இவ்வசனங்களில் (2:36, 7:10, 7:24, 7:25, 30:25) "இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்' என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக்கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5,80,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து, இக்கோளின் அதிகப்பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும்,குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.
வீனஸ் எனப்படும் வெள்ளிக்கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10,08,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலைவிலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள், சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.
சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும், நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும், புளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.
பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர்,காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும், இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.
சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.
உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில்,அல்லது சந்திரனில் தங்குவதை "வாழ்வது' என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.
வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு "இதில் தான் வாழ்வீர்கள்'' என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்?
எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
மேற்கண்ட சூழ்நிலைகளைத் தாக்குப் பிடித்து வாழக்கூடிய வேறு உயிரினங்கள் பூமி அல்லாத மற்ற கோள்களில் இருக்க முடியுமா என்றால் அந்த சாத்தியத்தைக் குர்ஆன் மறுக்கவில்லை.
பார்க்க 440 வது குறிப்பு.
நன்றி - onlinepj.com
Post a Comment