அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி'


வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 
தீவிரவாதம் என்றாலே, அதை பைஜாமா + தாடியுடன் பாகிஸ்தானில் இருந்து வரும் பாய்மார்களுக்கு என ஒட்டுமொத்த குத்தகைக்கு கொடுத்து விட்டது தமிழ் சினிமா. முதலில் அந்த வேலையை கேப்டன்என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் செய்தார். அவரது படங்களில், பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பவன் கூட பாகிஸ்தான் தீவிரவாதியாகத்தான் இருப்பான். உள்ளூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து கொண்டு, விமானம் ஏறி டில்லி சென்று, சிபிஐ அதிகாரிகளைக் கூட ஓரங்கட்டி உட்காரச் செய்து விட்டு தனியாளாக நாட்டைக் காப்பாற்றுகிற டகால்டிவேலைகளை அவரைக் காட்டிலும் தெளிவாகச் செய்ய இன்றுவரை பீல்டில்ஆளில்லை. அவரளவுக்கு இல்லாவிட்டாலும், நிறைய படங்களில் ஆக்ஷன் கிங்என்பாரும் நாட்டை காப்பாற்றினார். 
நாட்டின் துரதிர்ஷ்டம். இருவரும் இன்று களத்தில் இல்லை. திண்ணை காலியாக இருக்கிறது. ஏறி அமர்ந்திருக்கிறார் இளைய தளபதி. சமீபத்தில் வெளியாகி இருக்கும் துப்பாக்கிபடத்தில், தனது முன்னோர்களைப் போல, ‘ஒண்டியாக வியர்வை சிந்தி நாட்டைக் காப்பாற்றியிருக்கிறார். நல்லது. அவர் நாட்டைக் காப்பாற்றட்டும். நமக்கு எதுவும் ஆட்சேபணை இல்லை. அதற்காக, இந்த நாட்டை உருவாக்க பாடுபட்ட, இந்த நாட்டின் உருவாக்கத்துக்காக உயிர் நீத்த இஸ்லாமிய சகோதரர்களை தேசத்துரோகக் கூட்டமாக சித்தரித்து சீன்போடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. 
இன்று நேற்றல்ல... இஸ்லாமியர்களை தேசவிரோத சக்தியாக சித்தரித்து படம் பிடிப்பது இங்கு நீண்டகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ரோஜாபடத்தில், தொழுகை நடத்திக் கொண்டே அசைன்மென்ட்க்கு உத்தரவு கொடுப்பதாக காட்சி இருக்கும். உலகநாயகன் படங்களில் இது உச்சக்கட்டம். ஹே ராம்படத்தில், ‘‘நீங்க உங்க நாட்டுக்கே போங்கடா,’’ என்பார். உன்னை போல் ஒருவனில், ‘‘ஒரு பொண்டாட்டி செத்தா என்ன பாய்? அதான், மூணு இருக்கே; அதுவும் மூணாவதுக்கு வயது பதினாறுதான்,’’ என இஸ்லாமியர்களின் சோகத்தையும் கூட ஏகடியம் செய்து வசனம் வைப்பார். 
அடுத்து இவர் விஸ்வரூபம்எடுக்கிற படம் நிஜமாகவே, கதி கலக்குகிறது. அந்த சினிமாவின் டிரெய்லர்பார்த்த போது, நமது பயம் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாவதை தவிர்க்க முடியவில்லை. ‘‘விஸ்வரூபம் சினிமா இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?’’ என்று பிரெஸ்மீட்டில் கேள்வி பாய்ந்தபோது, ‘‘நானா...? இஸ்லாமியர்களுக்கு எதிராகவா? யாரைப் பார்த்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள்?’’ என்று உலகநாயகன் சீறியிருக்கிறார். ‘‘நீங்கள் என்பதால்தான், இந்தக் கேள்வியே எழுகிறது,’’ என்று மீடியாகாரர்கள் யாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அதில், தப்பில்லை. 
