தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ஆறு இடங்களுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில், ஆறாவது இடத்துக்கு போட்டியிடும் திமுக, தனது வேட்பாளருக்கு , சமீபத்தில் அது உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடிப் பெற்றிருப்பது , விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
ஆனால் , திமுக, இந்தத் தேர்தலில் , சட்டமன்றத்தில் இருக்கும் 234 உறுப்பினர்களே வாக்காளர்கள் என்ற நிலையில், அதிமுகவுக்கு வாக்களிக்கவுள்ள உறுப்பினர்களைத் தவிர மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது, அந்த வகையில்தான் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரியது என்று திமுகவின் ஊடகத்தொடர்பாளர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தைகள் அல்லது இந்த முடிவு, தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலைப் பொறுத்ததே தவிர, இதை வைத்து, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படும் என்று இப்போது கூறமுடியாது என்றார் அவர்.
இது குறித்து இந்த இரு கட்சிகளும் இப்போது பேசவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய ஆளும் கூட்டணியில் இருந்து திமுக சமீபத்தில்தான் விலகிய நிலையில், இந்த மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆதரவை திமுக நாடியது, சந்தரப்பவாதமாக சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை திமுக நாடியதில் எந்த வித கொள்கைச் சமரசமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு தேர்தலில் வாக்களிக்க ஆதரவு கோருவது எப்படிக் கொள்கையை விட்டுக்கொடுப்பதாகும் என்றும் அவர் கேட்டார்.
சட்டமன்றக் கட்சிகளில் அதிமுக அணியில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளிடமும், திமுக அணியிலேயே போட்டியிட்டு வென்ற பாட்டாளி மக்கள் கட்சியிடமும் , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமும் திமுக ஆதரவைக் கோரியது, இதில் சில கட்சிகள் ஆதரவைத் தந்திருக்கின்றன , சில தரவில்லை என்றும் அவர் கூறினார்.
Post a Comment