உணவு பரிமாறும் வசதியுடன் நவீன பஸ் போக்குவரத்து ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

உணவு பரிமாறும் வசதியுடன் கூடிய நவீன பஸ்களின் போக்குவரத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அதிநவீன சொகுசு பேருந்து
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 189 புதிய பேருந்துகள் மற்றும் 55 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 244 பேருந்துகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீரங்கம்–சென்னை மற்றும் சென்னை–ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் விமானம் மற்றும் ரெயில் வண்டிகளில் உள்ளது போன்ற உணவு பரிமாறுதல் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய இரண்டு புனரமைக்கப்பட்ட அதிநவீன சொகுசு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உணவு மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.
இந்த பேருந்தில் பயணிகளுக்கு காலையில் 3 இட்லி ரூ.15–க்கும், பொங்கல், ஊத்தப்பம் தலா ரூ.15, மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் தலா ரூ.20–க்கும், பிஸ்கெட் ரூ.5–க்கும், ஒரு லிட்டர் குடிதண்ணீர் ரூ.10–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெண்கள், சிறுவர்கள்
சென்னை பெருநகரத்தில் தற்போது 134 பேருந்துகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கேற்ப பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கூடுதலாக 66 புதிய வழித்தட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து கழகங்களின், மாநகர மற்றும் நகர பேருந்துகளில் வழக்கமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு தற்போது மூன்றில் ஒரு பங்கு சலுகை கட்டணத்துடன் கூடிய மாதாந்திர பயண சீட்டு வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
புதிய திட்டங்கள் அறிமுகம்
அந்த முறையை விரிவுபடுத்தி, புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் சலுகை கட்டணத்துடன் கூடிய மாதாந்திர பயணச்சீட்டு வழங்கும் திட்டம், கோயம்புத்தூர் கோட்டத்தில் ஊட்டி மண்டலம், கும்பகோணம் கோட்டத்தில் கரூர் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்கள், திருநெல்வேலி கோட்டத்தில் தூத்துக்குடி மண்டலம் ஆகிய நான்கு புதிய மண்டலங்கள் அமைக்கும் திட்டம்,
பண்டிகைக்காலங்கள் நீங்கலாக மற்ற நாட்களில் தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயண சீட்டுகளை முன்பதிவு செய்யும் குழும பயணிகளுக்கு பயணத்தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்,
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ரத்ததானம் செய்கின்ற தினம் ஊதியத்துடன் கூடிய பணி நாளாகவும் மற்றும் அதற்கு அடுத்த நாள் ஊதியத்துடன் கூடிய ஓய்வு நாளாகவும் அனுமதிக்கும் திட்டம்.
பொதுமக்கள், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிறந்த முறையில் மருத்துவ வசதி பெற ஏதுவாக சாலை போக்குவரத்து நிறுவனத்தின் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் சாதனம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
ஓய்வூதிய தொகை
போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 822 பணியாளர்களுக்கு 17 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கான ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger