சவூதி அரேபிய அரசாங்கம் ‘நிதாகத்' என்கிற சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நிதாகத் சட்டம், உள்நாட்டு சவூதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும். லட்சக்கணக்கான சவூதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, கொண்டு வரப்பட்டுள்ள நிதாகத் சட்டத்தால் சவூதிவாழ் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியால் மக்கள் மத்தியில் அச்சவுணர்வு நிலவி வருகிறது.
சவூதி அரேபியா கொண்டு வந்திருக்கும் நிதாகத் சட்டம் என்ன சொல்கிறது? இப்புதிய தொழிலாளர் சட்டத்தின் ஷரத்துகள் என்ன சொல்கின்றன என்ற எந்த விபரத்தையும் தெரிந்து கெள்ளாமல், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்ற சவூதி அரேபிய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்றும் இதனால் இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் பீதி கிளப்பப்படுகிறது. ஆனால், இந்தியர்கள் உள்ளிட்ட சவூதிவாழ் வெளிநாட்டவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற வகையில்தான் இந்த சட்டம் அமைந்திருக்கிறது. சவூதி அரேபிய தனியார் தொழில் நிறுவனங்களில் 10 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது நிதாகத் சட்டம்.
சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இதுவரை ஒரு இந்தியர்கூட நிதாகத் சட்டத்தின்படி தான் வேலை இழப்புக்கு ஆளானதாக புகார் அளிக்கவில்லை என்கிறது. ஆயினும் நிதாகத் சட்டம் குறித்த அச்சவுணர்வு சவூதிவாழ் இந்தியர்கள் மத்தியில் வியாபித்திருப்பதால் அச்சவுணர்வு ஏற்பட்டுள்ளது. சவூதி கெஜட் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு நிறுவனம் 1 முதல் 10 ஊழியர்களை வைத்திருந்தால் அந்நிறுவனத்தில் நிதாகத் சட்டம் அமல்படுத்தப்படாது. இதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
10 முதல் 49 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில் அந்நிறுவனம் 5-24 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். 50-499 வரை ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் 6-27 சதவீத உள்ளூர் மக்களுக்கும், 500-2999 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் 7-30 சதவீதம்வரை உள்ளூர் மக்களுக்கும், 3000த்திற்கு மேல் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் 8-30 சதவீதம் உள்ளூர் மக்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிறது நிதாகத் சட்டம். இந்நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய என வகைப்படுத்தியிருக்கிறது இந்த சட்டம்.
தொழில் நிறுவனங்கள் புளூ சோன், கிரீன் சோன், எல்லோ சோன், ரெட் சோன் என 4 சோன்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புளூ மற்றும் கிரீன் சோன் அந்தஸ்த்தில் வரும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும், எல்லோ மற்றும் ரெட் சோனில் வரும் நிறுவனங்களுக்கு சலுகை குறைப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் வகைப்படுத் தப்பட்டுள்ளன. உதாரணமாக புளூ சோன் அந்தஸ்தில் வரும் நிறுவனங்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பணியாளர்களை தருவித்துக் கொள்ள முடியும். இவர்களது விசா தொடர்பான பிராஸஸ் இலகுவாக இருக்கும். அதேபோல, இந்நிறுவனங்கள் எல்லோ மற்றும் ரெட் சோனிலிருந்து பணியாளர்களை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அந்த நிறுவனங்களின் (ரெட் மற்றும் எல்லோ) அனுமதியைக் கூட பெற வேண்டியதில்லை.
கிரீன் சோன் அந்தஸ்து கொண்ட நிறுவனங்களுக்கும் இதேபோலத்தான். ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை புதிய விசாவிற்கு இந்நிறுவனம் விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களின் தொழிலை (வேறு தொழிலுக்கு) மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக, டிரைவராக இருக்கும் வெளிநாட்டுப் பணியாளரை ரிஷப்சனிஸ்டாக மாற்றிக் கொள்ளலாம். இந்நிறுவனம் பணியாளர்களின் வேலைக்கான பர்மிட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும். அதே சமயம், எல்லோ சோன் அந்தஸ்தில் உள்ள நிறுவனங்கள் புது விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. இரண்டு வெளிநாட்டுக்காரரை வெளியேற்றினால்தான் ஒரு விசா கிடைக்கும். தனது பணியாளர்களின் தொழிலையோ, விசாவையோ இந்நிறுவனங்கள் மாற்றம் செய்ய முடியாது.
இந்நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய வெளிநாட்டவரின் வேலைக்கான பர்மிட்டை புதுப்பிக்க முடியாது. இதேபோல, ரெட் சோன் அந்தஸ்து கொண்ட நிறுவனங்கள் தொழிலை மாற்றவோ, விசாவை மாற்றவோ முடியாது. புதிய விசாக்களுக்கும் விண்ணப்பிக்க முடியாது. அதே சமயம், எல்லோ மற்றும் ரெட் சோன் அந்தஸ்து கொண்ட நிறுவனங்கள் தங்களின் அந்தஸ்தை (புளூ மற்றும் கிரீன் சோன்களுக்கு நிகராக) உயர்த்திக் கொள்ள முறையே 9 மாதங்களும், 6 மாதங்களும் சலுகைக் காலம் பெறுகின்றன. இதற்குள் அவை தமது நிலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆக, இந்த நிதாகத் சிட்டம், சவூதியின் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளையும், சலுகைக் குறைப்பையும் கூட செய்துள்ளது.
எப்படிப் பார்த்தாலும், ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களையும் வெளியேற்றும் திட்டம் சவூதி அரசாங்கத்திடம் இல்லை என்றாலும், சிறிது சிறிதாக பணியாளர்களை குறைக்கும் முயற்சிகளையும் அது எடுத்திருக்கிறது. ஆனால், இந்திய அரசு - சவூதியின் உள்ளூர் தொழிலாளர் சட்டத்தில் மூக்கை நுழைக்க கால அவகாசம் கேட்டு கெஞ்ச வேண்டிய தேவை இல்லை. அதைவிட, இந்தியாவிற்கு பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இந்தியர்களின் நலனுக்காக மாநிலங்கள் தோறும் நல வாரியத்தை தொடங்கி அதன் மூலம் தாயகம் திரும்பும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு வட்டியில்லா கடன் அல்லது மானியம் வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்விற்கு உத்திரவாதம் தரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய அரசாங்கம் இதை நிறைவேற்றுமா ?என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் ......
நன்றி - கீற்று
Post a Comment