நபிகளார் இஸ்லாத்தை எடுத்துரைத்த காலம் முதல் இன்று வரை இஸ்லாத்திற்கு எதிரான சதி நடந்து கொண்டுதான் வருகிறது. அதே நேரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை. இஸ்லாத்தை சொன்னவர் மற்றும் அதை ஏற்றவர்களை
- கொலை செய்தல்
- கொலை செய்ய முயற்சித்தல்
- மிரட்டுதல்
- ஊர் நீக்கம் செய்தல்
- அவதூறு பரப்புதல்
என்று எண்ணற்ற சதிகளை செய்து இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களின் நோக்கங்கள் இதுவரை நிறைவேறவில்லை. இனியும் நிறைவேறாது. இஸ்லாத்தின் பக்கம் மக்கள் சாரை சாரையாக இணைவதை பொறுத்துக் கொள்ள முடியாத மேலைநாடுகள், இஸ்லாத்தைப்பற்றியும் நபிகளாரைப்பற்றியும் அவர்களின் மனைவியரைப்பற்றியும் அவதூறான அசிங்கமான கருத்துக்களை பரப்பி இஸ்லாமியர்களின் உள்ளங்களை துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளனர்.
இவர்களின் இது போன்ற நடவடிக்கையால் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்கள், இவர்களின் சதிகளுக்கு எதிராக உலகளாவிய அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி நபிகளாரின் மீது தாங்கள் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்திக்காட்டியுள்ளனர்.
இது போன்ற இணையதள பிரச்சாரத்தினால் இஸ்லாம் இல்லாமல் போய்விடும் என்று பகல் கனவு காண்போர் நிச்சயம் தோல்வியைத்தான் காணப்போகிறார்கள். மேலும் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமான நிலையே தோன்றப் போகிறது. நபிகளாரை இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றவர்களையும் நபிகளாரைப் பற்றி தெரிந்து கொள்ளத் தூண்டியுள்ளது. இதனால் நபிகளாரின் உண்மை நிலையை அறிந்து கொண்டு இஸ்லாத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)
தீன்குலப்பெண்மனி அக்டோபர் 2012
நன்றி - அதிர்வுகள்
Post a Comment