ஆன்மீகத்தில் பழுத்த பழமான சூப்பர் ஸ்டார், படம் முடித்தது போக பாதிநேரம் இமயமலை, பாபா, கயிலாய குகை, ஆன்மீக தவம் என்றுதான் பழியாகக் கிடப்பார். அவர் கூட, மாற்று சமூகங்களை விமர்சனம் செய்து எந்தப் படமும் செய்ததில்லை. தீவிரவாதம் பற்றி ஆப்கானிஸ்தானில் படம் எடுக்கும் போது, அங்கிருப்பவர்களை இஸ்லாமியர்களாகத்தானே காட்டமுடியும்என்பது உலகநாயகன் வாதம். தீவிரவாதம் பற்றி படம் எடுக்க ஏன் ஆப்கானிஸ்தான் வரை போகவேண்டும். இன்றைய தேதிக்கு, மனித நாகரிகங்களை, மரபுகளை, நெறிமுறைகளை... அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு கொத்துக் கொத்தாய் உயிர்களை கொன்று குவித்த, குவிக்கிற உலக மகா தீவிரவாதம், பயங்கரவாதம் நமக்கு மிக அருகே நடந்து கொண்டிருப்பது உலகநாயகன் அறியாததா
தீவிரவாதம் பற்றி மிக உண்மையாக படம் எடுக்கிற நேர்மையோ, துணிச்சலோ, ஆண்மையோ அவருக்கு இருந்தால், ஏன் சிங்களத் தீவிரவாதம் குறித்து ஒரு சினிமா எடுக்கக் கூடாது? அது மட்டும் மாட்டவே மாட்டார். ஆனால்ஈழத் தமிழனை ஏமாளியாக, கோமாளியாக சித்தரித்து எடுப்பது என்றால், டபுள் ஓகே. தெனாலி படத்தில் அப்படித்தான், தொட்டதெற்கெல்லாம் பயந்து நடுங்கும் ஒரு கோமாளி ஆண் மகனாக ஈழத் தமிழனை காட்சிப்படுத்தினார். 
உலகமெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறவுகளை, ரத்த சொந்தங்களை, நண்பர்களை, குழந்தைகளை அனாதைப் பிணங்களாக தொலைத்து விட்டு கண்ணீருடன் நின்ற, 2010ம் ஆண்டில், உலகநாயகனின் சினிமா மன்மதன் அம்புவெளியானது. அதிலும், ஒரு ஈழத்தமிழனை காட்சிப்படுத்தியிருந்தார் உலக நாயகன். எப்படி? சினிமா நடிகையை பார்க்கவும், பேசவும் அலையோ அலை என அலைந்து திரிவதாகவும், நடிகையின் காலடிச் செருப்பாகவும் மாறத்தயார் என்பதாக வசனம் பேசியபடியாகவும், ஈழத்தமிழனை பரதேசியாக உலாவச் செய்தார் உலகநாயகன். என்ன ஒரு வக்கிரக்குணம்? அந்தத் தலைமுறையே சோகத்தில் ஆழ்ந்து, அமிழ்ந்து கிடக்கையில், இப்படி கற்பனை செய்து, நையாண்டி படுத்த உலகநாயகன் ஒருவர் தவிர வேறு யாராலும் முடியாது... சத்தியமாக! 
சினிமா படம் எடுப்பது வெறும் வியாபார சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே அல்ல. அது ஒரு கலை. அது ஒரு அறிவியல். ஒரு சினிமா தயாரிப்பதற்கு முன்பாக, சற்றே ஆழ்ந்து சிந்தித்து, கையாளக்கூடிய கதையையும், கதைக்களத்தையும் முழுமையாக கற்றறிந்து எடுத்தால் மட்டுமே அந்த சினிமா, உலகத்தரத்தை உறுதிப்படுத்தும். ஆனால், தமிழ் சினிமாவில் இன்று இருக்கிறவர்களில் 90 சதவீதம் பேர் இதெல்லாம் அறியாத தற்குறிகள் என்பது நமது துரதிர்ஷ்டம். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திரித்து சினிமா எடுக்கிறவர்களுக்கு, இந்த தேசத்தின் உருவாக்கத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்து எவ்வளவு தூரம் தெரிந்திருக்கும்? அன்பை போதிக்கிற ஒரு நேர்மையான மார்க்கம் அது என்பதாவது அவர்கள் அறிந்து வைத்திருப்பார்களா
இந்தியாவில் மத மோதல்கள் எப்போது துவங்கின? வரலாறு தெரியுமா அவர்களுக்கு? இரண்டு சம்பவங்களுக்குப் பிறகே, இந்திய தேசம் மத மோதல்களால் தனது மண்ணில் ரத்தம் பூசிக் கொள்ளத் துவங்கியது. ஒன்று, பாபர் மசூதி இடிப்புச் சம்பவம். மற்றொன்று, அதற்கு முந்தையது... சுதந்திர போராட்ட காலத்தில், இந்து மகாசபா துவக்கப்பட்ட காலம். இந்தியா, இந்துக்களுக்கே என்ற வாதம் அழுத்தமாக முன்வைக்கப்பட்ட நேரத்தில், முதல் பிளவு உண்டானது. ஆனாலும், இஸ்லாமிய சகோதரர்கள் கைகோர்த்து, இணைந்து வாழவே விருப்பமாக இருந்திருக்கிறார்களே அன்றி, பிரிந்து செல்ல அல்ல. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறை படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். 
அது, 1905ம் ஆண்டு. இந்துக்கள், முஸ்லீம்களிடையே பிரிவினையையும், தீராப்பகையையும் ஏற்படுத்தும் நோக்கில் வங்கப்பிரிவினைக்கு வித்திடுகிறது ஆங்கிலேயே அரசு. வங்காளம், பீகார், ஒரிசா, சோட்டா நாக்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஏழு கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக இருந்தது அன்றைய வங்கம். முஸ்லீம்கள் அதிகம் இருந்த பகுதியை கிழக்கு வங்கம் என்றும், இந்துக்கள் அதிகமிருந்த பகுதியை மேற்கு வங்கம் என்றும் இரண்டாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது ஆங்கில அரசு. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்களிடம் ஆங்கில அரசு நேரடியாகவே டீலிங்பேசுகிறது. ‘‘இஸ்லாமியர்களின் கலாச்சார தலைநகராக இனி டாக்கா விளங்கும். இஸ்லாமியர்களுக்கு இந்த புதிய பகுதியில் அனைத்து விதமான வசதிகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும்,’’ என ஆசை வார்த்தை காட்டுகிறது. 
வங்கத்தை பிரிப்பதால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அப்போதைய வைஸ்ராய் கர்சன் 1904, பிப்ரவரி 18ல், டாக்காவில் உறுதியளித்துப் பேசுகையில்,
‘‘The partition would make Dacca, the centre possibly the capital of new and self-sufficing province which must give to the people of these districts, by reason of their numerical strength and their superior culture, the preponderating voice in the province so created, which would invest the Mohammedans in East Bengal with an unity, which they have not enjoyed since the days of the old Musalman Viceroys and Kings which would go far to revive the traditions which the historical students assure us, once attached to the Kingdom of East Bengal....’’
என ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார். 
ஆனாலும், மயங்கி விடவில்லை இஸ்லாமிய சகோதரர்கள். வங்கத்தில் உள்ள இந்துக்களுடன் கைகோர்த்து ஆங்கில திட்டத்தை அடியோடு எதிர்க்கின்றனர். வெறுத்துப் போன கர்சன், டாக்காவின் அப்போதைய நவாப், சலிமுல்லாவை சந்திக்கிறார். டாக்காவின் ஈடு இணையற்ற அதிகாரம் இனி உங்களுக்குத்தான் நவாப்என ஆசை காட்டியதோடு, ரூ.14 லட்சம் பணத்தையும் வாரி வழங்குகிறார். அடுத்த விநாடி, ஆங்கிலேயர் கட்சியில் நவாப். வங்கப்பிரிவினைக்கு முழு ஆதரவு என அறிக்கை விடுகிறார் நவாப் சலிமுல்லா. அவரது ஒத்துழைப்புடன் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறது ஆங்கில அரசு. 
