Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label தமிழக செய்திகள். Show all posts
Showing posts with label தமிழக செய்திகள். Show all posts

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு

காரைக்கால்:காரைக்கால் நகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெயர்ச் சேர்க்க, மற்றொரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து, மாவட்ட ஆட்சியர் செயலர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
"காரைக்கால் புதிய நகராட்சி பகுதிக்குட்பட்ட 18 வார்டுகளில் வசிப்பவர்கள் ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் கைரேகை, கண் பதிவு, புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் இருப்பின், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இந்த முகாமுக்கு செல்லும் போது, குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே புகைப்படம் எடுத்ததற்கான ஆதாரம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றை எடுத்து செல்லவேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைய வேண்டுகிறோம்".
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments

மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம்!

சென்னை: மாமல்லபுரத்தில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் ஒன்றினை இயற்கைச் சூழலில் உள்ளது போல் அமைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மீன்வளத்துறையின் தொழில்நுட்ப உதவியுடன், பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்புடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக உலகத் தரம் வாய்ந்த கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தை 250 கோடி ரூபாய் செலவில் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடல்வாழ் உயிரினக் காட்சியகம், கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடல் சூழலில் உள்ளது போன்று உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டு ஒரு கடல் போல் காட்சி அளிக்கும். இக்கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில், பெரிய நீர்வாழ் பாலூட்டிகளான டால்பின், கடற்பசு மற்றும் சுறா, கடல் அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ் மீன்கள், கடற்புற்கள், கடற்பாசிகள், பவளப்பாறைகள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட வாழிடத்தில் காட்சியளிக்கும்.
பார்வையாளர்கள் அக்ரிலிக் கண்ணாடி சுரங்கங்களின் மேற்கூரையில் நீந்தும் சுறாக்களை காணும் பொழுது கடற்சூழலை உணரும் வண்ணம் இக்காட்சியகம் அமைக்கப்படும். இந்தக் காட்சியகம் வண்ணமீன் தொட்டிகள் கொண்ட காட்சியரங்குகள், உணவகங்களுடன் கூடிய ஓய்வரங்கங்கள், திறந்தவெளி வண்ணமீன் தொட்டிகள், செயற்கை ஏரிகள், இசை நீரூற்றுகள், திறந்தவெளி அரங்குகள், கல்வி அரங்குகள், கருப்பொருள் அரங்குகள், பசுமை வெளிகள், ஆராய்ச்சிக் கூடம் மற்றும் பல வசதிகளைக் கொண்டிருக்கும்.
இந்தக் காட்சியகம் சென்னைக்கு அருகில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் அழகான கடற்கரையினைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். இக்காட்சியகம், கடல் சூழலியலையும் அதன் வளங்களையும் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பொது மக்களையும், ஆராய்ச்சியாளர்களையும் மற்றும் மாணாக்கரையும் குறிப்பாக சிறுவர், சிறுமியர்களையும் வெகுவாக கவரும்.
இந்த கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தினை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை
தயாரிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நிறுவனமாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் செயல்படும். விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
0 comments

காரல் மீன்வரத்து அதிகரிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி!

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில், மருத்துவ குணம் வாய்ந்த காரல் மீன்வரத்து அதிகம் கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்த காலம் முதல், காரைக்கால் மீனவர்கள் வலையில் மீன்வரத்து குறைவாகவே உள்ளது. குறிப்பாக, பெரிய வகை மீன்களான பாறை, திருக்கை, வஞ்சிரம், கொடுவா உள்ளிட்ட மீன்கள் அதிகம் கிடைக்காததால் மீனவர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கால்சியம் சத்து அதிகம் உள்ள காரல்வகை மீன்கள் அதிகம் கிடைத்து வருகிறது. 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை நீளமும், 5 செ.மீ அகலமும் கொண்ட இவ்வகை மீன்களை பத்தியக்குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். மேலும், ஏழை எளிய மக்கள் இந்த வகை காரல் வகை மீன்களையே அதிகம் வாங்கி செல்வார்கள்.

தற்போது அதிகம் கிடைக்கும் இந்த வகை காரல் வகை மீன்கள் 50 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1500 முதல் ரூ.2000 வரை விலை போகிறது. கிலோவாக வாங்கினால், ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போகிறது. உள்ளூர் மார்க்கெட்டுக்கு போக, மீதி உள்ள மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது. பெரிய வகை மீன்கள் கிடைக்காமல் கவலையில் இருந்த மீனவர்கள் காரல் வகை மீன்வரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: இதுவரை 5½ லட்சம் பேர் விண்ணப்பம்:

சென்னை - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 5½ லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 15 ஆயிரம் காலி இடங்களை நிரப்பும் வகையில் ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் மாதம் 17–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ள நிலையில், ஏறத்தாழ 5½ லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
இன்று கடைசி நாள்
ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்தபடி, தகுதித்தேர்வுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும் அதன்பிறகு வரும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.அறிவொளி தெரிவித்தார்.
 
0 comments

கன்னியாகுமரியில் கடற்சீற்றம் - வீடுகளில் புகுந்தது வெள்ளம்

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் பல பகுதிகளில் கடற்சீற்றம் காரணமாக நூறுக்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் உட்புகுந்துள்ளது.
கடந்த சில நாள்களாக, பூத்துறை, வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டம் துறை, இரவிபுத்தன் துறை, தூத்தூர் பகுதிகளில் கடலில் பெரும் பெரும் அலைகள் எழும்பி வருகின்றன. குறிப்பாக, பூத்துறை பகுதியில் நேற்று மாலை கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. பெரும் அலைகள் 15 அடி முதல் 20 அடி உயரத்திற்கு எழும்பின.
கடல் அரிப்புத் தடுப்புச்சுவர்களை தாண்டியும் உயர்ந்த அலைகள் சில இடங்களில் இருந்த தடுப்புச்சுவர்களையும் உடைத்து இழுத்துச் சென்றன. கடற்சீற்றத்துக்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரையை ஒட்டியுள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கடல் நீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப்  பார்வையிட்டு வருகின்றனர்.
0 comments

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் உட்பட பலர் காயம்!

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 இன்று காலை களப்பாலில் இருந்து திருத்துறைப் பூண்டிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த குளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 30 மாணவர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குளத்தில் பலர் மூழ்கியிருப்பதாகவும் கூறப் படுகிறது. தகவலறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக,இ.கம்யூ,திமுக வெற்றி

 தமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தல்களில், எதிர்பார்த்தபடியே, ஆளும் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும், அதன் ஆதரவு பெற்ற ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், திமுகவின் வேட்பாளர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளனர்.
அ இஅதிமுகவின் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல் ஆகியோர் தலா 36 வாக்குகளும், அக்கட்சியின் லட்சுமணன் 35 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்டின் டி.ராஜா 34 வாக்குகள் பெற்றார்.
திமுகவின் கனிமொழி 31 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
தேமுதிகவின் இளங்கோவன் 22 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
ஒரு வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அது கனிமொழிக்கு சென்றிருக்க வேண்டியது.

திமுகவின் 23 உறுப்பினர்கள், காங்கிரசின் ஐந்து, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றின் தலா இரண்டு என கனிமொழிக்கு 32 வாக்குகள் கிடைத்திருக்கவேண்டும் .
ஆனால் 31தான் கிடைத்திருக்கிறது, ஆக அவரை ஆதரித்திருக்கவேண்டிய யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் செல்லாத வாக்களித்திருக்கிறார் என்கின்றனர் நோக்கர்கள்.
ஆனால் அவர் யார் என்பது அடையாளப்படுத்தப்படவில்லை.
மற்றபடி அதிருப்தியாளர் எழுவரைத் தவிர தேமுதிகவின் 22 பேரும் அக்கட்சி வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பது அக்கட்சித் தலைமைக்கு சற்று ஆறுதலான செய்தியாகும்

முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழோசைக்கு கருத்து தெரிவித்த டி.ராஜா , தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பாரதூர மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும், கனிமொழி வெற்றி பெற்றிருந்தும் காங்கிரஸ் ஆதரவிலேயே அவர் வெற்றியடைந்திருப்பதால் திமுகவின் சந்தர்ப்பவாதப்போக்கு அம்பலமாகியிருப்பதாகவும் குறை கூறினார்.

அ இஅதிமுகவிற்கும் இடதுசாரிக் கட்சிகளுக்குமிடையே உறவு பலப்படும் என்றவரிடம் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல்களுக்குப் பிறகு அ இஅதிமுக பாரதீய ஜனதாவை ஆதரிக்காது என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா எனக்கேட்டபோது, ராஜா பதிலளிக்க மறுத்துவிட்டார்
0 comments

விறுவிறு ராஜ்யசபா தேர்தல்.. 231 வாக்குகள் பதிவாகின! பாமக எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குப் பதிவு முடிவில் மொத்தம் 231 வாக்குகள் பதிவாகி இருந்தன. பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலை புறக்கணித்தனர். 

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இன்று 6 எம்.பி. இடங்களுக்காகத் தேர்தல் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் 234 பேர். நியமன எம்.எல்.ஏ. ஒருவர். இவருக்கு வாக்குரிமை இல்லை. 

தமிழகத்தில் 6 எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப் பதிவு நடைபெற்றது. 

விறுவிறு வாக்குப் பதிவு 

சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டசபை பேரவை குழுக்கள் கூடும் அறையில் இன்று காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் முற்பகல் 11.30 மணிக்குத்தான் வாக்குகள் பதிவாகத் தொடங்கின. பின்னர் விறுவிறுவென தொடங்கிய இந்த வாக்குப் பதிவு இரண்டேகால் மணி நேரத்தில் முடிவடைந்தது. பிற்பகல் 1.45 மணியளவில் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட 231 வாக்குகளும் பதிவாகின. 

வாக்குச் சீட்டு எப்படி இருந்தது? 

வாக்குச்சீட்டில் அகர வரிசைப்படி அதாவது, கே.ஆர்.அர்ஜூணன் (அ.தி.மு.க), ஏ.ஆர்.இளங்கோவன் (தே.மு.தி.க.), இரா.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டாக்டர் வா.மைத்ரேயன் (அ.தி.மு.க.), த.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

வாக்களித்தது எப்படி? 

வெள்ளை நிறத்தில் உள்ள வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு இருந்தன. வேட்பாளரின் பெயருக்கு எதிரே உள்ள பகுதியில் எண்ணால் வாக்களிக்கப்பட்டன. அதாவது யாருக்கு வாக்ககுப் போட எம்.எல்.ஏ.க்கள் விரும்புகிறார்களோ அவர்களை முதல் முன்னுரிமை, 2-வது முன்னுரிமை என்ற அடிப்படையில் வாக்களித்தனர். 

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு 

முடிவு பிற்பகலிலேயே அனைத்து வாக்குகளும் பதிவாகிவிட்டாலும் அதிகாரப்பூர்வமாக மாலை 4 மணி வரை வாக்கு பதிவு மையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. வாக்களிக்க வேண்டிய பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் அதுவரை வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அலுவல் ஆய்வுக் குழு அறையில் வைக்கப்பட்டன.

0 comments

ராஜ்யசபா தேர்தல்.. கருணாநிதி, விஜயகாந்த் அடுத்தடுத்து வாக்களிப்பு!!

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் பிற்பகலில் வாக்களித்தனர். 
இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். 

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர். இதனால் இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முற்பகல் 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா முதலில் வாக்களிக்க பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அவர்களுடன் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இணைந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக அணி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.


பின்னர் பிற்பகல் 1 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் திமுக வேட்பாளரை ஆதரிக்கும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். பிற்பகல் 1.45 மணியளவில் மொத்தமாக 231 எம்.எல்.ஏக்களும் வாக்களித்ததால் வாக்குப் பதிவு நிறைவு அடைந்தது. 

0 comments

கல்பாக்கம் பகுதி கடலில் எரிமலைகள் இல்லை: அணுமின் சக்தி கழகம் சொல்கிறது!

டெல்லி: சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையப் பகுதியில் எரிமலைகள் எதுவும் கிடையாது என்று இந்தி்ய அணுமின் சக்தி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சென்னையை அடுத்த கல்பாக்க அணு மின்நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 100 முதல் 110 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் எரிமலை இருப்பதாக எரிமலைகள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வரும் ஸ்மித்சோனியன் என்ற நிறுவனம் தமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் என்பவர் எரிமலை பற்றி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் விவரம் கோரியிருந்தனர். 

இதற்கு பதிலாக சென்னை கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலைகள் இருப்பது பற்றி 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி கழகம் கூறியதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில், இந்திய அணுசக்தி கழகம், கடந்த 13-ந் தேதி வழக்கறிஞர் வெற்றிச் செல்வனுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், ஸ்மித்சோனியன் அமைப்பு, கல்பாக்கம் பகுதியில் எரிமலை இருப்பதாக தெரிவித்து இருப்பது உறுதியற்றது, ஆதாரம் இல்லாதது. அந்த நிறுவனம் தெரிவித்த தகவல் குறித்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்களுடன் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆய்வும் நடத்தப்பட்டது. அதன் முடிவில் அந்தப் பகுதியில், எரிமலையே கிடையாது. அந்தப் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அதனால் கவலைப்பட வேண்டியது இல்லை என்றும் அந்த நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர் எனக் கூறப்பட்டிருக்கிறது.. எரிமலை எப்படி பொறுக்கும்?
0 comments

சாதனை மாணாக்கர்களுக்கு முதல்வர் பரிசு!

சென்னை: +2 மற்றும் 10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசு மற்றும் மடிக்கணினி வழங்கினார்.
 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்புகளுக்காகும் செலவினையும் அரசே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"2012-2013ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலிதா மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகள்; 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள், என மொத்தம் 13 மாணவ மாணவிகள்; என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்
.மேலும் மாணாக்கர்களை பாராட்டிப் பேசிய முதல்வர் “உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று மனதார வாழ்த்தினார்.
பரிசு மற்றும் மடிக்கணினி பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்."
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப் படடுள்ளது.
0 comments

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் தடம் புரண்டது

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து, நேற்று 8.45 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் தடம் புரண்டது.
சென்னையிலிருந்து காலை 7 மணிக்கு காரைக்கால் வந்த கம்பன் எக்ஸ்பிரஸ், பகல் முழுவதும் காரைக்கால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, இரவு 8.45 மணிக்கு மீண்டும் சென்னை புறப்பட்டு செல்லும்.
இன்று வழக்கம் போல், காலை 7 மணிக்கு காரைக்கால் வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் பகல் ஓய்வுக்கு பிறகு இன்று மாலை 6 மணிக்கு சென்னை செல்ல ஆயத்தமானது. ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு, இன்ஜின் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்று திரும்பும் நிலையில், எதிர்பாராவிதமாக தண்டவாள தடுப்பு கட்டைகளில் இன்ஜின் மோதி, தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது.
தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்க ரயில்வே நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். ரயில் இன்ஜினை மீட்க காலதாமதம் ஆகும் என்பதால், மாற்று இன்ஜின் பொறுத்தி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
0 comments

சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் ஏன் ?

கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம் கூறுகிறது.
கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டு, 2011லும் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில், 65,873 விபத்துக்கள், 15,422 மரணங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 2012ல் ஒவ்வொரு மாதமும் மிக அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்ததும் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான் எனவும் ஆவண மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றி புதுடில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநகரங்களின் சாலைப்போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகளுக்குத் தலைமை வகித்த என்.எஸ்.ஸ்ரீனிவாசன் குடிபோதையில் ஓட்டுவது, போதிய பயிற்சியின்மை, தேவையில்லாத வேகம் இவற்றாலேயே விபத்துக்கள் என விளக்குகிறார்.
மேலும் வாகன ஓட்டிகள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து காப்பாற்றும் வகையில் சாலைகள் வடிவமைக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறார் ஸ்ரீனிவாசன்.
மாநில போக்குவரத்து திட்டமிடல் மையத்தின் தலைவர் காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.ராஜேந்திரன் மற்ற மாநிலங்களைப்போலல்லாமல் தமிழ்நாட்டில் விபத்துக்கள் அனைத்தும் உடனடியாகப் பதியப்படுவதால் அதிக விபத்துக்கள் என்பதான தோற்றம் நிலவுகிறது என்றார்.
ஆனால் நாம் சரிவர கண்காணிக்கிறோம் என்பதைத்தான் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.
மற்றபடி தேசிய நெடுஞ்சாலைகளில்தான் மிக அதிகமான விபத்துக்கள் நிகழ்வதாகவும் அவற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களது கண்பார்வை நிலையினை கண்காணிப்பது எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான சாலைகளை வடிவமைப்பது இப்படிப் பல தளங்களில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டு விபத்துக்களைக் குறைத்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் ராஜேந்திரன்.
0 comments
தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ஆறு இடங்களுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில், ஆறாவது இடத்துக்கு போட்டியிடும் திமுக, தனது வேட்பாளருக்கு , சமீபத்தில் அது உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடிப் பெற்றிருப்பது , விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
ஆனால் , திமுக, இந்தத் தேர்தலில் , சட்டமன்றத்தில் இருக்கும் 234 உறுப்பினர்களே வாக்காளர்கள் என்ற நிலையில், அதிமுகவுக்கு வாக்களிக்கவுள்ள உறுப்பினர்களைத் தவிர மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது, அந்த வகையில்தான் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரியது என்று திமுகவின் ஊடகத்தொடர்பாளர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தைகள் அல்லது இந்த முடிவு, தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலைப் பொறுத்ததே தவிர, இதை வைத்து, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படும் என்று இப்போது கூறமுடியாது என்றார் அவர்.
இது குறித்து இந்த இரு கட்சிகளும் இப்போது பேசவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய ஆளும் கூட்டணியில் இருந்து திமுக சமீபத்தில்தான் விலகிய நிலையில், இந்த மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆதரவை திமுக நாடியது, சந்தரப்பவாதமாக சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை திமுக நாடியதில் எந்த வித கொள்கைச் சமரசமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு தேர்தலில் வாக்களிக்க ஆதரவு கோருவது எப்படிக் கொள்கையை விட்டுக்கொடுப்பதாகும் என்றும் அவர் கேட்டார்.

சட்டமன்றக் கட்சிகளில் அதிமுக அணியில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளிடமும், திமுக அணியிலேயே போட்டியிட்டு வென்ற பாட்டாளி மக்கள் கட்சியிடமும் , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமும் திமுக ஆதரவைக் கோரியது, இதில் சில கட்சிகள் ஆதரவைத் தந்திருக்கின்றன , சில தரவில்லை என்றும் அவர் கூறினார்.
0 comments

ராஜ்யசபா தேர்தல்: திமுகவை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு

தமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை(ராஜ்யசபா)க்கு நடக்கவிருக்கும் தேர்தல்களில், ஆறாவது இடத்துக்கான போட்டியில், திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.
இந்த முடிவை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
ஏற்கனவே திமுக வேட்பாளர் கனிமொழிக்கு திமுகவின் 23 உறுப்பினர்கள் ஆதரவுடன் , மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலா இரண்டு உறுப்பினர்களும் ஆதரவளிக்கும் நிலையில், காங்கிரஸின் ஆதரவு அவரது வெற்றி வாய்ப்பை பலமாக்குவதாக நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆறாவது இடத்துக்கு போட்டியிடும் மற்றுமொரு கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் வாய்ப்புகள் இப்போது அருகி வருகின்றன.
சட்டப்பேரவையில் அக்கட்சிக்கு 29 உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் ஏழுபேர் கட்சித் தலைமைமீது அதிருப்திகொண்டு அ இஅதிமுக அரசிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்தின்படியே வாக்களிக்கக்கூடும். அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியாத நிலையில் தேமுதிக வேட்பாளருக்கு 22 வாக்குகளே உறுதி. ஏழுபேரும் தேமுதிகவிற்கு வாக்களித்தாலும் இளங்கோவனுக்கு 29 வாக்குகள்தான். அந்த அளவில் அவரை காங்கிரஸ் ஆதரிக்க முன்வராத நிலையில் தேமுதிகவிற்கு பின்னடைவே.

தேர்தல் நடக்கவிருக்கும் ஆறு இடங்களில் ஆளும் அதிமுக நான்கு இடங்களிலும், அதன் ஆதரவு பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அவை வெற்றிபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.
0 comments

பான் மசாலா வைத்திருந்தால் 5 லட்சம்!

சென்னை: தமிழக கடைகளில் பான் மசாலா குட்கா, போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை வைத்திருந்தால் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப் படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பான் மசாலா புகையிலைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கடந்த மே 8ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி இம்மாதம் 22 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பான்மசாலா, குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வணிகர்கள் கிடங்கில் உள்ள இருப்புகளை காலி செய்ய மேலும் 1 ஒரு வாரம் கால அவகாசம் கேட்டனர். இது குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கெடு காலத்திற்கு பின்பு பான் மசாலா விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ ரூ 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப் படும் என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
0 comments

மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கல்தா!

மாணவியரிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் ஆசிரியர்களின் கல்விச் சான்று பறிக்கப்படும் என்றும், அவர்களால் காலம் முழுவதும் ஆசிரியர் பணி செய்ய இயலாத நிலைமைக்குத் தள்ளப்படுவர் என்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளுக்கும் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:

மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் ஆசிரியர்களுக்கான உளவியல்  ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் . மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆலோசகர், உதவியாளர், நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்

தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாடங்களுடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற ஆற்றல்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments

ராஜ்ய சபா தேர்தல் - ஸ்டாலினுக்கு என்ன லாபம்?

ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியைப் போட்டியிட வைக்கும் திட்டத்துடன் திமுக தலைவர் கருணாநிதி பாமகவின் ஆதரவைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்த நிலையில்,
கூட்டம் ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் ''எந்த திராவிடக் கட்சி பாமகவுடன் கூட்டணி அமைக்க அலைந்தது?'' எனப் பேசி கனிமொழிக்குப் பாமக தரவிருந்த ஆதரவுக்குத் தடை போட்டார்.

கனிமொழி எம்.பி ஆவதை ஸ்டாலின் விரும்பாததன் காரணமாகவே பாமகவை வெறுப்பேற்றும் விதமாக ஸ்டாலின் பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் திமுக செயற்குழுக் கூட்டத்தில் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக ஸ்டாலின் சகிதமாக தலைமைச் செயலகம் சென்று கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.

கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தவுடன் எதிர்க் கட்சியான தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது. தேமுதிக பொருளாளர் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் 4 வேட்பாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப் பட்டு விட்ட நிலையில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு எதிர்க் கட்சியான தேமுதிகவும், திமுகவும் மோதுவது இரண்டு கட்சிகளுக்குமே ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் தேமுதிகவின் பலம் 29. அதில் 7 அதிருப்தி எம்.எல்.ஏ க்களின் வாக்குகள் போக மீதமிருப்பது 22. தேமுதிகவுக்கு உள்ள ஒரே ஆறுதல் அதன் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க 6 மாத காலத் தடை விதிக்கப் பட்ட எம்.எல் ஏ க்களும் வாக்கு அளிக்கலாம் என்ற உத்தரவே. இருப்பினும் 22 வாக்குகள் பதிவாகுமா அல்லது அதிலும் ஒன்றிரண்டு வாக்குகள் குறையுமா என்பது தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும்.

இந்தத் தேர்தலில் தேமுதிகவை ஓரம் கட்டி திமுக வெற்றி பெறுவதன் மூலம் கனிமொழிக்கு எம்.பி பதவி கிடைக்கும். அதே சமயத்தில் எதிர்க் கட்சியால் ஒரு எம் பி பதவியைக் கைப் பற்ற முடியாத நிலையில் தேமுதிக எதிர்க் கட்சிக்குத் தகுதியான கட்சியா என்ற வாதமும் எழக் கூடும்.

தேமுதிகவுக்கு 22 வாக்குகளோ அல்லது அதற்கும் குறைவான வாக்குகளோ கிடைக்கும் நிலையில் 23 உறுப்பினர்களை வைத்து இருக்கும் திமுக எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்யலாம். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் சட்டமன்ற கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கக் கூடும்.

இனி காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று பேசிய ஸ்டாலின் தம் ஆதரவாளரான டி.ஆர் பாலுவை டெல்லிக்கு அனுப்பி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவைக் கோரியுள்ளார்.

மற்றொரு பக்கம் தாமே அன்புமணியைச் சந்தித்து பாமகவின் 3 உறுப்பினர்களின் ஆதரவைக் கேட்டுள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவையும் திமுகவுக்கு உறுதிப் படுத்தி விட்டார்.

ஒருவேளை தேமுதிக வேட்பாளர் தம் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டால் கனிமொழி போட்டியில்லாமல் வெற்றி பெறுவார். அவ்வாறில்லாமல் போட்டி இருந்து தேமுதிக தோற்கும் நிலை ஏற்பட்டால் கனிமொழிக்கு எம். பி பதவியும் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் கிடைக்கலாம்.
0 comments

சீசன் முடிந்து மத்தி மீன் வருகை அதிகரிப்பு!

காரைக்கால்:   காரைக்கால் மாவட்ட கடல் பரப்பில், மத்தி மீன் சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து,
தமிழக மீனவர்கள் இவ்வகை மீன்களை பிடித்து காரைக்கால் மீன்பிடி துறைமுகம் வாயிலாக, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யும் பணியில் திவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வருடந்தோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மத்தி மீன்  சீசன் இருக்கும் என்றாலும், மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதத்துடன் மத்தி மீன் வருகை படிப்படியாக குறைந்துவிடும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மே மாதத்தில் உச்சக்கட்டமாக அதிக அளவில் கிடைக்கவேண்டிய மத்தி மீன் தற்போதுதான் கிடைக்க துவங்கியுள்ளது. கடந்த மூன்று மாதமாக ஓரளவிற்கு கிடைத்த மத்தி மீன் தற்போது அதிக அளவில் கிடைக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து, மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் ரவி கூறியதாவது:
"சாதாரணமாக, காலை சுமார் 6 மணிக்கு, கடலில் 15 கிலோ மீட்டர் முதல் 25 கிலோ மீட்டர்  வரை பைபர் படகில் செல்லும் மீனவர்கள், மத்தி மீனுக்கான டிஸ்கோ உள்ளிட்ட விசேஷ வலையை பயன்படுத்தி, கூட்டம் கூட்டமாக வரும் மத்தி மீன்களை மட்டும் பிடித்து மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கரைக்கு கொண்டு வருவார்கள். ஒரு பைபர் படகில், சுமார் 5 ஆயிரம் மதிப்பிலான மத்தி மீன்களை மீனவர்கள பிடித்து வருவார்கள். பெரும்பாலும், காரைக்கால் மீனவர்கள் மத்தி மீனை பிடிப்பதில்லை.
காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில், இந்த வகை மத்தி மீன்கள் கிலோ ரூ. 20 முதல் விற்பனை செய்யபடுகிறது. இதே மத்தி மீன் கேரளா பகுதியில் கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு, காரைக்கால் மாவட்டத்தில், 10 ஆயிரம் கிலோ வரை மத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மே மாதத்தில் படிப்படியாக குறைந்த மத்தி மீன் தற்போது 20 ஆயிரம் கிலோ வரை கிடைக்கிறது. பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு பெரிய வகை மீன்கள் கிடைக்காததால் பெருத்த ஏமாற்றத்துடன் இருந்தனர். மத்தி மீனால் பெரிய அளவில் லாபம் இல்லையென்றாலும், ஏமாற்றத்துடன் இருந்த ஒரு சில மீனவர்களுக்கு அதிகப்படியான மத்தி கொஞ்சம் ஆறுதலை தருகிறது.
 இதுபற்றி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் இளையப்பெருமாள் கூறியதாவது:
"மத்தி மீன்களை பெரும்பாலும் காரைக்கால் மீனவர்கள் பிடிப்பதில்லை. அந்த வகையில் அவர்களை பாராட்டவேண்டும். தமிழகப்பகுதியில் சிலர் சுறுக்கு வலைகளை பயன்படுத்துவதாக தெரிகிறது. பயன்படுத்த கூடாது என்றுதான் எச்சரிக்கை செய்யமுடியும், மீன் குஞ்சுகள் பாதிக்காவண்ணம் அவர்களாகவே சுறுக்கு வலை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். அப்போதுதன் மீன்வளம் நன்றாக இருக்கும்" என்றார்.  
0 comments

ஆண்- பெண் செக்ஸ் உறவு ‘சட்டப்பூர்வமான திருமணத்திற்கு’ ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி / நான்தான் அன்னைக்கே சொன்னேனே கேட்டீங்களா?: குஷ்பு

ஆண்- பெண் செக்ஸ் உறவு ‘சட்டப்பூர்வமான திருமணத்திற்கு’ ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.
இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார்.
ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.
இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.
திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான்.
மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லா விட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவு தான்.
ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள் தான்.
இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவை தான்.
திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம் தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம்.
சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.
நான்தான் அன்னைக்கே சொன்னேனே கேட்டீங்களா?: குஷ்பு

சென்னை: திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து தனது கருத்தை ஒட்டிய கோணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு.
கற்பு குறித்து முன்பு கருத்து சொல்லி பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டவர் குஷ்பு. திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைக்கும் போது பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார் குஷ்பு.
இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன. போராட்டங்களும் வெடித்தன. அவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அதை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றம் வரை போய் தனக்கு சாதகமாக தீர்ப்பையும் பெற்றார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் ஒரு வழக்கில் தீ்ர்ப்பளித்த ஹைகோர்ட், திருமணம் ஆகாவிட்டாலும் கூட ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக இணைந்து குழந்தையும் பெற்று்க கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்படுவர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் முறையற்றதாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது.
இதைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் ஒரு டிவிட் செய்தியைத் தட்டி விட்டுள்ளார் குஷ்பு.
அதில், நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது நடக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
இப்போது எந்த அரசியல் கட்சியாவது உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு கத்துகிறார்களா? என்பதை நான் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு என்ன போராட்டம் நடக்கப் போகிறதோ….!
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger