கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடை பெற்று வந்த இனவாத குரோத பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக ஓரளவுக்கு குறைந்திருந்தது.
ஆரம்பத்தில் இருந்தளவுக்கு படு பயங்கரமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு ஆங்காங்கே முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
ஆனால் முஸ்லிம் தலைமைகளும், சில இயக்கங்களும் “இனி எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. யாரும் அஞ்சத் தேவையில்லை“ என்ற அடிப்படையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதற்கான காரணம் என்ன?
பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் பற்றிய செய்திகள் குறைவாக இடம்பிடித்தது. இன்னும் சொல்லப் போனால் சில செய்திகள் மீடியாக்களில் இடம் பிடிக்கவே இல்லை எனலாம்.
எது எப்படியோ இனி எல்லாம் முடிந்துவிட்டது என்றொரு சிந்தனைக்கு விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் தள்ளப்பட்டு விட்டார்கள். அதிலும் இலங்கை முஸ்லிம்களில் மத்ஹபை பின்பற்றுவர்கள் அதிகம். குறிப்பாக ஷாபி மத்ஹபை பின்பற்றும் தப்லீக் ஜமாத்தினர் ஒவ்வொரு ஊரிலும் நிறைந்திருக்கின்றார்கள்.
அதே போல் தவ்ஹீத், ஜமாத்தே இஸ்லாமி என்று பலரும் ஒரு வகையில் இந்த சிந்தனைக்குள் ஈர்க்கப்பட்டுவிட்டார்கள்.
தப்லீக் ஜமாத்தினரைப் பொருத்தவரையில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா என்ன முடிவை அறிவிக்கின்றதோ அந்த முடிவில் நிலைத்திருப்பார்கள். குறிப்பாக (இடர்கால) குனூத் ஓதும்படி வேண்டிக் கொண்ட உலமா சபை, பின்னர் அதை நிறுத்தும் படியும் வேண்டிக் கொண்டது.
பிரச்சினை இருக்கும் போது குனூத் ஓத சொன்னார்கள். இப்போது பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டது அதனால் ஓத வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள். என்ற சிந்தனைக்குள் தாராளமாக தப்லீக் வாதிகள் ஈர்க்கப்பட்டுவிட்டார்கள்.
அதே போல் அமீர் சொன்னால் நாங்கள் எதனையும் செய்வோம் என்ற கருத்துப்பட ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தை சார்ந்தவர்கள் தங்கள் காலத்தை கடத்தும் அதே நேரம் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையில் தங்கள் ஜமாத்தை சார்ந்தவர்களும் இடம்பிடித்திருப்பதினால் உலமா சபை சொல்வதையே தாரக மந்திரமாக ஏற்று செயல்படுவதற்கு இவர்களும் தயாராகிவிட்டார்கள்.
இறுதியாக தவ்ஹீத் பேசும் சகோதரர்களோ இரண்டு வகையினாராக இந்த விஷயத்தில் தங்களை அடையாளம் காட்டுகின்றார்கள்.
முதல்சாரார் ஜம்மிய்யதுல் உலமாவை ஏற்றுக் கொண்டு, நிதி நிறுவனங்களின் கொத்தடிமைகளாக இருக்கக் கூடியவர்கள். இவர்களைப் பொருத்தவரையில் தங்கள் நிதி நிறுவனங்கள் உலமா சபையை நம்பியுள்ளது. அதனால் தாங்களும் உலமா சபை சொல்வதை நம்பி நடக்க தயார் என்று உளப்பூர்வமான முடிவுக்கு வலிந்து ஈர்க்கப்பட்டுவிட்டார்கள்.
இரண்டாவது சாரார் நமக்காக உண்மையில் குரல் கொடுப்பவர்கள் யார்? என்பதை அறிந்து அவர்களின் ஆலோசனைப் படி தங்கள் முடிவை நிர்ணயிப்பவர்கள். இவர்களைப் பொருத்த வரையில் இன்னும் இனவாதம் முடிவுக்கு வரவில்லை. ஏதோ ஒரு பெயரில் மீண்டும் இது தலை தூக்கும் அதை எதிர் கொள்ளும் முறைகளை நாம் தெளிவாக அறிந்து அதன்படி அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டில் இருக்கின்றார்கள்.
எது எப்படியோ “எல்லாம் முடிந்துவிட்டது” என்ற நிலைக்கு பெரும்பாலான முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புக்களும் விரும்பியோ, விரும்பாமலோ வந்துவிட்டார்கள்.
ஆனால்…. உண்மையில்…..
இனவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்விக்கான உண்மையான பதில் “இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்பது தான். உண்மையில் ஒரு மாத காலங்கள் பிரச்சினைகள் குறைந்திருந்ததே தவிர முடிவுக்கு வரவில்லை.
கடந்த ஒரு மாதத்திற்குள்ளும் கூட, கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சென்ற முஸ்லிம் சகோதரியின் ஹிஜாபை அகற்குவதற்கான முயற்சிகள் நடை பெற்றன. இது போல் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே சம்பவங்கள் நடை பெற்றது. ஆனால் அவை மீடியாக்களில் பெரியளவு இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே “எல்லாம் முடிந்துவிட்டது” என்ற முஸ்லிம்களின் போலி எண்ணம் வலுப்பெற்றது என்பது பின்புலக் காரணியாகும்.
எது எப்படியோ அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்திருக்கும் பொது பல சேனாவின் சகாக்கள் மீண்டும் பிரச்சினைகளை உண்டாக்கும் விதமாக கடந்த 11ம் தேதி கேகல்லையில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் அவர்கள் நினைத்த அளவுக்கு ஆதரவு கிடைக்காவிட்டாலும், வழமையான தங்கள் பாணியில் இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.
அதைத் தொடர்ந்து தாம் நடத்துகின்ற பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இலங்கையில் அல்-கைதா, அல்-ஜிஹாத் அமைப்புக்கள் இயங்குகின்றன. என்ற தங்களின் வழமையான கப்ஸாவை தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.
அதே போல் தவ்ஹீத், வஹாபி இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்ற பழைய புராணத்தை மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்கள்.
இவைகளெல்லாம் இனவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. மட்டுமன்றி அனகாரிக தர்மபாலவின் அடிச்சுவட்டை தொடர்ந்து பயணிப்பதற்கு இந்த இனவாதிகள் தயாராகியிருக்கின்றார்கள் என்பதை இந்த செயல்பாடுகள் தெளிவா உணர்த்துகின்றன.
ஆதலினால்…. நமது கடமை……
இப்போது நம் முன்னால் இருக்கின்ற கடமை என்ன? இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தெளிவாக எத்திவைக்க வேண்டும். குறிப்பாக சிங்கள மொழி மூலமாக பிரச்சாரத்தை பெருவாரியாக நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து சிங்கள மொழி மூலமான பிரச்சாரத்திற்கான சிறந்த திட்டமிடலுடன் நமது தஃவா பயணத்தை தொடர்வோமாக.
rasminmisc
Post a Comment