கப்றில் மனிதர்களின் கொள்கை தொடர்பாக குறிப்பிட்ட சில கேள்விகள் மாத்திரமே கேட்கப்படும். மரணித்தவர் இறை நம்பிக்கையாளராக இருந்தால் இக்கேள்விகளுக்குப் பதில் கூறிவிடுவார். இதன் பின் இவர் அமைதியாக உறங்கி விடுவார்.
இவர் உலகில் வாழும் போது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத பாவங்கள் எத்தனை செய்தாலும் இவற்றுக்கு கப்றில் தண்டனை தரப்படாது. மறுமை நாளில் தான் இதற்கான விசாரணை நடைபெறும்.
ஆனால் மரணித்தவர் இறை மறுப்பாளராக இருந்தால் கப்றில் கேட்கப்படும் இஸ்லாமியக் கொள்கை தொடர்பான கேள்விகளுக்கு இவரால் பதிலளிக்க முடியாது. இதற்காக இவருக்கு தண்டனை தரப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(கப்றிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), "இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?' என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு "இறை நம்பிக்கையாளரோ' அல்லது "உறுதி கொண்டவரோ' "அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அன்னாரின் அழைப்பை) ஏற்றுப் பின்பற்றினோம்' என்று பதிலளிப்பார். அப்போது கேள்வி கேட்ட(வான)வர்களின் தரப்பிலிருந்து "நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத் தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்'' என்று (அவ்வானவர்களால்) கூறப்படும்.
அறிவிப்பவர் : அஸ்மா (ரலி)
நூல் : புகாரி (184)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “"எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்'' என்பான். அப்போது அவனிடம் " நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (1338)
யூதர்களாக மரணித்ததால் மண்றையில் யூதர்கள் வேதனை செய்யப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு "யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி)
நூல் : முஸ்லிம் (5504)
சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமை, மலம் ஜலம் கழிக்கும் போது மறைவிடத்தை மறைக்காமை, புறம் பேசுதல் ஆகிய குறிப்பிட்ட பாவங்களுக்காக அப்பாவங்களைச் செய்தவர்கள் கப்றில் தண்டிக்கப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மரணித்தவர் இறை நம்பிக்கையாளராக இருந்தால் இந்தப் பாவங்களுக்கு மட்டும் கப்றில் பிரத்யேகமாக தண்டனை தரப்படும்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, "இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்;இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்'' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?'' என்று கேட்டதும், "இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1361)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பாவத்திற்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. இவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்துவிட்டு தூய்மை செய்து கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோள் சொல்லி நடப்பவராக இருந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸயீ (2042)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை வேதைனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : இப்னு மாஜா (342)
நன்றி - onlinepj
Post a Comment