மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்...

ஈமானின் ஃபர்ளுகளில் ஒன்று மறுமை நாளை நம்புவது. இன்று நாம் வாழ்கின்ற உலகம் ஓரு சோதனைக் கூடம், இது நிரந்தரம் அல்ல. இந்த உலகம் ஓரு நாள் அழிக்கப்படும். பின் மறுமை நாள் என்று ஒன்று உண்டு. அதில் நாம் இந்த உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றார் போல் இறைவன் தீர்ப்பு வழங்குவான். நன்மை தட்டு கனத்தவர்களுக்கு சுவர்க்கமும், தீமைத்தட்டு கனத்தவர்களுக்கு நரகமும் வல்ல இறைவனால் ச
ித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மறுமை நாளின் வாழ்க்கையே நிரந்தரமானது. சுவர்க்க வாதிகளும், நரக வாதிகளும் அதில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டால்தான் நாம் ஈமானில் பரிபூரணப்பட்டவர்கள் ஆவோம். இன்று மக்களிடத்தில் நன்மையை ஏவினாலோ அல்லது தீயசெயல் ஒன்றை தவிர்க்கச் செய்தாலோ எளிதாக அவர்கள் நாவிலிருந்து உதிக்கும் சொல்..
பின்னால் பார்த்துக் கொள்ளலாம் பாய்! என்பது தான்.

மறுமை நாள் வருவதற்கு இன்னும் பல 100 ஆண்டுகள் மீதமிருக்கிறதா? அல்லது 100 ஆண்டுகள் வாழ உத்திரவாதம் ஏதும் பெற்றிருக்கின்றோமா?
அல்லாஹ் தனது திருமறையில் மறுமையின் காரியம் இமை மூடித் திறக்கும் நேரத்திற்குள் அல்லது அதைவிட சமீபமாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையோன். (அல்குர்ஆன் - 16:77)


மேலும் மறுமை நாளின் நெருக்கத்தைப் பற்றி மாநபி (ஸல்) அவர்கள் கூறும் போது,


நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம் என்று தனது சுட்டு விரலையும, நடு விரலையும் இணைத்துக் காட்டி கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

நன்மையைப் புறக்கணித்து தீயச் செயலில் ஆர்வங்காட்டிக் கொண்டிருக்கும் தோழர்களே! மறுமை நாள் வெகு தொலைவில் இல்லை! 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெகு நெருக்கத்தில் உள்ளதென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நாமோ 1400 ஆண்டுகளையும் கடந்து வந்து விட்டோம். நாம் நன்மையை செய்ய முனையும் போது அல்லது தீமையைத் தடுக்க முனையும் போது ஷைத்தானின் உந்துதலில் நம் உள்ளம் நமக்குச் சொல்லும் போலியான ஆறுதல் வார்த்தை என்னவெனில், நமக்கு இன்னும் வாழ்நாள் மீதம் இருக்கிறது எல்லாத் தீமைகளும் செய்து முடித்துவிட்டு கடைசியில் ஒட்டு மொத்த தவ்பா செய்து கொள்வோம்... என்பதுதான். இந்த கணமே மறுமை சம்பவித்து விட்டாலோ! அல்லது மரணம் நம்மைத் தழுவிக் கொண்டாலோ! நம் நிலை என்ன?


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும் பொழுது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் முன்னுமே இறை நம்பிக்கை கொண்டிராத அல்லது நல்லமல்களை முற்படுத்திக் கொள்ளாத எந்த ஓர் மனிதனின் நம்பிக்கையும் பலனளிக்காது. (ஆதாரம் : புகாரி)


அதாவது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சலில் காலம் தாழ்த்தி மறுமை சம்பவிக்கும் போது ஈமான் கொள்பவரின் நம்பிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் கால அவகாசம் நமக்கு கிடைக்காது. மறுமை சம்பவத்தின் ஆரம்பம் முதல் சூர்(எக்காளம்) ஊதப்படுவது தான். உடனே மனிதனை மரணம் தழுவிக் கொள்ளும்.


அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்..

மேலும் சூர் ஊதப்படும், பின்னர் பூமியில் மற்றும் வானத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூர்ச்சையாகி வீழ்ந்து விடுவார்கள். அல்லாஹ் நாடியவரைத் தவிர. இரண்டாம் சூர் ஊதப்பட்டதும் பார்ப்பவர்களாக எழுந்திருப்பார்கள். (அல்குர்ஆன் : 39:68)

சூர் ஊதப்பட்ட பின் சற்றேனும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது. அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துவிடும். அன்று மனிதனின் நிலை மிகக் கடுமையானதாக இருக்கும்.


மறுமை திடீரென்று சம்பவித்து விடும். அதன் விரைவைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பேர் (விற்பனைக்காக) துணியை விரித்து இருப்பார்கள். அவர்கள் துணியை விற்பனை செய்திருக்கவும் மாட்டார்கள் சுருட்டியிருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும் ஓர் மனிதன் தனது மடி கனத்த ஒட்டகத்தி(ல் பால் கரந்து அப்போதுதா)ன் வீடு திரும்பியிருப்பார். அதை பருகியிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். உங்களில் ஒருவர் உணவை தனது வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைப் புசித்திருக்க மாட்டார், அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)


மறுமை என்றவுடன் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம், ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் பின் வரிசையாக சுவர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ சேர்த்துவிடுவான் என்று. உலகத்தின் நிகழ்வுகளைப் போல தான் இருக்கும் என்றும் எண்ணுகிறோம். அவ்வாறல்ல
அல்லாஹ் தனது திருமறையில்...


மனிதர்களே உங்களுடைய இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மிக்க மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை மறந்துவிடுவார்கள். கர்ப்பம் சுமக்கும் ஒவ்வொரு தாயும் தனது சுமையை இறக்கிவிடுவார்கள். மேலும் மதி மயக்கம் கொண்டவர்களாக மனிதர்களைக் காண்பீர்கள். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களும் அல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்-குர்ஆன் : 22:1-2)


ஆகவே, மறுமை நாளின் அதிர்ச்சியும் கடுமையும் நம் கற்பனைக்கு எட்டாதது. எந்த அளவுக்கென்றால் திக்பிரமை பிடித்து மதி மயங்கியவர்களாக இருப்பர். இன்று நாம் பார்க்கிறோம் நமது உடன் பிறந்தவர்கள், தாய், தந்தை பாசத்திற்குறிய பச்சிளம் குழந்தைகள் நம்மை விட்டு மரணிக்கின்ற பொழுது துக்கம் தாங்கவில்லை. அழக் கூட முடியாமல் மனம் இறுகி செயல்பாடுகள் ஸ்தம்பித்து, நினைவுகள் உறைந்து பார்த்த வண்ணமே இருக்கின்றோமே!

இந்த நிலையைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இதைவிட மறுமையின் நிலை பல ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும்.
சூரியன் நெருங்கிவிடும். அதன் வெப்பமும், மறுமை நாள் நிகழ்வுகளின் பயமும் மனிதனை பீதியடையச் செய்யும். தீமைகளுக்கேற்றவாறு அதன் கடுமை இருக்கும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (அவர்கள் தலைக்கருகில் சூரியன் நெருங்கி வருவதினால்) வியர்வை ஊற்றெடுக்கும். அவர்களின் வியர்வை தரையிலும் 70 முழம் வரை சென்று பின் உயர்ந்து அவர்கள் வாயை அடைந்து இறுதியாக அவர்கள் காதுகளையும் அடையும்.

(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி)


அல்லாஹ்வின் வேதத்தில் (மறுமை பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. அது நெருங்கிவிட்டால், நிராகரிப்போரின் கண்கள் திறந்தவாறே இருக்கும். (அப்போதவர்கள்) எங்களுக்கு நேர்ந்த கேடே! திட்டமாக நாங்கள் இதைப் பற்றி மறந்தவர்களாகவே இருந்துவிட்டோம். அதுமட்டுமில்லாது நாங்கள் அநியாயக்காரர்களாகவும் இருந்துவிட்டோம். (எனக் கூறுவர்)
எனவே மறுமை நாளை நம்பாது நிராகரித்துவிட்டவர்களின் நிலை, கண்கள் விழித்தவாறே தாங்கள் செய்த துர்ச்செயலை எண்ணி நொந்து கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் யாவரும் நரக நெருப்பின் விறகுகளே ஆவர்.
(அல்குர்ஆன் : 21: 97,98)

மறுமையை நம்பி இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களின் நிலை சந்தோஷகரமானது.


அல்லாஹ் தன் திருமறையில்... நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடத்திலிருந்து நன்மைகள் முந்தி விட்டதோ அவர்கள் நரகத்தை விட்டு தூரமாக்கப்பட்டவர்கள். அன்றியும் அவர்களின் மனம், தாம் விரும்பியவற்றில் நிரந்தரமாக இருக்கும். (மறுமை நாளில்) மாபெரும் திடுக்கம் அவர்களை கவலைக்கு உள்ளாக்காது. மேலும் மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்த அந்த நாள் இதுதான் (என்று கூறுவர்)
(அல்குர்ஆன் : 21: 101-103)


எனவே மறுமை நாள் நல்லோர்க்கு மிகச் சந்தோஷமான நாளாகும். அவர்கள் இம்மையில் தன் இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவன் மறுமையில் சித்தப்படுத்தி வைத்துள்ள நிரந்தர சுவர்க்கத்தை அடைவதற்கு பேராவல் கொண்டதன் காரணமாக வல்ல இறைவன் அவர்களை சுவர்க்கத்தில் புகச் செய்து அதில் நிரந்தரமாக தங்கச் செய்து விடுவான். அதே நேரம், மறுமையை நம்பாத உலகமே நமக்கு நிரந்தரம், அல்லது பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று போலிச் சமாதானம் கூறியவர்களும், உலகத்தில் சொற்ப இலாபத்திற்காக பணம், காசு, பெண் மோகம் என்று இம்மையை நேசித்து மறுமையில் வல்ல இறைவன் நமக்குத் தரக்கூடிய சுவர்க்கத்தை நிராகரித்து, செய்த தவறுகளுக்கு மறுமையில் நாம் வல்ல இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படுவோம்.

நிச்சயமாக நாம் செய்த இந்த தீயச் செயலுக்கு பகரமாக மறுமையின் நரக நெருப்புக்கு விறகுகளாவோம் எனும் அச்சமின்றி அதை நிராகரித்தவர்களுக்கு வல்ல இறைவன் மறுமை நாளை கஷ்டமானதாகவும், கடுமையானதாகவும் ஆக்கி அவர்களை நரகத்தில் நிரந்தரமாக தங்கச் செய்துவிடுவான்.


ஆகவே, உலக வாழ்க்கை சொற்பமானதே! அதே நேரம் மறுமை வாழ்க்கை நிரந்தரமானது என்பதை உணர்ந்து, மறுமை நாள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்துவிடும். மரணம் நம் அருகாமையியே இருக்கிறது. மேலும் மறுமையின் நிகழ்வுகள், அதன் வேகம், வீரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நல்ல அமல்கள் செய்வதிலும், தீமைகளை தாமதிக்காது விட்டுவிடுவதிலும் செய்த தீமைகளை விட்டுவிட்டு உடன் தௌபாச் செய்து இனி இப்பாவத்தை செய்யமாட்டேன், எனச் சபதம் ஏற்போம். இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்





நன்றி - முகநூலில் இருந்து சகோதரர் -  
முகவை சேக்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger