சென்னையில் 31 இடங்களில் ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை காய்கறி கடைகளுக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு

சென்னையில் 31 இடங்களில் மலிவு விலை காய்கறி கடைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார். இந்த கடைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மலிவு விலை காய்கறி கடைகள்
தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்கறி விலையை கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் தரமான காற்கறிகள் வழங்க பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, சென்னையில், தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு அங்காடி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், தாம்பரம் கிழக்கு, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், போரூர் உள்ளிட்ட 31 இடங்களில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இந்த கடைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்துவைத்தார்.
12 வகையான காய்கறி பை
சென்னையில் 31 இடங்களில் மலிவு விலை காய்கறி கடைகள் தொடங்கப்பட்ட சற்று நேரத்திலேயே விற்பனை சூடுபிடித்தது. குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைத்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறியை வாங்கினர். குறிப்பாக, 12 வகையான காய்கறிகள் அடங்கிய பை ரூ.100–க்கு வழங்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றது.
இன்று  தொடங்கப்பட்ட பண்ணைப் பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை பட்டியல் (ஒரு கிலோ) வருமாறு:–
விலை பட்டியல் விவரம்
பெரிய வெங்காயம் – ரூ.20. சாம்பார் வெங்காயம் – ரூ.60. தக்காளி (நவீன்) – ரூ.30. தக்காளி (நாட்டு) – ரூ.30. உருளைக்கிழங்கு – ரூ.20. கேரட் – ரூ.40. பீன்ஸ் – ரூ.50. முட்டைக்கோஸ் – ரூ.18. சவ்சவ் – ரூ.25. கத்தரிக்காய் – ரூ.20. முள்ளங்கி – ரூ.16. புடலங்காய் – ரூ.25. வெண்டைக்காய் – ரூ.24. முருங்கைக்காய் – ரூ.30. அவரைக்காய் – ரூ.40. வாழைக்காய் (ஒன்று) – ரூ.5. பீட்ரூட் – ரூ.20. காலிபிளவர் (ஒன்று) – ரூ.15. நூல்கோல் – ரூ.15. சேனைக்கிழங்கு – ரூ.25. கோவங்காய் – ரூ.20. வெள்ளரிக்காய் – ரூ.15. பச்சைமிளகாய் – ரூ.30. மாங்காய் – ரூ.15. பாகற்காய் – ரூ.25. சுரைக்காய் – ரூ.10. கருணைக்கிழங்கு – ரூ.30. தேங்காய் (ஒன்று) – ரூ.8. இஞ்சி – ரூ.140. எலுமிச்சைப்பழம் – ரூ.1.50. கொத்தமல்லி (ஒரு கட்டு) – ரூ.6. புதினா (ஒரு கட்டு) – ரூ.6. கறிவேப்பிலை – இலவசம்.
இதேபோல், ரூ.100–க்கு விற்பனை செய்யப்படும் 12 வகையான காய்கறி பையில் அடங்கியுள்ள காய்கறிகளின் விவரம் வருமாறு:–
பெரிய வெங்காயம் – ஒரு கிலோ. தக்காளி – ½ கிலோ. உருளைக்கிழங்கு – ½ கிலோ. பீன்ஸ் – ¼ கிலோ. கேரட் – ¼ கிலோ. கத்தரிக்காய் – ¼ கிலோ. வெண்டைக்காய் – ¼ கிலோ. மேலும், தேங்காய் (ஒன்று), கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
ரூ.75 மிச்சமாகும்
இதுகுறித்து, காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னையில் 31 இடங்களில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.200–க்கு காய்கறி வாங்கினால், வெளிக்கடைகளில் காய்கறி வாங்குவதைவிட ரூ.75 மிச்சமாகும். மேலும், பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள ரூ.100 மதிப்பிலான 12 வகையான காய்கறி பை தினமும் வழங்கப்படும்’’ என்றார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger