Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கேள்வி - பதில். Show all posts
Showing posts with label கேள்வி - பதில். Show all posts

இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளனவா?

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமா தெரியாதவர்கள் முஸ்லிமே இல்லை என்ற அளவுக்குக் கூறுகிறார்களே! விளக்கவும்.
அப்துல் அலீம்
ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும்.
ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. ஒரு நபித்தோழர் கூட அதைச் சொல்லவும் இல்லை. அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.
நான்கு மற்றும் ஐந்தாவது கலிமாக்களை எவனோ ஒருவன் சுயமாகக் கற்பனை செய்து அதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று என நம்பச் செய்துள்ளான் என்றால் இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரத்துல் குஃப்ர் என்ற பெயரில் இவர்கள் கற்பனை செய்த அந்தக் கலிமா இது தான்:
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅன்வ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரஃத்து மினல்குஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.
கலிமா தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் ஆதாரமில்லாமல் கற்பனை செய்த நன்காம் கலிமா இது தான்:
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.
மேற்கண்ட கலிமாவின் வாசகங்கள் சில ஹதீஸ்களில் வந்துள்ளது என்றாலும் அந்த ஹதீஸ்கள் சரியான அறிவிப்பாளர் தொடரின் வழியாக வரவில்லை. மேலும் பலவீனமான அந்த ஹதீஸ்களும் ஈமானின் கடமை என்ற கருத்தில் சொல்லப்படவில்லை.
மூன்றாம் கலிமா என்ற பெயரில் இவர்கள் கடமையாக்கியுள்ள சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்துள்ளனர். ஆனால் ஈமானுக்கு ஐந்து கடமைகள் உள்ளதாகவும் அதில் இது மூன்றாவது கலிமா என்றும் அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கான துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் இதுவும் ஒரு துஆ என்ற அடிப்படையில் இதைக் கற்றுத் தந்துள்ளனர்.
சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவதற்கு அவர்கள் துஆக்கள் கற்றுத் தந்தனர். இந்த துஆ தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தால் ஓத வேண்டிய துஆ என்று கற்றுத் தந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன்)” என்று கூறிவிட்டு, “அல்லாஹும்மஃக்பிர்லீ” (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.
நூல்கள்: புகாரி 1154, இப்னு மாஜா 3868
முதல் கலிமா என்றும் இரண்டாம் கலிமா என்றும் இவர்கள் கூறுவது ஒரே கலிமா தான்.
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்பது முதல் கலிமாவாம்.
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்பது இரண்டாம் கலிமாவாம்.
இரண்டும் ஒரே கலிமா தான். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராகவும் ஒப்புக் கொள்வதை இது குறிக்கிறது.
ஒன்றில் சில வார்த்தைகள் கூடுதலாக இடம் பெற்ற போதும் இரண்டில் எதைச் சொன்னாலும் ஒருவர் முஸ்லிமாக ஆகிவிடுவார்.
எனவே ஐந்து கலிமாக்கள் என்பது மார்க்கத்தில் உள்ள விஷயங்களும் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களும் கலந்த கலவையாக உள்ளது. இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை.
thanks to - sltj
0 comments

உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா?

 நாங்கள் பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறோம். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையில் வசித்து வருகிறோம். அங்கே எங்களுடன் வசிக்கும் இந்து நண்பர் ஒருவர் இந்து தெய்வங்களின் உருவப் படங்களை மாட்டிவைத்து உள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் தொழுதால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது அப்படங்களை நம் கண்ணில் படாதவாறு துணியினால் மறைத்து வைத்து தொழலாமா? 

பதில் 
சாமி சிலைகள் மட்டுமல்ல; பொதுவாக உருவப்படங்கள் முன்னாலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு ஒரு திரைச் சீலை இருந்தது. அதை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது திரைச்சீலையை அப்புறப்படுத்து, அது என் தொழுகையில் கவனத்தை திருப்பி விட்டது என்று கூறினார்கள். 

நூல்: புகாரி 374, 5959 

உயிருள்ளவற்றின் உருவப்படங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்து விட்டதால் இது உயிரற்றவைகளின் ஓவியமாகத் தான் இருக்க வேண்டும். பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உருவங்களுக்கு இந்த நிலை என்றால் தடுக்கப்பட்ட உயிருள்ளவைகளின் உருவப்படங்கள் அதை  விட கடுமையானதாகும். 

தெய்வங்களாக கருதப்படும் உருவங்கள் இன்னும் கடுமையானதாகும். அதை அப்புறப்படுத்தி விட்டுத் தான் தொழ வேண்டும் என்றாலும் நமக்கு உரிமையான அல்லது நமது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் இது சாத்தியமாகும். மற்றவர்களுக்கு உரியது அல்லது மற்றவர்களுக்கும் உரிமை உள்ள இடங்களில் இது சாத்தியமாகாது. 

நீங்கள் எடுத்திருக்கும் அறையில் முஸ்லிமல்லாதவருக்கும் உரிமை உள்ளதால் அதை அப்புறப்படுத்துவது சாத்தியமாகாது. எனவே உருவம் கண்ணில் படாத இடங்களில் அல்லது நீங்கள் கூறியது போல் மறைத்துக் கொள்வதுதான் சாத்தியாமாகும். எனவே அவ்வாறு தான் தொழ வேண்டும். 

ஆனால் உங்கள் மீது இன்னொரு குற்றம் உள்ளது. உருவப்படங்கள் உள்ள வீடுகளில் வானவர்கள் வரமாட்டார்கள் எனும் போது சாமிபடங்கள் இருக்கும் இடங்களில் நிச்சயம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு வரும் வானவர்கள் வர மாட்டார்கள்.  இது தொழும்போது மட்டும் உள்ள சட்டம் அல்ல. பொதுவாக எந்த நேரத்திலும் இதுபோல் உருவப்படம் இருக்கலாகாது. 

முஸ்லிமல்லாதவர்களுடன் கூட்டாக வாடகைக்கு இடம் பிடிக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள் அறைகள் இருந்தால் நம்முடைய அறையில் இது போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ஒற்றை அறையாக இருக்கும் கூட்டாக வாடகைக்குப் பிடித்தால் முஸ்லிமல்லாதாவர்கள் இது போல் படங்களை மாற்றுவார்கள் என்பதால் அவர்களுடன் கூட்டாக அறை பிடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்பி கூட்டாக இடம் பிடித்தபின் இது தெரிய வந்தால் நீங்கள் வேறு அறையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் அருள் இருக்காது என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அங்கே இருப்பது கூடாது. 

இது முஸ்லிம்களில் தர்கா படங்களை மாட்டிவைப்பவருக்கும் பொருந்தும். அத்தகையவர்களுடன் ஒற்றை அறைகளைக் கூட்டாக பகிர்ந்து கொள்வது உங்களை அல்லாஹ்வின் அருளில் இருந்து அப்புறப்படுத்தி விடும் 

உருவப்படம் குறித்து மேலும் அறிய http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/muslimallathavrkkalin_veettil_uruvapadam/ http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/tholaikatchiyil_pengalai_parkalamaa/ http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/uruvapadam_veetuku_vanavarkal_varamatarkala/ http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/uruvapatathuku_anumathi_unda/ http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/uruvam_varintha_satai/

onlinepj
0 comments

இப்தார் விருந்து பற்றி

அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன? 

 பதில் 

அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இருவகைகளில் உள்ளன. 

ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி 

இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி 

கருணாநிதி போன்றவர்கள் முதல் வகையான நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பள்ளிவாசலிலோ அல்லது திருமணக் கூடங்களிலோ நோன்பு துறக்க முஸ்லிம் தலைவர்கள் ஏற்பாடு செய்து கருணாநிதி வகையறாக்களை நோன்பு துறக்க அழைப்பார்கள் 

நோன்பை அரசியலாக்குவது பொதுவாகக் காண்டிக்கத் தக்கது என்றாலும் இது கூடுதல் கண்டத்துக்கு உரியதாகும். 

நோன்புடன் எந்தச் சம்மந்தமுமில்லாத கருணாநிதி வகையறாக்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்வது லட்டர் பேடுகளின் அடிமைத்தனத்துக்கு எடுத்துக் காட்டாகும். நோன்பு துறப்பதற்கான விருந்து என்றால் நோன்பு நோற்ற மக்களை அழைத்து அவர்களுக்காக சொந்தச் செலவில் உணவு வழங்கப்பட்டால் அதை விருந்து என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். நோன்புடன் சம்மந்தமில்லாதவரை நோன்புதுறக்க அழைப்பது அருவருக்கத்தக்கதாக உள்ளது. 

நோன்பு வைக்காதவர்களை மதித்து நோன்பாளிகள் வைக்கும் விருந்தாக இது அமைந்துள்ளது. 

இதில் நோன்பு துறக்க அழைக்கப்பட்ட அரசியல்வாதி நோன்புதுறக்க(?) தாமதமாக வந்தால் அவர் வரும்வரை நோன்பு துறக்கும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் அயோக்கியத்தனங்களையும் நாம் பார்க்கிறோம். 

இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஊழல் பெருச்சாளிகளான முஸ்லிம் முத்தவல்லிகள் இவர்களை நோன்புதுறக்க பள்ளிவாசலுக்கு அழைப்பார்கள். வக்பு போர்டு மூலம் இடையூறு வரக்கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் நடத்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இரண்டாவது வகையாகும். 

இவர்கள் தமது சொந்தச் செலவில் விருந்தை ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு விருந்தளிப்பார்கள். தங்கள் கூட்டணியில் உள்ள அல்லது கூட்டணிக்கு வரவாய்ப்புள்ள கட்சிக்காரர்களை அழைத்து இந்த விருந்துபசாரம் நடக்கும். 

நம்ம செலவில் அவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு அதை விருந்து என்று சொல்லும் அயோக்கியத்தனம் இதில் இல்லை. அவர்கள் செலவில் நமக்கு சாப்பாடு போடப்படுவதால் இந்த வகையில் இரண்டு விருந்துகளும் வேறுபடுகின்றன. 

இந்த வகையில் இவை வேறுபட்டாலும் பல விஷயங்களில் ஒன்றுபடுகின்றன. 

விருந்தளிப்பவர்கள் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் நோன்பு நோற்பவர்கள் அல்லர். காலை முதல் மாலை வரை நன்றாகச் சப்பிட்டு விட்டு நோன்பாளிகளுடன் நோன்பாளிகளாக தொப்பி போட்டும் முக்காடு போட்டும் ஏன் நடிக்க வேண்டும்? இவர்கள் நடிக்கிறார்கள் என்பதைக் கூட முஸ்லிம் பொதுமக்கள் விளங்க மாட்டார்களா? 

நோன்பு நோற்ற சிலரை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்து இவர்கள் நோன்பு வைத்திருப்பது போல் நடிக்காமல் பரிமாறினால் நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

இரண்டு சாராரும் ஒரு அடிப்படையான விஷயத்தை மறந்து விட்டனர். மார்க்கத்தை மதித்துப் பேணுவதிலும் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்துடன் அமைய வேண்டும் என்பதிலும் மக்கள் தெளிவாக உள்ளனர். 

அரசியல்வாதிகளை அழைத்து நோன்பு துறப்பது பொதுவான முஸ்லிம்களுக்கு அருவருப்பையே ஏற்படுத்தும். நம்முடைய வணக்கத்தை ஏன் இவர்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற கோபத்தையே இது பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். 

இவர்கள் முஸ்லிம்களுக்கு என்னவோ அதிகம் செய்வதாக முஸ்லிமல்லாத மக்களும் நினைப்பார்கள். 

கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் தங்களுக்கு நெருக்கம் என்று காட்டிக் கொள்ள புகழ் விரும்பும் முஸ்லிம் பிரமுகர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

இவர்கள் நோன்பையும், நோன்பாளிகளையும் மதித்தால் குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலில் அல்லது பல பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் மக்களுக்காக கருணாநிதி அல்லது ஜெயலலிதா செலவில் நோன்பு துறக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் முஸ்லிம்களுக்கு அது தேவையற்றதாக இருந்தாலும் நடிக்கவில்லை. அரசியலாக்கவில்லை. நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

செய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் இப்படி செய்யலாம். 

நம் தலைமையகத்தில் சில நாட்களுக்கான நோன்பு துறக்கும் செலவுகளை முஸ்லிமல்லாதவர்கள் செய்கின்றனர். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இது போல் அவர்களும் தங்களுக்கு விருப்பமான பள்ளிவாசல்களைத் தேர்வு செய்து அரசியல் கலப்பில்லாத நோன்பு விருந்தை நடத்தலாம்.. பள்ளிவாசலில் வழக்கமாக நோன்பு துறப்பவர்கள் மட்டும் கலந்து கொள்வதால் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை வைத்து பிழைப்பு நடத்துவதையும் தவிர்க்கலாம்.

onlinepj.com
0 comments

நோன்பின் போது நகம் வெட்டலாமா?

நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

 நோன்பில் நகம் மற்றும் முடி வெட்டலாமா? 
குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கி குளிக்கலாமா?  
பற்பசைகள் பயன்படுத்தலாமா? 
சோப்பு நறுமணம் உபயோகிக்கலாமா?  
வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? 
என்பன போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். 

உண்ணாமல் பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள (மார்க்கத்தில் தீமை என்று சொல்லப்பட்டவைகளை தவிர) ஏனைய காரியங்களை செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டார்கள். இது போன்ற செயல்கள் நோன்பை முறிப்பவையாக இருந்திருந்தால் அதைச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். இவற்றைச் செய்வது நோன்பைப் பாதிக்கும் என்று எங்கும் கூறப்படவில்லை. 

எனவே நோன்பு நோற்ற நிலையில் இவற்றைச் செய்வதால் நோன்பில் எந்தப் பாதிப்பும் இல்லை. 

மேலும் நகம் வெட்டுவதை இயற்கை மரபுகளில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். நோன்புக் காலங்களிலும் நபியவர்களின் இந்த சுன்னத் கடைப்பிடிக்கப்பட வேண்டியதே.

0 comments

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா ! சரியா?

கேள்வி:
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

பதில்:

முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், 

கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் 

எல்லா தவறான காரியங்களுக்கும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.

உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்கு திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். 

கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

நன்றி - onlinepj 
நன்றி - tntj tirupur 
0 comments

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா?

கவ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள் விரட்டப்படுவார்கள் என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள்?

பதில்  - இவ்வாறு நாம் இட்டுக்ககட்டி சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதன் அடிப்படையில் இவ்வாறு சொல்கிறோம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), "மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு "எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்'' எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, "அறிந்து கொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம். அறிந்து கொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்று சொல்வேன். அதற்கு "இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (ஈசா நபி) சொன்னதைப் போன்று, "நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்'' என்று கூறப்படும். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4625, 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 7049 
முஸ்லிம் 365, 4247, 4250, 4259, 5104 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி தெளிவாக சொல்லி இருந்தும் இது நபித்தோழர்களைக் குறிக்காது. அவர்களின் உம்மத்தினர் அனைவரையும் குறிக்கும். அனைத்து உம்மத்துகளிலும் மேற்கண்டவாறு நடந்து கொண்டவர்களையே குறிக்கும் குதர்க்கமான விளக்கம் கொடுக்கின்றனர். 

சில அறிவுப்புகளில் உம்மதீ என் சமுதாயத்தினர் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சுனன் நஸயீ அல்குப்ராவில் 11095வது ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் "அஸ்ஹாபீ' என்பதற்குப் பதிலாக "உம்மத்தீ - என்னுடைய சமுதாயமே' என்று சொன்னதாக இடம் பெற்றுள்ளது. 

நபித்தோழர்கள் பித்அத் செய்தார்கள் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு சமாளிக்கின்றனர். 

என் சமுதாயத்தினர் என்று சில அறிவிப்புக்களிலும் என் தோழர்கள் என்று சில அறிவிப்புக்களிலும் வந்தால் இதை எப்படி புரிந்து கொள்வது என்ற தெளிவு இல்லாமல் இப்படி வாதிடுகின்றனர். 

உம்மத் என்பதில் ஸஹாபாக்களும் அடங்குவார்கள். மற்ற மக்களும் அடங்குவார்கள். ஆனால் ஸஹாபி என்பதில் அனைத்து மக்களும் அடங்க மாட்டார்கள். 

உதாரணமாக, ஒரு செய்தியில், "வன விலங்கு ஒன்று மனிதனைக் கடித்து விட்டது' என்று இடம் பெறுவதாக வைத்துக் கொள்வோம். 

அதே செய்தியை மற்றொரு இடத்தில் சொல்லும் போது, சிங்கம் ஒன்று மனிதனை கடித்ததாகக் கூறப்படுகிறது என்றால் இப்போது முன்னர் இடம் பெற்ற செய்தியில் உள்ள வன விலங்கு, சிங்கம் தான் என்பது தெளிவாகி விட்டது. 

வன விலங்கு என்பதால் அது புலி, சிறுத்தை, ஓநாய் எல்லாவற்றையும் குறிக்கும்; எனவே கடித்தது சிங்கம் அல்ல என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால், முதல் செய்தியில் வன விலங்கு என்று பொதுவான வார்த்தை இடம் பெற்றாலும், அடுத்த செய்தியில் சிங்கம் என்ற குறிப்பான வார்த்தை வந்து விட்டதால் இங்கு வேறு அர்த்தம் கொடுக்க வழியே இல்லை. 

சில ஹதீஸ்களில் உம்மத் என்ற வார்த்தை இடம் பெற்றாலும் அது ஸஹாபாக்களைக் குறிக்காது என்று கூற முடியாது. ஏனென்றால் ஸஹாபாக்களும் உம்மத்தில் உள்ளவர்கள் தான். உம்மத் என்று பொதுவான வார்த்தை இடம் பெறும் ஹதீசுக்கு ஸஹாபி என்ற வார்த்தை இடம் பெறும் ஹதீஸ் விளக்கமாக அமைகின்றது. எனவே இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது நபித்தோழர்கள் தான் என்பது உறுதியாகின்றது. 

இன்னும் இதை விடத் தெளிவாகவே முஸ்லிமில் இடம் பெறும்  (4259) ஹதீஸில், "என்னிடம் தோழமை கொண்டவர்களில் சிலர்' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஹதீஸில் குறிப்பிடுவது, ஸஹாபாக்களைத் தான் என்பது உறுதியாகின்றது. 

இது தொடர்பான சில ஹதீஸ்களில் அவர்கள் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் மதம் மாறிச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர்கள் மதம் மாறிச் சென்று இருப்பார்களா? எனவே மதம் மாறிச் சென்றவர்கள் என்ற வாசகம் காரணமாக நபித்தோழர்கள் அல்லாத் மற்றவர்களைத்தான் இது குறிக்கிறது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். 

இதுவும் அறியாமை காரணமாக வைக்கப்படும் வாதமாகும். 

நபித்தோழர்கள் என்று கருதப்பட்டவர்களிடம் மத மாற்றம் நிகழ்ந்துள்ளதை இஸ்லாமிய வரலாறு தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள். 

நபி (ஸல்) அவர்கள் இறந்தவுடனேயே மத மாற்றம் நடந்தது. இதை புகாரி 1400வது ஹதீஸிலும் வேறு பல ஹதீஸ்களிலும் காணலாம். 

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், "நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஜகாத் கொடுத்தோம். அவர்கள் இறந்து விட்டார்கள். இனிமேல் ஜகாத் கொடுக்க மாட்டோம்'' என்று அரபிகள் மறுத்து மதம் மாறியுள்ளனர். 

இந்த அரபிகள் யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த அரபிகள். இவர்களை தாபியீன்கள் என்று கூற முடியாது. காரணம் தாபிஃ என்றால் ஸஹாபாக்களைச் சந்தித்தவர்கள் என்று அர்த்தம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே அவர்களை ஸஹாபாக்கள் என்று தான் குறிப்பிடுவோம். 

நபி (ஸல்) அவர்களை முஸ்லிமாகச் சந்தித்து, அவர்கள் இறந்த பின்னர் மதம் மாறியிருந்தாலும் நபியவர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஸஹாபிகள் தான். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தான் மதம் மாறுகிறார்கள். எனவே மதம் மாறியிருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் அறிந்திராத காரணத்தால் தான், "என்னுடைய தோழர்கள்'' என்று அழைக்கிறார்கள். 

உங்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்கள் மதம் மாறியது உங்களுக்குத் தெரியாது என்று மறுமையில் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. எனவே மதம் மாறியவர்களை நபித்தோழர்கள் என்று எப்படிக் குறிப்பிடலாம் என்ற வாதம் அர்த்தமற்றதாகும். 

இந்தக் கருத்தில் வரும் புகாரி 3349, 3347, 4625, 4740, 6526, முஸ்லிம் 5104 ஆகிய ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள், "ஈஸா (அலை) அவர்கள் சொன்ன வாக்குமூலத்தை நானும் சொல்லி விடுவேன்' என்று நபிகள் நாயகம் சொல்வதாக கூறப்படுகிறது. 

அதாவது திருக்குர்ஆன் 5:117 வசனத்தில் உள்ளது போன்று, "நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்'' என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற கருத்து இந்த ஹதீஸில் இடம் பெறுகின்றது. 

இந்த வாக்குமூலத்தைப் பாருங்கள். "நான் அவர்களுடன் இருக்கும் போது நான் அவர்களைக் கண்காணித்தேன்' என்றால் அவர்கள் இருக்கும் போது உடனிருந்த மக்கள் யார்? நபித்தோழர்கள் தான் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அப்படியிருக்கையில் இந்த ஹதீஸ் நபித்தோழர்களைக் குறிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மனோ இச்சையைப் பின்பற்றித் தான் இவ்வாறு வாதிட முடியும். 

"நீங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள் என்று கூறப்படுகிறது.. (புகாரி 3447, 3449) 

இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம், "நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து'' என்ற வாசகம் இடம் பெறுகின்றது. நபித்தோழர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் பிரிவதையே இது குறிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே இந்த வாசகமும் தடாகத்தில் தடுக்கப்படுவோர் நபித்தோழர்களில் சிலர் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. 

இந்த விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, தடாகத்தில் நபி (ஸல்) அவர்கள் அழைப்பது ஒட்டு மொத்த உம்மத்தையும் அல்ல! ஸஹாபாக்களைத் தான் என்பது நன்கு தெளிவாகின்றது. பல்வேறு ஹதீஸ்களை ஒன்றிணைத்துப் பார்த்து நாம் இந்த முடிவுக்கு வருகின்றோம். 

பொதுவாக நபித்தோழர்கள் குறித்து நமது நிலையை அறிந்திட கீழ்க்காணும் நூலை வாசிக்கவும். http://onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/
onlinepj.com
0 comments

வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா?

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? 

பதில் - வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். 

ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 

நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன) 

அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த. 

நூல் : அஹ்மத் 1625 

வித்ர் குனூத்தை இமாம் உட்பட பின்பற்றித் தொழுபவர்கள் அனைவரும் சப்தமின்றி அமைதியாகவே ஓத வேண்டும். வித்ர் குனூத்தில் இமாம் சப்தமிட்டு ஓத மற்றவர்கள் ஆமீன் சொல்லும் வழிமுறையை நபியவர்கள் கற்றுத் தரவில்லை. 

இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் எந்த ஆதாரமும் இல்லை. 

மேலும் விபரத்துக்கு கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

onlinepj.com
0 comments

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

ருகூவிற்கு பிறகு குனூத் ஓதுவது சரியா? அதுவும் கையை உயர்த்தி ஓதனுமா? விளக்கவும் 

பதில் : வித்ருத் தொழுகையில் ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவதற்கும் ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது. 

 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

 நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு முன்னால் குனூத் ஓதினார்கள். 
நூல் : நஸாயீ (1681) 

ஹசன் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நான் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி சஜ்தாவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்காத போது அல்லாஹும்மஹதினீ என்ற குனூத்தை ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்தார்கள்.
நூல் : ஹாகிம் (4800) 

ஆனால் குனூத் ஓதும் போது கைகளை உயர்த்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே கைகளை உயர்த்தக் கூடாது. 

மேலும் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் வித்ரில் ஓதவேண்டிய குனூத்தை ஃபஜர் தொழுகையில் ஓதி வருகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தாரத பித்அத் ஆகும். 

سنن ابن ماجه - (ج 1 / ص 393) 1241 حدثنا أبو بكر بن أبي شيبة . حدثنا عبد الله بن إدريس وحفص بن غياث ويزيد بن هارون عن أبي مالك الأشجعي سعد بن طارق قال - قلت لأبي يا أبت إنك قد صليت خلف رسول الله صلى الله عليه و سلم وأبي بكر وعمر وعثمان وعلي هاهنا بالكوفة نحوا من خمس سنين . فكانوا يقنتون في الفجر ؟ فقال أي بني محدث 

அபூமாலிக் அல்அஷ்ஜயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நான் எனது (தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடம் என் தந்தையே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர்களுக்குப் பின்னால் தொழுதிருக்கிறீர்கள். இவர்கள் ஃபஜர் தொழுகையில் குனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னருமை மகனே! இது புதிதாக உருவாக்கப்பட்டதாகும் (அவர்கள் இவ்வாறு ஓதவில்லை) என்று பதிலளித்தார்கள். நூல் : இப்னு மாஜா (1231)

onlinepj.com

0 comments

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா ?

உளூ இல்லாதவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர் ஆனைத் தொடலாமா ? என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்.

அல்குர்ஆன் (56 : 79)
குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை அவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ளவர்கள் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்று முடிவு செய்ய இடம் தருவது போல் தோன்றுகிறது..

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும் நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்களைத் தவிர யாரும் அதைத் தொட மாட்டார்கள் என்பதில் தூய்மையானவர்கள் என்றால் யார் என்பதையும், இதைத் தொட மாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் முதலில் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56 : 79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

அல்குர்ஆன் (56 : 77. 79)

56 : 79 வசனத்திற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

அல்குர்ஆன் (80 : 11-16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

அல்குர்ஆன் (26 : 210 212)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும்,

அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும்

ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது. ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.
more


__________________________________
Jazakallah : by onlinepj.com
0 comments

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?

கேள்வி : அல் குரான் (62:9) - "நம்பிக்கை கொண்டோரேவெள்ளிக் கிழமையில் தொழுகைக்காகஅழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்வியாபாரத்தை விட்டுவிடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."
மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறதுஜும்மா தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள்அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதைதடுத்துள்ளான்நான் வியாபாரம் செய்கிறேன்வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான்.ஆனால் எனது கடையை அடைப்பது இல்லைநான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்றுமத தொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார்அப்போது வியாபாரமும் நடக்கும்(வியாபாரம்செய்வது எனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களைவிரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயேதான் காலை முதல் இரவு வரை இருப்பார்இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமாஎன்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையதுஅதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும்.இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமாகூடாது என்றால் கடையை அடைத்து விட்டுஅவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லா.கண்டிப்பாக விளக்கம் தேவை

பதில் :
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ [الجمعة/9]
நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62 : 9)
மேற்கண்ட இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான். வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது
1.         இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.
2.        . வியாபாரத்தை விட வேண்டும்.
ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல் ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்
“வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்!“
என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.
ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் ” என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.
ஆனால் அல்லாஹ் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது.

நன்றி - அப்துந்நாஸிர்
0 comments

திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா?

ஒருவன் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற ஒவ்வொன்றும் வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது போடப்படுகின்ற நகை அனைத்தும் வரதட்சணையில் உள்ளடங்கிவிடும் என்று கருதமுடியாது.
பொதுவாக நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வது பெண்களின் இயற்கைத் தன்மையாகும். அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது புதுமாப்பிள்ளையை கவரும் வண்ணம் தன்னை அலங்கரித்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஒரு பெண்ணிற்கு இந்த நோக்கத்தில் அணிவிக்கப்படும் நகைகள் வரதட்சணையாக ஆகாது.
தன்னுடைய மகளிற்கு ஒரு தகப்பன் திருமணத்தின் போது அணிவிக்கும் நகைகள் அவளுக்குரியதுதானே தவிர அவளுடைய கணவனுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
கணவனோ, கணவன் வீட்டாரோ தன்னுடைய வீட்டிற்கு வரும் மணமகளின் நகைகளை தங்களுடைய சொத்தாகக் கருதுவார்கள் என்றால், தங்களுடைய சுயத்தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால் அது தெளிவான வரதட்சணையே ஆகும்.
மனைவியின் சொத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் கணவன் கைவைப்பது கூடாது. கணவன் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அவன்தான் தன்னுடைய மனைவிக்கும் அவள் மூலம் தனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்புதாரியே தவிர மனைவியின் சொத்தில் இருந்து அவள் விருப்பம் இல்லாமல் எடுத்துக் கொள்வது மார்க்க அடிப்படையில் ஹராமானதாகும். மனைவி விரும்பினால் தன்னுடைய கணவனுக்கு அன்பளிப்பாகவோ, அல்லது தர்மமாகவோ வழங்கலாம்.
இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்! என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்றுபெண்களே! தர்மம் செய்யுங்கள்;ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?எனப் பெண்கள் கேட்டதும்நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்;கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியைஅறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்என நபி(ஸல்) அவாகள் வினவ,இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்! என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத்தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?) என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (1462)
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையி்ல் இருக்கிறார்கள். அவர்களுடைய மனைவி ஜைனப் (ரலி) அவர்களோ தர்மம் செய்கின்ற அளவிற்கு செல்வ வசதியைப் பெற்றிருக்கின்றார்கள். அப்படியிருந்தும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மனைவியின் நகையில் கைவைக்கவில்லை. மனைவியாக விரும்பி தர்மம் செய்யும் பொழுதுதான் பெற்றுக் கொள்கிறார்கள்.
எனவே திருமணத்தின் போது ஒரு பெண்ணிற்கு அணிவிக்கப்படும் நகை அப்பெண்ணின் சொத்தாகத்தான் கருதப்படுமே தவிர அதனை மணமகனிற்குரியதாகவோ, அல்லது மணமகன் வீட்டாருக்குரியதாகவோ கருதினால் அது வரதட்சணை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
அது போன்று திருமணத்தின் போதுதான் ஒரு பெண்ணிற்கு நகை போடவேண்டும் என்பது கிடையாது.  ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால்  அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாகத்தான் அன்பளிப்பை வழங்க வேண்டும்.
            நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:
என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக்கட்டளையிட்டாள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, "இல்லை'' என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்துஅன்பளிப்பை ரத்து செய்தார்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல்நூல்: புகாரி 2587
மற்றொரு அறிவிப்பில், "நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள்,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும்அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக்காட்டுகின்றன.
ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாகபெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம்இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகைநிலம்சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.
பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும்,மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால்பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள்.மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.
இது போன்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு நகை போடுவது குற்றமாகாது.            
ஒரு தகப்பன் தான் உயிரோடும் வாழும் காலத்தில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமாக அன்பளிப்பு வழங்கிவிட்டால் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்ற பிரச்சினையும் ஏற்படாது.
மொத்தத்தில் ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு முறையாக நகை அணிவித்தால் அது மார்கத்தி்ல் குற்றமாகக் கருதப்படாது. அது போன்று ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு போடப்பட்ட நகை அவளுக்குரியதுதான். அதில் தனக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை விளங்கி நடந்து கொண்டால் அது வரதட்சணையாகவும் கருதப்படாது.

நன்றி - நாஸீர் ஆன்லைன் 

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger