விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட ஒத்துக்கொண்டது ஏன் ?

விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சில முக்கியமான காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக தவ்ஹீத் ஜமஅத்தும் ஏனைய 23 அமைப்புகளும் செய்தியாளர்களிடம் கூறினார்கள். ஆனால் எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை என்று கமலஹாசன் கூறியுள்ளார். மற்றும் ஒரு சிலரோ சில காட்சிகள் நீக்கப்படுவதால் ஒரு பயனும் இல்லை என்று கூறுகிறார்கள். இதன் உண்மை நிலை என்ன?


அஹ்மது மீரான், தஞ்சை


விஸ்வரூபம் என்ற விஷரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்குவதால் அது முஸ்லிம்களை நல்ல முறையில் சித்தரிக்கும் படமாக அமையாது- அந்தப்படம் முழுவதிலும் விஷக்கருத்துதான் உள்ளது. அந்தப்படம் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தால் அதுதான் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாக அமையும். சில காட்சிகளை நீக்குவதால் அந்தக் கதையின் போக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது. இதுதான் உண்மை.

 அப்படியானால் தவ்ஹீத் ஜமாஅத்தும் மற்ற அமைப்புகளும் ஏன் உடன்பாட்டிற்கு வந்தன? இதுகுறித்து சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.

 தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தவுடன் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் இப்பிரச்சினையை திசைதிருப்ப ஆரம்பித்தனர். முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் நல்ல நோக்கத்தில் தமிழக முதல்வர் இப்படத்தைத் தடை செய்திருந்தார். ஆயினும் அவரது இந்த நடவடிக்கைக்கு கெட்ட நோக்கம் கற்பிக்கப்பட்டது. தனது சொந்தப் பகையை இதன் மூலம் முதல்வர் தீர்த்துக் கொண்டார் என்று கமலஹாசனிலிருந்து கருணாநிதி வரை அரசியல் நடத்தினார்கள்.

 ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் கூட முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

 மேலும் சிலர் இதை இந்து முஸ்லிம் பிரச்சினைபோல் சித்தரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் ஊடகங்கள் மூலம் பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

 இது இந்து முஸ்லிம் பிரச்சினையாக இல்லாதபோதும், அப்பாவி இந்துக்களை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக உசிப்பிவிடும் ஒரே வேலையை பெரும்பாலான ஊடகங்கள் செய்து வந்தன.

 இந்நிலையில் தனது படத்தில் தவறாக ஒன்றுமில்லை என்று கூறி வந்த கமலஹாசன் சற்றே இறங்கி முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்க சம்மதித்தார்.

 அந்தச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் நானும், மாநில நிர்வாகிகளும் திருச்சியில் நடைபெற இருந்த மூன்று நாள் விவாதத்திற்காக திருச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். இந்து முஸ்லிம் பிரச்சையாக ஆக்கி கலவரத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று கவலைப்பட்டோம்.

 இந்தச் செய்திகள் வெளியான நேரத்தில் பயணத்தில் இருந்தபடியே இவைகளைப் பற்றி ஆலோசனை செய்தோம். இதற்கான முன் முயற்சிகளை நாமே எடுக்கவேண்டும் என முடிவு செய்து, 23 அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை வேறுவிதமாக மாற்றிட தீய சக்தியினர் முயற்சிக்கிறார்கள். முதல்வருக்கும் நம்மால் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார்கள். எனவே கமலஹாசனே கீழே இறங்கி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்வதுதான் நல்லது என்று கூறி அந்தப்படமே வரக்கூடாது என்ற நிலையில் இருந்து நாமும் மாறி, மிகவும் மோசமான காட்சிகளை மட்டும் நீக்க முயற்சிக்கலாம். எதிர்காலத்தில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கக்கூடாது எனத் திரையுலகினருக்கு நாம் பாடம் கற்பித்து விட்டோம். 

 சென்சார் போர்டுக்கும் சரியாக நடக்கும் விதத்தில் தக்க பாடம் கற்பிக்கட்பட்டுவிட்டதையும் கவனத்தில் கொண்டு சுமுகமாக இதை முடித்தல் நல்லது என்று தெரிவித்தோம்.

 மேலும் நாங்கள் விவாதத்திற்கான ஏற்பாட்டில் இருப்பதால், நீங்களே இதற்கான முன்முயற்சி எடுத்தால் எங்களுக்கு மறுப்பில்லை என்றும் கூறினோம்.

 மேலும் நமது இணையதளத்திலும் இது குறித்து ஆற்றப்பட்ட உரையை வீடியோவாக வெளியிட்டோம். படம் தயாரித்து முடிக்கப்பட்ட நிலையில் நாம் நினைக்கும் அதிரடி மாற்றங்களைச் செய்ய இயலாது. அதே நேரத்தில் மனது புண்படும் காட்சிகளை நீக்குவது மட்டுமே சாத்தியம் என்பதால் அந்த அளவோடு நிறுத்திக் கொண்டோம்.

 சமரசம் காணும்போது நாம் எதிர்பார்க்கும் முழு வெற்றியை எதிர்பார்க்க முடியாது. இரு தரப்பிலும் சிலவற்றை விட்டுக் கொடுத்தால்தான் நிலைமை மாறும் என்பதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

 இது நாம் எதிர்பார்த்த அளவு முழுமையானது அல்ல என்றாலும், சில தீய விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தக்க சமயத்தில் அறிவுப்பூர்வமாக எடுக்கப்பட்ட உடன்பாடு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

 குர்ஆன் வசனங்கள், தமிழ் ஜிஹாதி என்ற வசனங்கள், முல்லா உமர் கோவையிலும், மதுரையிலும் தங்கி இருந்தார் என்பன போன்ற காட்சிகளை நீக்கச் சொன்னோம். படம் துவங்கும்போது இது முற்றிலும் கற்பனையே என்று அறிவிப்புப் போட வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மிக முக்கியமான இந்த மாற்றங்களுக்கு அனைவரும் ஒப்புக் கொண்டது சமுதாய நலன் கருதியே!
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger