மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்


குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. 'மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு  உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்'' என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம்.

மத்ஹபுகள் மீது எந்த அளவுக்கு வெறியூட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதற்கு மத்ஹபு நூல்கள் தரும் வாக்குமூலத்தைப் பாருங்கள்!

யார் தமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே அபூஹனீபாவை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் அஞ்சத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் என்று முஸாபிர் என்பார் கூறியுள்ளார். நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 48

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்று சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் எல்லாம் தங்களின் நிலை என்னவாகுமோ? தங்களிடம் முனாஃபிக் தனம் இருக்குமோ என்று அஞ்சியுள்ளனர். தங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் நபி (ஸல்) அவர்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொண்டதில்லை.

ஆனால் அபூஹனீபாவைக் கேடயமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதற்கும் அஞ்சத் தேவையில்லையாம். மத்ஹபு வெறி இவர்களை எங்கே கொண்டு செல்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

அபூஹனீபா நல்லவராக இருக்கலாம்; அவருக்கு அல்லாஹ் மறுமையில் நல்ல அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கிறோம். ஆனால் 'அபூஹனீஃபா, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்; அவர் இறைவனின் அன்பைப் பெற்று விட்டார்'' என்று உறுதி கூற முடியுமா?

மறுமையில் அவரைப் பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன் அந்தத் தீர்ப்பை நாம் வழங்க முடியுமா?

அபூஹனீஃபா அவர்களின் நிலையே என்னவென்று தெரியாத போது, அல்லாஹ்வுக்கும் தமக்குமிடையே அவரைக் கேடயமாகப் பயன்படுத்துவோம் என்று கூறுவோர் கொஞ்சமாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?

இவர்களின் மத்ஹபு வெறிக்கு உதாரணமாக, அதே நூலில் காணப்படும் இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்.

மறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும், அபூஹனீபாவின் மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும்.

நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் இவர்களுக்குப் போதாதாம். அத்துடன் அபூஹனீபாவின் மத்ஹபையும் நம்பியாக வேண்டுமாம். நபித்தோழர்களில் யாரும் இந்த மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை மட்டுமே மறுமைக்காகத் தயாரித்து வைத்திருந்தனர். அவர்களெல்லாம் இறைவனுடைய திருப்தியைப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது இந்த நூல்.

முஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்துடன் இன்னொரு மார்க்கத்தையும் கற்பனை செய்வதன் மூலம் அபூஹனீபாவை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாக ஆக்கி விட்டனர்.

இத்துடன் நிற்கவில்லை! அல்லாஹ்வுடைய தூதரை விடவும் அபூஹனீபாவை உயர்வானவராகச் சித்தரித்துக் காட்டும் திமிரான வாசகங்களையும் மத்ஹபு நூற்களில் நாம் காணலாம்.

'ஆதம் (அலை) என் மூலம் பெருமையடைந்தார். நான் எனது சமுதாயத்தில் தோன்றும் ஒரு மனிதர் மூலம் பெருமையடைவேன். அவரது இயற்பெயர் நுஃமான். அவரது சிறப்புப் பெயர் அபூஹனீபா. அவர் எனது சமுதாயத்தின் விளக்காவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.

இதில் அடங்கியுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.


'என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 108, 1291

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, நபியவர்கள் மீது இட்டுக்கட்டும் துணிவை இந்த மத்ஹபு வெறி ஏற்படுத்தி விட்டது.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் அதை அறிவித்தவர் யார்? அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா? இது இடம் பெற்றுள்ள ஹதீஸ் நூல் எது? இப்படி எந்த விபரமும் இல்லை.

இப்னுல் ஜவ்ஸீ போன்றவர்கள், 'இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி''என்று தக்க காரணத்துடன் இனம் காட்டியுள்ளனர்.

'இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுவது மத்ஹபு வெறியாகும்'' என்று துர்ருல் முக்தாரில் தொடர்ந்து கூறப் பட்டுள்ளது. மத்ஹபு வெறியில் ஊறிப் போனவர்கள், அதைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டுவது கொடுமையிலும் கொடுமை!

அறிவிப்பாளர் தொடரை விட்டு விடுவோம். இதன் கருத்தைச் சிந்தித்தால் கூட இது நபியவர்களை மட்டம் தட்டுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை அறிய முடியும்.

ஆதம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடைவதற்குரிய எல்லாத் தகுதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு என்று கூறலாம். ஆனால் அபூஹனீபா மூலமாக நபி (ஸல்) அவர்கள் பெருமையடைவார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறப்புக்குரியவரா?

இந்த மத்ஹபை ஏற்றால், இந்த நூலில் எழுதப்பட்ட சட்டங்களை நம்பினால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று ஈமான் கொண்டதாக ஆகாதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபை உருவாக்கியவர்களின் நோக்கம் இது தான். இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சூழ்ச்சியே மத்ஹபுகள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று போதிக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டதால் தான் இதைப் பயின்ற மவ்லவிமார்கள், மத்ஹபு வெறியிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். தெளிவான நபிவழியை எடுத்துக் காட்டிய பின்னரும் அதற்கு முரணான மத்ஹபுச் சட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

ஈமானுக்கு வேட்டு வைக்கும் மத்ஹபு மாயையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
                                        -  நன்றி சகோதரர் அபு முஹம்மத்              
நன்றி - உண்மைகள்                 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger