அல் குர்ஆனில் குறை கண்டு பிடிக்க முடியாமல் இஸ்லாத்தை தழுவிய இளம் பெண்

அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண் ஒருவர் குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆராயத்தலைப்பட்டார்.

தனது ஆராய்ச்சியில் அதில் குறை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், குறை காண விழைந்த அந்த இளம் டாக்டரை திருக்குர்ஆன் தன் வசம் இழுத்துக் கொண்டது.

ஆம்! அப்பெண்ணின் சிந்தனையில் வெகுநாட்களாக எழுந்துவந்த பல கேள்விகளுக்கு அந்த அருள்வேதத்தில் தெளிவான, திருப்தியான பதிலை பெற்றுக்கொண்டார். அதற்குப் பின் தாமதிப்பதற்கு அந்த இளம் டாக்டருக்கு எதுவும் தடையாக இல்லை. உடனே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பெயரை மரியா என்று சூட்டிக்கொண்டார்.

அந்த இருபத்தைந்து வயது இளம் பெண் டாக்டர் தனது நிலையைப்பற்றி தானே ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில்;

அமெரிக்காவில் கலிவலாண்ட் என்னும் பகுதியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். உயிரியல் கல்வியில் பட்டம் பெற்றேன். அதன்பின் மெடிகல் கல்லூரியில் சேர்ந்து அங்கு மேற்படிப்புக்கான முயற்சியியை செய்து வருகிறேன். எனினும் நான் பின்பற்றும் கோட்பாடுகளில் எனக்கு அமைதி ஏற்படவில்லை. மறைமுகமாக ஒரு விஷயம் என்னை தொந்தரவு செய்து வந்தது.

கிறிஸ்தவ மதத்தின் திரியோதனக் கொள்கையின் அடிப்படைப்பற்றி எனது உள்ளத்தில் பலவிதமான கேள்விக்கணைகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன. இதைவிடவும் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட், ஆர்தொடக்ஸ் போன்ற பிரிவுகளாக கிறிஸ்தவத்த்தில் பல கொள்கைகள் ஏன் ஏற்பட்டது? அவையவைகளுக்கு தனித் தனிப்பட்ட கொள்கைகள் ஏன் உருவாகியுள்ளது? என்ற வினாக்கள் எழுந்து கொண்டிருந்தது. ஆனால், எனது நம்பிக்கை ஒரே இறைவன் மீது இருந்தது.

தவறுக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்துணரும் ஆற்றல் என்னிடம் இருந்தது. எனினும் இஸ்லாமைப்பற்றி, அது உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், நான் அதை ஏற்று பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம்தான் என்ற நோக்கில் சிந்திக்க முன்வரவில்லை. ஏனெனில் இஸ்லாத்தைப்பற்றி அது ஒரு யுத்த மார்க்கம். கடினத்தை விரும்பும் மார்க்கம் எனவும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் கொலை, கொள்ளை, அநியாயம் போன்றவைகளை ஆதரிக்கும் பயங்கரவாதிகள் எனவும் தான் விளங்கி இருந்தேன்.

நான் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபின், குர்ஆனை குறை காணும் நோக்கத்துடன் இது சத்திய வேதமா? அல்லது அசத்தியமானதா? என்பதை அறிந்து கொள்வதற்காக தலைப்பட்டேன். பக்கங்களைப் புறட்டப்புறட்ட, உள்ளே செல்லச்செல்ல ஆச்சரியமான உற்சாகம் என்னுள் ஏற்படுவதை உணர்ந்தேன்.

இஸ்லாத்தின் கொள்கைகள் மிகவும் தெளிவானதாக, மிகவும் பிரகாசமானதாக, பரிசுத்தமானதாக இருப்பதைக் கண்டேன். அதிலுள்ள இறைக்கொள்கையும் அப்பழுக்கற்றதாக வணங்குவதற்கு தகுதியானவன் ஒரேயொரு இறைவன் தான் என்று உள்ளது. இந்த ஆராய்ச்சிக்குப்பிறகு என்னுள் அமைதியும், நிம்மதியும் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது. மேலும் என் உள்ளத்தின் ஆழத்தில் இதுவரை எந்தெந்த கேள்விகள் எழுந்து கொண்டிருந்ததோ அவைகள் அத்தனைக்கும் குர்ஆனில் தெளிவான பதிலைப் பெற்றுக்கொண்டேன்.

அதன்பின் பரிசுத்த குர்ஆனையும், மற்ற இஸ்லாமிய நூல்களையும் ஆராய்வதை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இஸ்லாத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்காக எனது ஆராய்ச்சியை அதில் ஈடுபடுத்தினேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், அவர்களது தோழர்களான ஸஹாபாக்களின் வரலாறுகளை ஆராய்ந்தேன்.


இஸ்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மென்மையின் சிகரமாம் பெண்ணினத்திற்கு என்ன ஒரு உயர்வான அந்தஸ்தையும், உரிமைகளையும் கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். நான் வாழும் அமெரிக்காவில்கூட சிலபல ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் பெண்ணினத்தை மதிப்பது, சமஉரிமை தருவது என்ற பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

அதன்பின் எனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் வகையில் கணவன் மனைவிக்கு நடுவில் குடும்ப வாழ்க்கைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அதற்கு நிகராக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் குடும்ப வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க நாடினேன்.

எதிர்பாராத விதமாக கண்ணியமான இஸ்லாமியக் குடும்பத்துடன் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறை, இல்லற வாழ்க்கையில் அமைந்திருந்த ஒழுக்க முறைகள், குழந்தைகளை பராமறிப்பது, அவர்கள்மீது அன்பு செலுத்துவது போன்றவைகளைப் பார்த்து அப்படியே அசந்து போனேன்.

கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அன்பு காட்டி வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கடமையை உணர்ந்து வாழ்கிறார்கள். கணவன் மனைவி, ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் பணிகளை கண்ணியத்துடன் செய்து கொள்கிறார்கள். இந்நிலை அமெரிக்காவின் பெரும்பாலானக் குடும்பத்தில் காணப்படுவதில்லை.

இஸ்லாத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, பட்டென்று கிடைத்த பதில்; ‘பர்தா அணிவது! ஏனெனில், எனக்கு முழுமையான நம்பிக்கையும் பரிபூரணமான அமைதியாகவும் இருக்கிறது. பெண்கள் தங்கள் மேனி முழுவதையும் மறைத்து இருக்க வேண்டுமென்பது ஆண்களைவிட குறைந்தவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக இது அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், கண்ணியமாக வாழவும் செய்கிறது.

இவ்வாறே இஸ்லாம் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட காலம் வரை ஜீவனாம்சம் அளிக்கிறது. அந்த காலம் வரை (முன்னால்) கணவரின் இல்லத்தில் இருப்பதற்கும் அனுமதி வழங்குகிறது. இதைப்போன்ற சலுகை அமெரிக்காவிலும் செயல் படுத்தப்பட்டால், அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீடிழந்து தெருத்தெருவாக அலைந்து திரியும் நிலை ஏற்படாது.

மேலும் இஸ்லாம், பெண்களின் அடிப்படை உரிமைகளையும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. உதாரணத்திற்கு கூறவேண்டுமானால், பெண் தனது கணவரின் வீட்டையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமென பணிக்கிறது. ஏனெனில் குழந்தைகளின் கல்வியிலும், அவர்களை முறைப்படி வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி காலத்தை ஒதுக்குவதன் மூலம், அவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்களையும், அழகிய கலாச்சாரங்களையும் ஏற்படுத்த முடியும். அவ்வாறு இல்லாத குழந்தைகள் தான்தோன்றித்தனமாக, தன் மனம்போன போக்கைக் கொண்டதாகவே வளரும். தற்போது அமெரிக்காவில் அவ்விதமான குழந்தைகளைத்தான் காணமுடிகிறது.

அமெரிக்காவில் எவ்விதம் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு;

அமெரிக்கர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் இஸ்லாத்தைப்பற்றி அது யுத்த மார்க்கம் எனவும், எப்போதும் சண்டைச் சச்சரவுகளை உருவாக்கும் மார்க்கம் எனவும், கொலை கொள்ளைகளைத் தூண்டும் மார்க்கம் எனவுமே எண்ணியுள்ளனர். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டத்தையுடையதாக எண்ணவே இல்லை. சமீப காலமாக இதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஆகவே, அவர்களுக்கு இஸ்லாத்தின் அனைத்து அறிமுகங்களையும் எடுத்துக்கூறி அது அற்புதமான வாழ்க்கைத் திட்டத்தைக் கொண்ட மார்க்கம் என்பதை விளக்கி அவர்களின் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டிய கடமை நம்மவர்களுக்கு இருக்கிறது. மேலும் முஸ்லிம்களும் அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து வாழ்ந்து காட்டுவதும் கடமையாகும் என்றார்.

நன்றி அனிஷா.. முஸ்லிம் பெண்கள்./ வைகறை facebook
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger