சென்னை: "உழைத்து, சம்பாதித்து தம் மனைவி, மக்களைக் காப்பாற்றுவது ஒவ்வொரு ஆணின் கடமை" என சென்னை உயர் நீதிமன்றம் ஜீவனாம்ச வழக்கு ஒன்றில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் ராணி(இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்துடன் பொறியாளராக பணியாற்றி வந்த முருகன், திருமணத்துக்குப் பின்னர் குடிக்கு அடிமையானதால் வேலையினை இழந்தார்.
வேலைக்குச் சென்றுகொண்டிருந்த ராணியின் வருமானத்தைக் கொண்டே குடும்பச் செலவுகள் ஈடுகட்டப்பட்டன. இந்நிலையில், தினசரி குடிப்பதற்காக பணம் கேட்டு ராணியினை முருகன் துன்புறுத்தத் துவங்கியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராணி, ராசிபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு 2009 ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், முருகன் ராசிபுரம் நீதிமன்றத்தில் தம் மனைவியிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு மற்றொரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில்,
"நான் வேலை எதுவும் இன்றி வருமானம் இல்லாமல் உள்ளேன். என் மனைவி நல்ல சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். எனவே எனக்கு மாதம் ரூ.5 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்கவும், விவாகரத்து வழக்கை நடத்த ரூ.20 ஆயிரம் வழங்கவும் என் மனைவிக்கு உத்தரவிடவேண்டும்" என்று கோரியிருந்தார்.
விசாரணை நடத்திய நீதிபதிகள், முருகனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை முருகன் தாக்கல் செய்தார். முருகனின் மறுசீராய்வு மனு நீதிபதிகள் தர்மராவ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முருகனின் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். தம் தீர்ப்பில்,
"உழைத்து, ஊதியம் பெற்று தம் மனைவி, மக்களைக் காப்பாற்றுவது ஒவ்வொரு ஆணினுடைய கடமையாகும். அதேநேரம், தம்பதியர்களில் ஒருவர் ஊனம் உள்ளிட்ட காரணத்தினால் வருமானம் இல்லாமல் இருக்கும்போது, வருமானம் பெறும் மற்றவரிடமிருந்து ஊனமுற்றவர் ஜீவனாம்சம் பெற இந்து திருமண சட்டத்தில் வழிவகை உள்ளது.
அதேவேளை, ஒரு வழக்கில் கணவர் வேலைக்குச் செல்ல தகுதி இருந்தும், வேண்டுமென்றே வேலைக்குச் செல்லாமல் இருந்தால், மனைவியிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று ராஜஸ்தான் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த வழக்கில், முருகன் வறுமையிலோ, ஊனமுற்றோ இருக்கவில்லை. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அதன் அடிப்படையில், இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனுதாரர் முருகன் தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சரிதான். எனவே, இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்." என்று நீதிபதிகள் கூறினர்.
இந்நேரம்
Post a Comment