மரணித்த பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா?
"இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்'' என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம். இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம். மரணித்த பின் உயிர்த்தெழுதல் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.ஒன்று மரணித்தல்
மற்றொன்று உயிர்த்தெழுதல்.
இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பக்கூடிய கிறித்தவர்கள் இதை நம்புவதற்கு முன் அவர் மரணித்ததை நம்புகிறார்கள்! மரணித்தல் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைச் சிந்தித்தார்களா? யார் மரணத்தைச் சுவைக்கிறாரோ அவர் கடவுளாக இருக்கவே முடியாது என்று பைபிள் ஐயத்திற்கிடமின்றி கூறிக் கொண்டிருக்கிறது.
"பாவஞ் செய்கிற ஆத்மாவே சாகும்... " - (எசக்கியேல் 18:20)
"மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்கின்றனர். எனவே அனைவரும் பாவஞ்செய்தவர்களே. இறைவன் மாத்திரம் தான் இதிலிருந்து தூய்மையானவன். இயேசு மரணித்ததால் அவரும் பாவம் செய்திருக்கிறார்; அதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது'' என்பதை இந்த வசனம் கூறவில்லையா?
"கர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா..." - (எரேமியா 10:10)
கடவுள் உயிருடன் இருக்க வேண்டும் எனவும், நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் எனவும் இவ்வசனம் கூறுகிறது. "நிரந்தரமான உயிருள்ளவர்' என்ற தகுதியை மரணித்ததன் மூலமும், குறிப்பிட்ட காலம் வரை இல்லாமல் இருந்து பின்னர் பிறந்ததன் மூலமும் இயேசு இழந்து விடுகிறாரே! இதன் பின்னரும் அவரிடம் கடவுள் தன்மை இருப்பதாக நம்புவது பைபிளின் போதனைக்கே முரண் என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவில்லையா?
"பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை. இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?" - (ஏசாயா 40:28)
கடவுளுக்குச் சோர்வோ, களைப்போ கூட ஏற்படக் கூடாது! மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன்? இதன் பின்னரும் இயேசுவிடம் கடவுள் தன்மையிருப்பதாக எப்படி நம்ப முடியும்?
"நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!" - (முதலாம் தீமோத்தேயு 1:17)
கடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாது; மற்றவர்களுக்கு அவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது. இயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும் அமைந்திருந்தன. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.
கடவுள் யாருக்கும் காட்சி தரக் கூடாது என்ற பைபிளின் மேற்கண்ட கூற்றுக்கு மாற்றமாக இயேசு பலராலும் காணப்பட்டுள்ளார். அவரை அனேகம் பேர் கண்களால் கண்டதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. பலராலும் காணப்பட்ட ஒருவர் ஒருக்காலும் கடவுளாக முடியாது.
"இயேசு மரணித்து விட்டாலும் மரணித்த பின் உயிர்த்தெழுந்திருப்பதால் அவர் கடவுளாகி விட்டார். உலகில் வாழும் போது தான் மனிதராக வாழ்ந்தார். மரணித்து உயிர்த்தெழுந்த பின் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது'' என்று கிறித்தவ மத குருமார்கள் கூறுவதை நாம் அறிவோம். இயேசு மரணித்த பின் உயிர்த்தெழவில்லை; அது தவறான தகவல் என்பதை "இயேசுவின் சிலுவைப் பலி'' என்ற தொடரில் பின்னர் நாம் விளக்கவுள்ளோம். அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக ஆகி விடவில்லை. ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இயேசு உயிர்த்தெழுந்த பின் அப்படி என்ன தான் கூறினார்? அடுத்த தொடரில் .....
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Post a Comment