மருத்துவம் பற்றியோ தாதிச்சேவை பற்றியோ பேசும் போதெல்லாம் எம் நினைவுக்கு வருவது மேற்குலகின் Nighting Girl உம் Otel View மருத்துவமனையும் தான். ஆனால் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனை என்றாலே ஐரோப்பியருக்கு என்னவென்றே தெரியாமலிருந்தது. அதற்கு முன் மருத்துவத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் முஸ்லிம்களே! உண்மையில் இஸ்லாமிய உலகம் அன்று அதன் எல்லாத்துறைகளையும் போல் மருத்துவத்துறையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அளவுக்கு முன்னேறியிருந்தது.
முழு ஐரோப்பாவும் நோயாளியை இறைவனால் சபிக்கப்பட்டவன் என்றும் தீண்டத்தகாதவன் என்றும் ஒதுக்கிய காலத்தில் முஸ்லிம்கள் நோயாளிகளுக்கு தனியறைகள் அமைத்து தனித்தனி தாதிகள் நியமித்து மிக உயர்ந்த மருத்துவ சேவை புரிந்தனர். ஹிஜ்ரி 371 இல் பக்தாதில் அப்துத் தௌலாவால் உருவாக்கப்பட்ட மருத்துவமனையும் ஹிஜ்ரி 549 இல் நூருத்தீனால் டமஸ்கஸில் உருவாக்கப்பட்ட நூரி மருத்துவமனையும் ஹிஜ்ரி 683 இல் ஸைபுத்தீனால் உருவாக்கப்பட்ட மன்சூரி மருத்துவமனையும் முஸ்லிம்களின் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் மிகச்சிலவாகும்.
இஸ்லாமிய உலகில் மருத்துவம் சேவையாகச் செய்யப்பட்டது. பணம் அறவிடுவதற்குப் பதிலாக குணமடைந்து வெளியேறுவோருக்கு பணம் வழங்கப்பட்டது. அப்போது முஸ்லிம்கள் மனித சமத்துவத்தை மருத்துவமனைகளிலும் எடுத்துக்காட்டி மகத்தான சேவை புரிந்தனர்.
இக்கட்டுரை இஸ்லாத்தில் மருத்துவத்துறையின் முக்கியத்துவம் பற்றியும், அதில் பெண்களின் பங்களிப்புப் பற்றியும், குறிப்பாக பெண்கள் தொடர்பான மருத்துவப் பகுதியில் அவர்கள் விஷேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் ஆராய விரும்புகின்றது.
இஸ்லாம் அறப்போரை அனைவர் மீதும் கடமையாக்கியது. அதில் ஆணையோ பெண்ணையோ விதிவிலக்காக்கவில்லை. அல்லாஹ்வின் பாதையில் போராடுவதாக இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு பைஅத் செய்வதில் ஸஹாபாக்களோடு ஸஹாபியாக்களும் கலந்து கொண்டனர். எல்லாப் போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) தனது மனைவியரில் சிலரை அழைத்துச்சென்றதைப் போல ஸஹாபாக்களும் தமது மனைவியரை அழைத்துச் சென்றனர்.
போர்க்களங்களில் இப்பெண்கள் நேரடியாகக் கலந்து கொண்டது ஒரு புறமிருக்க போர்க்களத்தில் மற்றும் பலவிதப் பணிகளையும் மேற்கொண்டனர். உதாரணமாக, போர் வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுதல், கொல்லப்பட்டவர்களையும், காயமுற்றவர்களையும் களத்திலிருந்து அப்புறப்படுத்துதல், போர்க்கருவிகளை எடுத்துக்கொடுத்தல், படையினருக்கு உணவு தயாரித்தல், அடக்கம் செய்யக் குழிதோண்டுதல், கபனிட்டு அடக்கம் செய்தல், போர்வீரர்களுக்கு உற்சாகமூட்டல் என பல அரிய தொண்டாற்றினர்.
போராளிகளில் காயப்படுவோருக்கு நீர்புகட்டுவதும் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதுமே அப்போதைய முதல் தரப்பணிகளாக விளங்கின. போர் நடக்கும் வேளையில் சஹாபா பெண்களில் பலர் வாள்களையும் அம்புகளையும் தூக்கிக் கொண்டு போராட்ட அணிகளில் முதல் வரிசைக்கு வந்து நிற்பர். போரில் காயப்படுவோரை முதலுதவிக் கூடாரங்களுக்குப் பரிமாற்றுவதில் வேகமாகச் செயற்படுவர். இந்த வகையில் ரபீதா அஸ்லமிய்யா இஸ்லாத்தின் முதலாவது பெண்வைத்தியராக அல்லது தாதியாகக் கருதப்படுகின்றார். இப்பெண்ணுக்கு இறைத்தூதர் (ஸல்) கந்தக் யுத்தத்தில் காயப்பட்டவர்களை கவனிப்பதற்காக இன்றைய நடமாடும் மருத்துவ மனையையொத்த பெரிய கூடாரமொன்றையே விஷேடமாக அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ரபீதா (ரழி) அவர்களுக்கு உதவுவதற்காக அவரது தலைமையில் பெண்கள் குழுவென்றும் கடமையில் ஈடுபட்டது.
ஆரம்ப காலங்களில் ஷஹீதானவர்களை அடக்குவதற்கு மதீனாவுக்கே கொண்டுவந்தார்கள். இப்பணியையும் பெண்களே மேற்கொண்டனர். யுத்தகளத்திலேயே ஷஹீதுகளை அடக்குமாறு வஹி இறங்கிய போதும் பெண்களே அப்பணியை மேற்கொண்டனர்.
இமாம் புகாரி அவர்கள் ஜிஹாத் என்ற அத்தியாயத்தில் “போராட்டத்தில் காயப்பட்டோருக்கு பெண்கள் சிகிச்சையளித்தல்’ என்ற தலைப்பில் பல ஹதீஸ்களைப் பதிவுசெய்துள்ளார்.
“றுபைஃ பின்த் முஅவ்விஸ் அறிவிப்பதாவது: நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு போராடிக் கொண்டும் போராளிகளுக்கு நீர் புகட்டிக் கொண்டும் இருந்தோம். அவர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டும் கொல்லப்பட்டவர்களையும் காயப்பட்டவர்களையும் மதீனாவுக்கு இடமாற்றிக் கொண்டும் இருந்தோம்.’’ (ஆதாரம்: புகாரி, பாகம்: 1 இல. 5679)
உம்மு அதிய்யா அவர்கள் ரஸுலுல்லாஹ்வின் காலத்தில் ஏழு யுத்தங்களில் கலந்து கொண்டார். இவர் முஜாகித்களுக்கு உணவு சமைப்பதிலும் அவர்களின் உடமைகளைப் பாதுகாப்பதிலும் நோயுற்றவர்களைக் கவனிப்பதிலும் தாகிப்போருக்குத் தண்ணீர் புகட்டுவதிலும் காயப்பட்டோருக்கு மருந்து கட்டுவதிலும் ஈடுபட்டார். (ஆதாரம்: முஸ்லிம், பாகம்: 2 பக். 105)
ஸைத் பின் ஆஸிம் என்ற ஸஹாபியின் மனைவி உம்முஅம்மாரா (ரழி) தனது கணவர், பிள்ளைகளான அப்துல்லாஹ், ஹபீப் (ரழி) ஆகியோருடன் இறை பாதையில் போராட யுத்தகளம் நோக்கிச் செல்கிறார். அங்கே தனது மகன் அப்துல்லாஹ் கடுமையான காயத்துக்குட்பட்ட போது அவ்விடத்திற்கு விரைந்த உம்மு அம்மாரா (ரழி) தனது மகனுக்கு சிகிச்சையளித்தார்.
ஷிபா பின்த் அப்துல்லாஹ் என்ற பெண்ணிடம் சென்று தனது மனைவிகளான ஹப்ஸா, றுகையா (ரழி) ஆகிய இருவரையும் தேனை எவ்வாறு மருந்தாக உபயோகப்படுத்தலாம் என்பதைக் கற்றுக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
கண்நோய்க்கு சிகிச்சை செய்வதில் ஸைனப் பின்த் அவத் என்ற பெண்மணி பிரபலமானவராகக் காணப்பட்டார். பிற்காலத்தில் மருத்துவத்துறை பாரிய வளர்ச்சி கண்டபோது பெண்கள் சம்பந்தான நோய்களில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களும் கணிசமாகக் காணப்பட்டனர். பெண்கள் குழுவொன்றும் மருத்துவத்துறையில் ஈடுபட்டிருந்தது. அவர்களுள் ஸ்பெயினைச் சேர்ந்த அல் அபீத் என்பவரின் மகளும் சகோதரியும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் பெண்கள் மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்கியதுடன் குறிப்பாக ஸ்பெயின் கலீபா மன்சூரின் குடும்பப் பெண்களுக்கும் மருத்துவம் செய்தனர்.
கெய்ரோ வைத்திய சாலைகளின் தலைமை வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய ஷிஹாபுத்தீன் என்பவரது மகள் தந்தையிடமிருந்து மருத்துவக் கல்வி பெற்று தலைமை வைத்திய அதிகாரியாக தனது தந்தையின் இடத்தைப் பிடித்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பெண்களின் கர்ப்பம், பிரசவம், மகப்பேறு ஆகியவற்றின் போது நிலவும் உடலியக்கம், நோய் அறிகுறிகள் பற்றி விளக்கும் அறிவியலையேயே மகப்பேற்று மருத்துவம் என்கிறோம். கருவளர்ச்சியும் குழந்தை வளர்ச்சியும் மகப்பேற்றுத் துறையுடன் பின்னிப் பிணைந்த கூறுகளாகும்.
மற்றைய எந்த மருத்துவ உதவியையும் விட பேறுகால உதவி உடனடியாகவும், துரிதமாகவும் தேவைப்படுகின்றது. கர்ப்பம், பிரசவம், பிறப்பு ஆகியவற்றின் போது ஏற்படும் சிக்கல்களை முற்காப்பாகத் தடுப்பதுதான் பேறுகால உதவியின் அடிப்படையாகும். இதில் மருத்துவர்களும் தாதிகளும் கட்டுக்கோப்பாக இயங்கும் போதே இது சாத்தியமாகும். மகப்பேற்று மருத்துவம் மருத்துவக் கலையின் மிகத் தொன்மையான ஒன்றாகும். அக்கலை இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. முஸ்லிம்களும், இக்கலையில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்தார்கள் என்பதற்கு, இஸ்லாமிய வரலாற்றில் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல பிரசவ வீடுகளுக்குத் தமது மனைவியரில் சிலரை மகப்பேற்று மருத்துவம் பார்ப்பதற்காக அனுப்பிவைத்துள்ளார்கள். இமாம் இப்னு சுன்னி அவர்கள் இது தொடர்பாக பல அறிவிப்புக்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
பிரசவ வேதனையின் வலியைக் குறைப்பதற்காக “முஅவ்விததைன்’ ஐ ஓதி வயிற்றுப் புறத்தில் தடவுமாறு இறைத்தூதர் உபதேசித்தார்கள். ஆரம்பத்தில் மருத்துவிச்சிப் பணியாக (Mid Wife) இருந்த இது மருத்துவமனை வளர்ச்சியடைந்த போது Labour ward ஆக ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது.
பிரசவத்தின் போதும் பிறந்த பிற்பாடும் இஸ்லாம் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. வயிற்றில் குழந்தை இருக்கும் போது தாய்க்கு உணவளிப்பது பற்றியும் கூறிக் கருவைக் கலைப்பதைச் சட்டரீதியாகத் தடையும் செய்தது. குழந்தையை உரிய காலத்திற்கு முன்னர் குற்றச் செயல் ஒன்றால் யாரும் பிறக்கவைத்து இறப்பின் அதன் நஷ்டஈடு, வாரிசுரிமை பற்றியும் பேசுகின்றது. குழந்தை பிறந்துவிட்டால் பாங்கு சொல்லல், நற்பெயர் சூட்டல், அகீகா கொடுத்தல் போன்ற சட்டங்களையும் கூறியுள்ளது. இப்படி எளிமையான போதனைகளாக அமைந்த வழிகாட்டல்கள்தான் பிற்காலத்தில் ஆராய்ச்சி வடிவம் பெற்று மகப்பேற்று மருத்துவக் கலையாக வளர்ச்சியடைந்தது என்று கூறலாம்.
ஆனால் துரதிஷ்ட வசமாக முஸ்லிம்கள் எல்லாத்துறைகளையும் விட மருத்துவத்துறையிலும் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர். அவர்களிடம் போதியளவு மருத்துவர்கள் இல்லாததைப்போல் மருத்துவ உட்பிரிவுகளிலும் விசேட தேர்ச்சிபெற்றவர்களும் மிக அரிதாகவே காணப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவப் பீடத்திற்குத் தெரிவாகும் சகோதரிகளும் தமக்கேற்ற துறையை (மகப்பேற்றுத் துறை) தெரிவு செய்வதில் தயக்கம் காட்டிவருவதும் கவலைக்கிடமான விடயமாகும்.
இஸ்லாமிய சட்டவாக்கத்தில் பர்ளு ஐனும் பர்ளு கிபாயாவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. பர்ளு ஐன் தனிமனிதப் பொறுப்போடு தொடர்புடையது. பர்ளு கிபாயா சமூகம் சார்ந்த ஒரு பொறுப்பாகும். அதை ஓரிருவர் நிறைவேற்றினால் மாத்திரம் போதாது. மாறாக சமூகத்தின் தேவைக்கேற்ப செய்யப்படுவது கடமையாகும். உதாரணமாக, மனித உயிரை வளர்ப்பதும் அதைக் காப்பதும் இஸ்லாத்திலுள்ள கடமையாகும். அக்கடமையை நிறைவேற்றப் போதியளவு வைத்தியர்களை உருவாக்குவதும் கடமையாகும்.
போதியளவுக்கு சமூகத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியளவு வைத்தியர்களை உருவாக்குவதைப் போன்று அத்துறையில் சிறப்புத் தேர்ச்சிபெற்றவர்களை உருவாக்குவதும் பர்ளு கிபாயாவாகும். இதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “எல்லா முஃமின்களும் போராட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களில் ஒருபிரிவினர் மார்க்கத்தில் ஆழ்ந்து கற்று தனது சமூகத்தவரிடம் சென்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா?!’’ (9:122)
இங்கு எல்லோரும் ஜிஹாதில் இறங்குவதை இஸ்லாம் விரும்பவில்லை. அவர்களில் ஒருபிரிவினர் மார்க்கத்தை ஆழமாகக் கற்க வேண்டும் என்று கூறுகின்றது. எனவே ஒவ்வொரு துறையிலும் விசேடமாகப் படித்து இஸ்லாத்திற்குப் பணிபுரியவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நோக்கமாகும். பெண்களோடு விசேடமாகத் தொடர்புபடக்கூடிய மகப்பேற்று மருத்துவம், பெண்களுக்கு கல்விபுகட்டல், தாதிச் சேவை போன்ற பணிகளின் பால் முழுச்சமூகமுமே தேவையுடையதாக இருக்கும் போது பெண்களே அத்துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுவது வாஜிபாகிறது. இச்சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணை அவளைப் போன்ற இன்னொரு பெண்ணே அணுகிச் சிகிச்சையளிக்க வேண்டுமே ஒழிய ஆண்களல்ல. சில சூழ்நிலைகளில் ஆணின் தேவையைப் பெறுவது நிர்ப்பந்தமாக இருக்கலாம். ஆனால் அதுவே அடிப்படை விதியாக அமையாது.
இன்றைய மருத்துவ உலகம் ஆன்மீகத்தை இழந்துவருகின்றது. அங்கு மதச்சார்பற்ற சிந்தனைகள் வலுத்துவிட்டதால் வைதீகக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க விழுமியங்களும் படிப்படியாக மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்ணை வெற்றுடம்பாக மட்டும் பார்க்கும் பார்வையே அங்கே மேலோங்கியிருக்கின்றது. அவ்வுடம்பில் இறைவனின் ஆன்மாவும் இயங்குவது மேற்குலகின் மருத்துவக் கண்களுக்கு இன்றும் புலப்படவில்லை. எனவே மருத்துவத்துறையைக் கற்கும் ஒரு முஸ்லிம் சகோதரி இன்றைய மருத்துவ உலகின் போக்கையும் தனது பணியையும் சரிவரப் புரிந்து கொள்வது அவசியமாகும். தார்மீகப் பெறுமானங்களை இழந்து முதலாளித்துவப் பண்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மருத்துவத்துறையை இஸ்லாமிய மயப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. துறை சார்ந்த பிரிப்பினால் அறம் சார்ந்த நெருக்கடிகளும் வீழ்ச்சிகளும் உள்ள நிலையில் இஸ்லாத்தின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை கொண்ட மருத்துவம் படிக்கும் எந்த முஸ்லிம் சகோதரியும் வாழாதிருக்கமாட்டாள்! அவள் தனது சமூகத்தின் தேவை உணர்ந்து செயற்படுபவளாகவே இருப்பாள்.
ஆதாரக் குறிப்புகள்
1. முஸ்தபா அஸ் ஸிபாஈ, மின் ரவாயஃ ஹழாரத்தினா
2. கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, பதாவா முஆஸிரா, பாகம் 2
அல்-ஷிபா, ஜுலை 1998
நன்றி - சகோதரர் - இத்ரிஸ்
Post a Comment