நவாப் வழிதவறி வைஸ்ராய் பக்கம் போனாலும், இஸ்லாமியர்கள் யாரும் அந்த சிந்தனைக்குக் கூட செல்லவில்லை. இந்துக்களுடன் இணைந்து வங்கப்பிரிவினையை முழுமூச்சுடன் அவர்கள் எதிர்த்தார்கள். 1905, செப்டம்பர் 23ல், கல்கத்தா நகரில் இஸ்லாமிய சமுதாயத்தினர் மிகப் பிரமாண்ட கூட்டம் நடத்தி, வங்கப்பிரிவினையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினர். கல்கத்தாவின் பிரசித்தி பெற்ற காளி கோயில் முன் இந்துக்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து, போராட்டத்தை முன்னெடுத்தனர். நவாப் மட்டும் கூட்டணியில் சேர்ந்து என்ன பயன்? இஸ்லாமியர்கள் யாரும் மனம் மாறவில்லையே? மக்கள் ஆதரவில்லாததால், ஆங்கில அரசு தோற்றுப்போனது. 1911, டிசம்பர் 12ல் இந்தியா வந்த இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், வங்கப்பிரிவினை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். 
சலுகைகளும், பணமும் வாரி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டும் கூட, தங்கள் உறுதிப்பாட்டில் இருந்து துளியளவும் விலகாத இஸ்லாமியர்களின் அந்த நேர்மையும், தேசப்பற்றும்தானே... வங்கப்பிரிவினை சதியை முறியடித்தது. அதன்பிறகு தேசப்போராட்டத்திலும் அவர்களது மகத்தான பங்களிப்பு மறக்கக்கூடியதா? வரலாறு தெரியாத ஒரு கூட்டம், அந்த மக்களை தேசதுரோகிகளாக சித்திரித்து இன்னமும் சினிமா பிடித்து வெளியிட்டுக் கொண்டிருப்பது, மன்னிக்கமுடியாத தவறு. 
மக்கள் நடமாடும் பகுதியில் குண்டு வைக்கிற ஒரு தீவிரவாதியோ, அவனது இயக்கமோ ஒடுக்கப்படவேண்டியது என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்கப் போவதில்லை. அதற்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதும் நோக்கமல்ல. ஆனால், தீவிரவாதம் என்பது சிந்தனை சம்பந்தப்பட்ட விஷயமேயன்றி மதம் வழி வருவதல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தீவிரவாதியாக இந்துவும், இஸ்லாமியனும், கிறிஸ்தவனும்.... - ஏன், பக்கத்து நாட்டில் பவுத்தனும் - யாரும் இருக்கலாம். ஒரு தீவிரவாதி செய்கிற அக்கிரமத்துக்கு, அவனது மதம் பொறுப்பாக முடியாது. 
ஒரு பாவமும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரும், அவரது பச்சிளம் குழந்தைகளும் ஒரிசாவில் மதவெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் மறந்திருக்க முடியாது. பஜ்ரங் தள பாவிகள் நடத்திய அந்த படு பயங்கர சம்பவத்துக்காக, இந்துக்கள் அனைவருமே பழி பாவத்துக்கு அஞ்சாத பாதகர்கள் என யாரும் அறிக்கை வெளியிடவில்லை; சினிமா எடுக்கவில்லை. எரித்துக் கொன்றவனை ஒரு மத அடிப்படைவாதியாக, பயங்கரவாதியாக மட்டுமே பார்த்தார்களே தவிர, அவனது மதத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. மசூதி இடிப்பிலும் அப்படியே. இடித்தவனின் மதத்தவரை யாரும் விரோதக் கண் கொண்டு பார்க்கவில்லை. அப்படி இருக்கையில், இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி நடைமுறை ஏன்? அவர்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை சினிமா சகோதரர்கள் இனியாவது நிறுத்திக் கொள்வது, சமூக ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் நல்லது. 
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
நன்றி - கீற்று 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger