வீட்டுக்குள்ளும் ஒழுக்கம் பேணுவோம்.



வீடு தான் பெண்களின் உலகம் என்பார்கள். ஏனெனில் பொதுவாக பெண்கள் அதிகமான நேரத்தை வீட்டிலேயே கழிக்கிறார்கள். ஒரு பெண் தன் வீட்டினுள் விரும்பிய முறையில் ஆடை அணிவதிலோ, சுதந்திரமாக செயற்படுவதிலோ எவ்வித குற்றமும் இல்லை. இருப்பினும் சில நேரங்களில் தன் கற்பைப் பேணுவதற்காக தன்னை இஸ்லாமிய கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றாள். வீதியில் உலா வரும் தனக்குத் தெரியாத பல ஆண்களினால் ஏற்படும் குழப்பங்களை விட வீட்டுக்குள் வரும் தான் அறிந்த ஒரு ஆணால் ஏற்படும் குழப்பங்கள் அதிகமாகும்.
அவ்வப்போது நம்முறைய வீட்டுக்கு வரும் கணவனின் நண்பர்களோ அல்லது தனது உறவுகளோஇ வீட்டின் தேவை காரணமாக கூலியாட்கள் கூட வந்துவிடலாம் அந்நேரங்களில் நம் பெண்கள் அறிந்தும் அறியாமலும் தவறிழைத்து விடுவதினால் நினைத்தும் பார்க்காத விதங்களில் குடும்பப் பெண்கள் உட்பட கன்னிகளும் தம் கற்பைப் பறிகொடுத்து விடுகின்றார்கள்.
கணவனின் நண்பனோடு கள்ளக் காதல். அண்ணனின் நண்பனோடு தலைமறைவு, சகோதரியின் கணவனுடன் சல்லாபம், வளர்ப்பு மகனுடன் பாலியல் இது போன்ற பல ஒழுக்கக் கேடான செயல்களுக்கு நம் சகோதரிகள் துணை செல்கின்றார்கள். ஆகவே இவற்றுக்கான காரணங்கள் நமக்குள்ளே இருந்தாலும் அவை அடிப்படையில் இருந்தே கிள்ளி எறியப்பட வேண்டும்.
முந்தானை அணிவதில் உஷார்.
அதிகமான பெண்கள் வெளியே செல்லும் போது அபாயா என்ற ஆடையுடன் பர்தாவோ அல்லது முந்தானையோ தலையில் அணிந்து செல்வதினால் முகம், கை, கால் தவிர மற்றைய பகுதிகளை இஸ்லாம் கூறியதைப் போல் மறைத்தாலும் தன் வீட்டிற்கு அந்நிய ஆண் ஒருவர் வந்துவிட்டால் எது இஸ்லாமிய ஆடை என்பதை மறந்துவிடுகின்றாள். தலையையும், மார்பையும் மறைக்கின்றோம் என்ற பெயரில் ஒரு முந்தானையை அரைகுறையாக அணிவதன் மூலம் முகத்துடன் சேர்த்து கழுத்துப் பகுதியும், தலை முன்பாகமும், மணிக்கட்டுக்கு மேலுள்ள குடங்கைகளும் வெளிக்காட்டப்படுகின்றன.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,  ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (24:31)
ஆகவே நாம் அணியும் முந்தானைகள் கனமாக இருப்பதுடன் கழுத்துப் பகுதி, தலையின் முற்பகுதி, குடங்கை என்பவற்றை மறைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
பெரியப்பா மற்றும் சித்தாப்பாவின் பிள்ளைகள், மற்றும் வளர்ப்புப் பிள்ளைகள் நமக்குப் பெயரளவில் மாத்திரமே அண்ணன் தம்பிகள். சொந்த சகோதரர்கள் அல்ல ஆனால் இதை நாம் அறியாது, அல்லது அறிந்தாலும் சரியான முறையில் கவனிக்காமல் சகஜமாக தொட்டுப் பேசி பழகி வருகின்றோம். இவர்களும் மார்க்க அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களே!
உண்மையில் திருமணம் செய்ய தடுக்கப்பட்டவர்கள் யார்? என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள்.
ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.
1.       தாய்
2.      மகள்
3.      சகோதரி
4.      தாயின் சகோதரி
5.       தந்தையின் சகோதரி
6.      சகோதரனின் புதல்விகள்
7.      சகோதரியின் புதல்விகள்
8.      பாலூட்டிய அன்னையர்
9.      பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
10.      மனைவியின் தாய்
11.      மனைவியின் புதல்வி
12.      மகனின் மனைவி
13.      இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1.       தந்தை
2.      மகன்
3.      சகோதரன்
4.      தாயின் சகோதரன்
5.       தந்தையின் சகோதரன்
6.      சகோதரனின் மகன்
7.      சகோதரியின் மகன்
8.      பாலூட்டிய அன்னையின் கணவன்
9.      பாலூட்டிய அன்னையின் மகன்
10.      கணவனின் தந்தை
11.      கணவனின் புதல்வன்
12.      புதல்வியின் கணவன்
13.      சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரி கள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (திருக்குர்ஆன் 4:23)
இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.
அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2451, 4719
இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.
(புகாரி 4719)
மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.
இவர்கள் தவிரவுள்ள மற்ற அனைவரும் திருமணம் செய்யவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
மேலும் வளர்ப்பு மகனை தமது சொந்த மகனைப் போல் கருதி அவனுடன் உறவாடும் வளர்ப்புத் தாய்மார்களையும் சகோதரிகளையும் நாம் காணலாம். ஒரு வளர்ப்பு மகன் இரண்டு வருடங்களுக்குள் பசி தீரும் அளவு ஐந்து தடவைகள் குறிப்பிட்ட தாயிடம் பால் அருந்தினால் மாத்திரமே தனக்கு சொந்த மகனாக ஆகுவதுடன் குறிப்பிட்ட தாயின் குழந்தைகளுக்கும் சொந்த சகோதரன் போல் ஆகிவிடுகின்றான். இப்பால்குடியினால் ஏற்படும் உறவல்லாமல் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை பருவ வயதை அடைந்த பின் குறிப்பிட்ட தாய்க்கோ, சகோதரர்களுக்கோ அவனுடன் தொட்டுப் பழகவோ அவனுக்கு முன் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் இருப்பதோ குற்றமாகும்.
எனவே பெரியப்பா, சித்தாப்பா மகன் மற்றும் வளர்ப்புப் பிள்ளைகள் ஆகிய அனைவரையும் நாம் அந்நிய ஆண் போலவே கருதி நமது கற்பை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு.
மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது. இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.
ஆனால் நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள். மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் மதினிமார்கள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு. அதே போல் கணவனின் சகோதரர்களுடன் கொஞ்சிப் பேசும், கிள்ளிப் பழகும் மைத்துனிமார்களும் நமது சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றார்கள்.
இப்படியானவர்களுக்கு நபியின் எச்சரிக்கையைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232
தனது மச்சான் என்ற உரிமையுடன் ஆரம்பத்தில் இருந்தே அளவு கடந்து பேசுவதினால் அல்லது பழகுவதினால் தன்னை அறியாமல் தன் சகோதரியின் கணவனுடன் தவறிழைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் நபியவர்கள் கணவனின் சகோதர உறவுகளை இந்தளவுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும். மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம், மச்சான் என்று கிண்டல் செய்வது, அதுபோல் அவரும் மதினி, என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை. கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான் மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும். எனவே கணவன் மதினி விஷயத்திலும், மதினி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும். இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கையையும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் ஆடை  சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்கு அப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மதினி போன்றவர்கள் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே! எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தொடர்பை நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள். எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே வீட்டுக்குள் தானே இருக்கிறோம், இது ஒரு பெரிய பிரச்சினையா? என்றெல்லாம் சமாதானம் பேசாமல் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பேணி வாழக் கூடிய பெண்களாக அல்லாஹ் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
ஆக்கம் : சகோதரி ஷப்னா கலீல்
நன்றி - RASMINMISC.COM 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger