இஸ்லாம் கூரும் இனிய இல்லறம்


illaram
இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இல்லறம் சரியாக இயங்கினால் தான், நமது சமூகம் முறையாக இயங்கும். 
நாம் எத்தனையோ சகோதரர்களையும், சகோதரிகளையும் பார்க்கின்றோம்.
இல்லற வாழ்வில் இனிமை இல்லாது, சரியான தெளிவு இல்லாது தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பசுமையான பூமியில் தான் பயிர்கள் விளையும், கரடு முராடான பூமியில் முற்செடிகள்தான் விளையும். பசுமை நிலத்தைத் தேர்வு செய்வதும், பாழ்பட்ட நிலத்தைத் தேர்வு செய்வதும் நம் கையில்தான் உள்ளது. நாம் அதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் இருக்கின்றது. இஸ்லாம் நமக்கு இல்லறம் பற்றிய நல்ல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அவ்வகையில் அல் குர்ஆன் கணவன்-மனைவி உறவை ஆடைக்கு ஒப்பிடுகின்றது.
“மனைவியர்களான அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், கணவர்களாகிய நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல் குர்ஆன் 2:187)
மேற்கூறிய வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும், மனைவியை கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. ஆடை மாறுவது போல நமது துணையை மாற்றுவது என்று இதற்கு நாம் விளக்கம் கொள்ள முடியாது. நம் மானம் காக்கும் ஆடையைத் தேர்ந்தெடுக்க நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை சற்று யோசித்துப் பார்த்தால் ‘ஆடை’ என்ற உவமை கணவன்-மனைவி உறவுக்கு எந்த அளவுக்கு ஒத்துப் போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்கு சமானமாகும். நாம் ஆடையைத் தேர்ந்தெடுக்கும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறோம். நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை நமக்கு ஏற்றதாக, அளவாக, அழகைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரின் மன நிலையும் ஒன்றுதான்.
கூலி வேலை பார்க்கும் ஒருவன் ஆயிரக்கணக்கில் விலையுள்ள ஓர் ஆடையைத் தேர்வு செய்வதில்லை. தன் வருமானத்திற்கும் தனக்கும் ஏற்றாற்போல் தான் தேர்வு செய்வான். மூட்டை தூக்கி வேலை செய்யும் ஒருவன் கோட்-சூட்டை வாங்க முற்படுவதில்லை, அப்படிச் செய்தாலும் அவனால் அதைப் பேணிக் காக்கவோ அல்லது அதற்கு ஏற்றவாறோ அவனால் வாழ இயலாது.
கோட்-சூட் அணியும் ஒருவர் பேருந்தில் பயணம் செய்ய இயலாது, தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென வாடைகைக்கு வண்டி எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார். நம் நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் ஏற்றாற்போல் நம் ஆடையைத் தேர்வு செய்யும் நாம் இத்தனை முனைப்புடன் செயல்படுகிறோம் என்றால் நம் வாழ்க்கை ஆடையாகிய துணையைத் தேர்ந்தெடுக்க நாம் எத்தனை முனைப்புடனும் கவனத்துடனும் செயல்படவேண்டும்.
சிலர் தங்கள் தகுதியை மறந்து தகுதிக்கு மீறிய ஒருவரைத் துணையாக தேர்ந்தெடுப்பர், அதனால் வரும் பின் விளைவுகளை சற்றும் யோசிக்கமால் செய்யும் தவறால், அந்த வாழ்க்கை எப்பொழுதும் போராட்டத்திலும், நிம்மதியற்ற நிலைமையிலும் அமையும்.
எடுத்துக்காட்டாக, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் வசதி படைத்த பெண்ணை திருமணம் முடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றால், அவள் பணக்கார வாழ்க்கையை வாழ கற்று இருப்பாள், தன் பணக்கார வாழ்க்கையில் தன் தகுதிக்கு இணையான நண்பர்களுடன் சகஜமாகப் பழகி கற்று இருப்பாள், ஆனால் இவனால் அவளது தகுதிக்கு ஏற்ப செலவு செய்ய முடியாமலும், அவளின் நண்பர்களுடன் சரி சமமாகப் பேசிப் பழக முடியாமலும் மோசமான நிலைக்கு ஆளாக்கப்படுவான்.
அது இவனாக இருந்தாலும், இவளாக இருந்தாலும் சமமே! இவ்வாறான சூழ்நிலையில் வாழ்பவர்களின் இல்லறம் இனிமையாக அமைய வாய்ப்பில்லை. இப்படி பல இக்கட்டுகளுடன் வாழும் ஒருவரது இல்லறம் இனிமையானதாக இருக்காது. கணவன், மனைவி என்னும் வாழ்க்கை ஆடையைத் தேர்வு செய்யும்போது பெரிதும் நிதானம் தேவை.
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப் படுகின்றாள்,
1.        அவளது பணத்திற்காக
2.        அவளது குடும்ப கெளவரவத்திற்காக
3.        அவளது அழகுக்காக
4.        அவளது மார்க்கத்திற்காக
“நீ மார்க்கம் உடையவளைப் பற்றிக் கொள், உன் கரத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், எனவே நம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மார்க்கமுடைய பெண்ணைத் தேர்வு செய்வோமாக!
ஒருவரின் மானத்தைக் காப்பது தான் ஆடையின் அடிப்படை அம்சம். ஆனால் ஆடையை நாம் மானத்தைக் காக்க மட்டுமல்ல, நமக்கு அழகைத் தரக் கூடியதாக, அந்தஸ்தைத் தரக் கூடியதாக, இயற்கை கால வகைகளுக்கு ஏற்றாற்போல் சூடு, குளிர் என்று பிரித்து பார்த்து தான் தேர்வு செய்கின்றோம்.
இது நாம் உடுத்தும் உடைக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைத் துணைக்கும் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல! ஏன் இன்னும் சில ஆண்கள் அந்த உணர்வுகள் கூட தனக்கு மட்டுமே சொந்தமானது என்று வரம்பு மீறுவார்கள், “மிருகங்கள் போல உங்கள் மனைவியரிடத்தில் செல்லாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
மிருகங்கள் தான் தங்களுடைய தேவைகளை மட்டும் தீர்த்துக் கொண்டு போய் விடும். மனைவி கணவனுடைய உணர்வுகளையும், கணவன்  மனைவியின் உணர்வுகளையும் மதித்தும், அறிந்தும் நடந்து கொள்ள வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்.
இவன் தான் உன் கணவனா என்று அவளுக்கு அவமானத்தையோ, அசிங்கத்தையோ அல்லது இவனின் மனைவி என்றால் எப்படி வேண்டுமென்றாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒரு பெண் சந்திக்கும் நிலைமையை உருவாக்கக் கூடாது. அதே போல் இவளா உன் மனைவி என்று பார்ப்பவர்கள் ஒரு ஆண் மகனைக் கேவலப்படுத்தும் அளவில் மனைவியும் அமைந்து விடக் கூடாது.
இல்லற வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோ, விட்டுக் கொடுத்தோ நடந்து கொள்ள வேண்டும், இது செய்தால் குற்றம், இது சரியில்லை, அது சரியில்லை என்று தொட்ட தொண்ணூறுக்கும் குறை சொல்வதால் தங்கள் வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது என்பதை இருவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை மாற்றி ஒருவர் தங்கள் குடும்பத்தின் மீதோ அல்லது குடும்ப நபர்களின் மீதோ அவசியமில்லாத வார்த்தைகளை விட்டு அவர்கள் அத்தனை காலம் ஒட்டி உறவாடியவர்களைப் பற்றிப் பேசி அவர்களின் அன்பைச் சீண்டிப் பார்ப்பதால் வீண் வாக்குவாதமும், அவசியமற்ற பிரச்னைகளும் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
பிரச்னை வரும் போது ஒருவர் நெருப்பாக இருந்து கோபப்படும்போது மற்றொருவர் பஞ்சாக இருந்து பிரச்னையை வலுப்படுத்தாமல், நீராக இருந்து அணைக்க வேண்டும். இவ்வாறு ஒருவரையொருவர் அறிந்து செயல்பட்டால் இல்லறம் இனிமையாக செயல்படும்.
“எந்தவொரு முஃமினான ஆணும், முஃமினான தன் மனைவியிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தி அடையட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள்.கூறுகிறார்கள்.
கணவன் மனைவியைப் பற்றி, இவள் ஒழுக்கமற்றவள், இவள் படிப்பற்றவள், சரியான முறையில் பேசவோ அல்லது பழகவோ தெரியாது என்றும், மனைவி இவன் கையாலாகாதவன், முரடன், கோபக்காரன், கஞ்சன் என்று பல வசைகளைப் பாடி ஒருவரையொருவர் அசிங்கப்படுத்திக் கொள்ளக்கூடாது.
தன் திருமண வயது வரும் வரை எப்படியோ திரியும் ஒரு வாலிபன், மனைவி என்று ஒருத்தி வந்த பின்தான் இந்தச் சமுதாயத்தில் தனக்கென்று ஓர் அந்தஸ்தை, தன் பொறுப்பை, கடமைகளை உணர்கின்றான். ஒரு பெண்ணும் பிறந்ததிலிருந்து தன் பெற்றோர், சகோதர, சகோதரி என்று பல உறவுகளுடன் பல வருடங்கள் வாழ்ந்த அவள் கணவன் என்ற ஒற்றை உறவுக்காக அனைவரையும் பிரிந்து, யார் என்று தெரியாத ஒரு வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல வைப்பது கணவன் என்ற அந்த ஒற்றை நூல்தான்.
எல்லா உறவுகளையும் பிரிந்து வரும் மனைவியை தன் பெற்றோர்களோ, சகோதர, சகோதரிகளோ வரம்பு மீறும்போது தட்டிக் கேட்பது கணவனின் கடமை, மனைவியும் தன் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக நடந்து கொள்வது அவளுக்கு உள்ள பொறுப்பாகும்,
இது இருவருக்குள் மட்டும் ஏற்படும் உறவல்ல, அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவரின் பங்களிப்பும், எல்லாவற்றையும் விட மேலாக வல்ல இறைவனின் பங்களிப்பும் உள்ளது என்பதை இருவரும் மனதில் கொள்ள வேண்டும், ஓர் இல்லறத்தில் இணையும் இருவரும், ஒருவருக்கொருவர் நடந்து கொண்ட விதங்களைப் பற்றி நம் நிரந்தர வாழ்க்கையான மறுமையில் அல்லாஹ்வால் கேள்வி எழுப்பப்படும் என்ற அந்த மகத்தான நாளை எண்ணிப் பார்த்தால், மலை போல கோபமும், கடுகாய் மாறும்.
ஒரு நிறுவனத்திற்கு ஒரு தலைமை மட்டுமே இருக்க முடியும், அப்படிப்பட்ட தலைமை நீதி, நேர்மை, நியாயம் என்று எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் நடந்தால் இல்லறம் என்ற படகு இனிமையான பாதியை நோக்கிச் செல்லும்,
1.        தனக்கொரு நியாயம், தன் துணைவிக்கு ஒரு நியாயம்,
2.        தாய்க்கு ஒரு நீதி, தாரத்திற்கு ஒரு நீதி.
3.        தன் குடும்பத்திற்கு அன்பும், துணைவியின் குடும்பத்திற்கு வெறுப்பும்.
என்று பாகுபாடு காட்டப்பட்டால் உங்கள் அருமை மனைவியை அன்பால் கட்டிப் போட இயலாது.
கணவன் என்ற தலைமையை மனைவி புரிந்தும், அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும், கணவனாகிய ஆண் மகனும், பெண் என்றால் வீட்டு வேலைகள் பார்க்கவும், தன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளவள் என்று துச்சமாக எண்ணாமல் நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றி நியாயத்துடனும், அவர்களின் ஆலோசனைகள் கேட்டும் நடந்துக் கொண்டால் நம் குடும்பமும், இந்தச் சமுதாயமும் சிறந்து விளங்கும்.
நாம் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் ஆடையை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்து மீண்டு அணிந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றோம், ஆனால் அதையே ஏன் வாழ்க்கை என்ற ஆடையில் பின்பற்ற மறுக்கின்றோம்? சிறு சிறு பிரச்னைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் இன்று நம் தலைமுறைகள் தேர்ந்தெடுக்கும் முடிவு “தலாக்” என்ற மிகப் பெரிய முடிவாகும்.
“ஆகுமான செயல்களில் எந்தச் செயலும் அல்லாஹ்விடம் தலாக்கை விட அதிகக் கோபமளிப்பதாக இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் ஓர் இனிமையான வாழ்வைத் தேர்ந்தெடுத்து, பொறுமையைக் கையாண்டு, நம் இல்லறத்தை இனிமையானதாக ஆக்கிடுவோம்.
நன்றி - தபுக் tntj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger