டேராடூன்: உத்தர்காண்ட் பெருமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 550ஐ தாண்டியிருக்கிறது. மழைவெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கிய 50 ஆயிரம் பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய 17 வெளிநாட்டு பயணிகளும் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
உத்தர்காண்ட் உட்பட வடமாநிலங்களில் கனமழை பெய்ததாலும் கேதார்நாத் பனிச்சிகரம் உடைந்து விழுந்ததாலும் கங்கை மற்றும் யமுனை நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் சார் தாம் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். பலநூறு சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 25 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 550 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று உத்தர்காண்ட் மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே மீண்டும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் மீட்புப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய 17 வெளிநாட்டு பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கேதார்நாத் மற்றும் கெளரிகுண்ட் இடையே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 40 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநில அரசு 2 ஹெலிகாப்டர்களையும் 30 பேருந்துகளையும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைத்துள்ளது.
Post a Comment