இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் செரீப் பதவி ஏற்றார். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றப்போவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் செரீப் பதவி ஏற்றார். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றப்போவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
பிரதமர் தேர்தல்
பாகிஸ்தானில் கடந்த மாதம் 11–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நவாஸ் செரீப்பின் (வயது 63) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் நவாஸ் செரீப் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றது.
இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நடந்தது. இந்த தேர்தலில் நவாஸ் செரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் மக்தூம் அமின் பாஹிம், இம்ரான் கானின் தெக்ரிக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் ஜாவத் ஹாஷ்மி ஆகியோர் போட்டியிட்டனர்.
நவாஸ் செரீப் வெற்றி
ஆனால் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெற்று விட்டதால், எதிர்பார்த்தபடியே நவாஸ் செரீப் அமோக வெற்றி பெற்றார். 342 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் நவாஸ் செரீப்புக்கு 244 ஓட்டுக்கள் கிடைத்தன. பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் மக்தூம் அமின் பாஹிம் 42 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். இம்ரான்கான் கட்சி வேட்பாளர் ஜாவத் ஹாஷ்மிக்கு 31 ஓட்டுக்கள் கிடைத்தன.
இந்த வெற்றியின் மூலம் 13 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப் 3–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
வாக்குறுதி
பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தில் நவாஸ் செரீப் பேசினார்.
அப்போது அவர், ‘‘நாட்டை ஜனநாயகம் மட்டுமே முன்னோக்கி அழைத்துச்செல்ல முடியும் என்பதை தேர்தல் வெற்றி காட்டுகிறது. மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டு ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்’’ என கூறினார்.
பதவி ஏற்றார்
தொடர்ந்து புதிய பிரதமர் பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது. நவாஸ் செரீப்புக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவரை தொடர்ந்து புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சரத் சபர்வால் கலந்துகொண்டார்.
Post a Comment