வளைகாப்பு விருந்து நடத்தலாமா

கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட வளைகாப்பு என்ற பெயரில் விருந்து வைபவம் நடத்தலாமா?

இது குறித்து வீடியோ வடிவில் பதில் முன்னரே வெளியிடப்பட்டுள்ளது
பிறருக்கு விருந்தளிக்கும் செயலை இஸ்லாம் நன்மையான காரியமாக, அழகிய பண்பாடாக குறிப்பிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும்  மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6018
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : புகாரி 12
நபியவர்கள் நபித்துவத்திற்கு முன்பும், பின்பும் விருந்தளிக்கும் இந்தப் பண்பாட்டை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
முதன் முதலாக இறைவனின் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) செய்தியைக் கொண்டு வந்த போது நபியவர்கள் பயந்து போனார்கள். அந்நேரத்தில் அவர்களது மனைவி கதீஜா (ரலி) ஆறுதல் கூறும் போது நபியிடம் இருந்த விருந்தோம்பல் எனும் பண்பைக் குறிப்பிட்டு உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது என்று ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 3
பொதுவாக ஒரு முஸ்லிம் தான் விரும்பும் நேரத்தில் காரணம் எதுவுமில்லாமல் விருந்தளிக்கலாம். இது மார்க்கத்தில் சிறந்த செயலாக சொல்லப்பட்டுள்ளது.
இது போன்ற விருந்துகளை ஒருவர் விரும்பும் நேரத்தில் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் அது மற்றவர்களுக்கு எந்தச் சிரமத்தையும் தராது.
ஆனால் வீட்டில் நடக்கும் விஷேசங்களைக் காரணம் காட்டி விருந்தளிக்க ஆரம்பித்தால் அது போன்ற விஷேசங்களைச் சந்திக்கும் அனைவரும் அது போல் கொடுக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தம் ஏற்படும். இதைப் பார்த்து வசதியற்றவர்களும் கடன் வாங்கி சிரமப்பட்டு விருந்தளிக்கும் நிலை ஏற்படும். நாம் விருந்தளிக்காவிட்டால் அதை மக்கள் கேவலமாக கருதுவார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காகவே விருந்து அளிக்கும் அவசியம் ஏற்படும்.
நபியவர்களுடைய வழிகாட்டுதலில் இல்லாத பல புதிய விருந்துகள் மக்களிடையில் தோன்றி அவை இன்று சமூக நிர்ப்பந்தமாக உருவெடுத்து பொருளாதார ரீதியாக மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன.
இறப்பு விருந்து,
 ஹஜ் பயண விருந்து,
 திருமணத்தை முன்னிட்டு அளிக்கப்படும் பெண் வீட்டு விருந்துகள்,
திருமண நிச்சயதார்த்த விருந்து
பெயர் சூட்டும் விருந்து
பாத்திஹாக்களின் பெயரால் பல விருந்துகள்
 கத்னா விருந்து,
 பெண் சடங்கு விருந்து,
 வளைகாப்பு விருந்து
போன்ற பல விருந்துகள் இன்று சமூகத்தால் கட்டாயக் கடமையாகப் பார்க்கப்பட்டு, அளிக்கப்பட்டும் வருகிறது. வணக்க வழிபாடுகளில் கூட கவனம் செலுத்தாத முஸ்லிம்கள் இந்த விருந்துகளை ஏதோ மார்க்க்க் கடமை போன்று, கருதி  கடன் பட்டு, பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.
நமது சமுதாயத்தில் ஒரு பெண் கர்ப்பமாவதை முன்னிறுத்தி பல விருந்துகள் மணமகன் வீட்டாரால் பெண் வீட்டார் தலையில் சுமத்தப்படுகிறது. முதல் மாதம் ஒரு விருந்து, மூன்றாம் மாதம் மற்றொரு விருந்து, ஏழாம் மாதம் அடுத்த விருந்து என அடுத்தடுத்து பல விருந்துகள் அளித்தே பெண் வீட்டார் பிச்சைக்காரர்களாகும் அவலம் நடந்தேறுகிறது.
இது போன்று மார்க்கம் காட்டித்தராத எந்த விருந்துகள் மக்களிடையில் கட்டாயக் கடமையாகப் பார்க்கப்பட்டு சடங்காக நிறைவேற்றப்படுகிறதோ அவற்றை சமுதாய நலன் கருதி, அதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தவிர்த்துக் கொள்வது நமது கடமை. இதுவே நபிவழியாகும்.
வசதி படைத்தவர்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தளிக்க ஆசைப்படுவார்கள். உறவினர்களும் நண்பர்களும் இவர்களிடம் விருந்துகளை எதிர்பார்ப்பார்கள். அது நியாயமான ஆசை தான். நியாயமான எதிர்பார்ப்பு தான். இவர்கள் திருமணம் பெயர் சூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளின் பெயரால் ஒரு காரணமும் இல்லாமல் அன்பை வெளிப்படுத்த விருந்து அளிக்கிறேன் என்று கூறி விருந்தளிக்கலாம். இது போன்ற வகையில் செல்வந்தர்கள் விருந்தளித்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் தவ்ஹீத்வாதிகள் இது போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்துகளை ஏன் அளிப்பதில்லை என்று புரியவில்லை.
ஆனால் வளைகாப்பு என்ற பெயரில் விருந்தளித்தால் 90 சதவிகிதம் பெண்கள் கர்ப்பமவார்கள். அவர்கள் அனைவரும் இது போல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். மாப்பிள்ளை வீட்டார் கவுரவ பிச்சையாக இது போல் விருந்துகளைக் கேட்பார்கள்.
எனவே தான் அதிக செலவில்லாமல் எளிமையாக மாப்பிள்ளையின் சார்பில் ஒரு திருமண விருந்து
குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட பெண்குழந்தை என்றால் ஒரு ஆடு ஆண்குழந்தை என்றால் இரு ஆடுகள் – அதுவும் வசதி இருந்தால் மட்டும்
புதிதாக வீடு கட்டி குடிபோனால் அளிக்கும் விருந்து
ஆகியவை தவிர நிகழ்ச்சிகளின் பெயரால் எந்த விருந்தும் இல்லை
அகீகா விருந்து பற்றி அறிய இந்த லிங்க்கில் உள்ளதை வாசிக்கவும்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger