு. சித்தி பர்ஹானா ஆலிமா சித்தீக்கியா, ஆசிரியை, மஹ்தி தவ்ஹீத் கல்லூரி, அதிராம்பட்டிணம்

செல்வம் பெருகி, அதை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும் என்று பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. இவை அனைத்துமே இறுதி நாளின் அடையாளங்களாகத் தான் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பüக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்தஅளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்' (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3448


'இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் மாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள்
வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும் கல்வி கைப்பற்றப்பட்டு நில நடுக்கங்கள் அதிகமாகும். காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமை நாள் வராது.

மேலும் உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் வராது. அப்போது செல்வன், 'தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்க மாட்டாரா?' என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும் போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார்.

மேலும் மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக் கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது.

சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும் போது அதைக் காணும் மக்கள் அனைவரும் இறை நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அதற்கு முன்பே இறை நம்பிக்கை கொள்ளாத அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும்வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள். அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள் அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போது தான் திரும்பியிருப்பார். அதை அவர் அருந்தியிருக்கவும்மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போது தான் செப்பனிட்டிருப்பார். அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார். ஆனால் இன்னும் அதைச் சாப்பிட்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்து விடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவு நாள் ஏற்படும்)'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 7121


செல்வத்தை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை உலகில் இது வரை ஏற்படவேயில்லை. உமர் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக் காலத்தில் செல்வம் பெருகி இருந்திருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் அது மிகப் பெரிய சாதனையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் இதை கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்றாகவும், ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் காலத்தில் தான் அந்த நிலை ஏற்படும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் உமர் பின் அப்துல் அஜீஸ் காலத்தில் இந்நிலை ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

நன்றி - tntjdubai 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger