இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர்.இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456)
இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
மாற்றுமதத்தினர் தேரிழுப்பதையும் விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடு வதையும் வழமையாக்கிக் கொண்டனர். இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்து முஸ்லிம்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பல கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
இன்னும் சிலர் மாவிலைகளில் சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்து குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும் பறவைச் சகுனமும் பீடை மாதமும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி 5717)
குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள லா ஸபர – “ஸபர் என்பது கிடையாது” எனும் தொடருக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் நான்கு விதமான விளக்கங்களைத் தந்துள்ளார்கள்.
முதலாவதாக, வயிற்றிலுள்ள ஓரு புழுவால் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும் நோயே ஸபர் என்று கூறியுள்ளார்கள். சொரி சிரங்கை விட வேகமாகப் பரவும் ஓரு நோயே ஸபர் என்று அரபுகள் கருதி வந்தனர். இக்கருத்தை மறுக்கும் முகமாக ஸபர் கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டாவது, வயிற்றில் ஸபர் என்னும் புழு இருப்பதாகவும் மனிதனுக்குப் பசி ஏற்படும் போது வயிற்றைக் கடித்துத் தொல்லை தருவதாகவும் அரபுகள் நம்பி வந்தனர். அப்படி ஒரு புழுவே கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் கிடையாது என்று கூறினார்கள்.
மூன்றாவது, போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கு ஆகும். அவை துல்கஅதா துல்ஹஜ் முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகும். அன்றய அரபுகள் முஹர்ரம் மாதத்தைப் போர் அனுமதிக்கப் பட்ட மாதமாகவும் அதற்கு பதிலாக ஸபர் மாதத்தைப் புனித மாதமாகவும் மாற்றிக் கொண்டனர். இதை நபி (ஸல்) அவர்கள் நிராகரிக்கும் முகமாக ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
நான்காவது, ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும் குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதை பீடை பிடித்த மாதமாக அன்றய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
இம்மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களை தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப் படுவதைப் போன்று அன்று அரபியர் களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
காலத்தை நல்ல காலம் என்றும் கெட்ட காலம் என்றும் பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம்.
(அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப் பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவருமே தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்லநாள் கெட்டநாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107
நன்றி - sltjweb.com
Post a Comment