இப்தார் விருந்து பற்றி

அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன? 

 பதில் 

அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இருவகைகளில் உள்ளன. 

ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி 

இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி 

கருணாநிதி போன்றவர்கள் முதல் வகையான நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பள்ளிவாசலிலோ அல்லது திருமணக் கூடங்களிலோ நோன்பு துறக்க முஸ்லிம் தலைவர்கள் ஏற்பாடு செய்து கருணாநிதி வகையறாக்களை நோன்பு துறக்க அழைப்பார்கள் 

நோன்பை அரசியலாக்குவது பொதுவாகக் காண்டிக்கத் தக்கது என்றாலும் இது கூடுதல் கண்டத்துக்கு உரியதாகும். 

நோன்புடன் எந்தச் சம்மந்தமுமில்லாத கருணாநிதி வகையறாக்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்வது லட்டர் பேடுகளின் அடிமைத்தனத்துக்கு எடுத்துக் காட்டாகும். நோன்பு துறப்பதற்கான விருந்து என்றால் நோன்பு நோற்ற மக்களை அழைத்து அவர்களுக்காக சொந்தச் செலவில் உணவு வழங்கப்பட்டால் அதை விருந்து என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். நோன்புடன் சம்மந்தமில்லாதவரை நோன்புதுறக்க அழைப்பது அருவருக்கத்தக்கதாக உள்ளது. 

நோன்பு வைக்காதவர்களை மதித்து நோன்பாளிகள் வைக்கும் விருந்தாக இது அமைந்துள்ளது. 

இதில் நோன்பு துறக்க அழைக்கப்பட்ட அரசியல்வாதி நோன்புதுறக்க(?) தாமதமாக வந்தால் அவர் வரும்வரை நோன்பு துறக்கும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் அயோக்கியத்தனங்களையும் நாம் பார்க்கிறோம். 

இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஊழல் பெருச்சாளிகளான முஸ்லிம் முத்தவல்லிகள் இவர்களை நோன்புதுறக்க பள்ளிவாசலுக்கு அழைப்பார்கள். வக்பு போர்டு மூலம் இடையூறு வரக்கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் நடத்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இரண்டாவது வகையாகும். 

இவர்கள் தமது சொந்தச் செலவில் விருந்தை ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு விருந்தளிப்பார்கள். தங்கள் கூட்டணியில் உள்ள அல்லது கூட்டணிக்கு வரவாய்ப்புள்ள கட்சிக்காரர்களை அழைத்து இந்த விருந்துபசாரம் நடக்கும். 

நம்ம செலவில் அவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு அதை விருந்து என்று சொல்லும் அயோக்கியத்தனம் இதில் இல்லை. அவர்கள் செலவில் நமக்கு சாப்பாடு போடப்படுவதால் இந்த வகையில் இரண்டு விருந்துகளும் வேறுபடுகின்றன. 

இந்த வகையில் இவை வேறுபட்டாலும் பல விஷயங்களில் ஒன்றுபடுகின்றன. 

விருந்தளிப்பவர்கள் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் நோன்பு நோற்பவர்கள் அல்லர். காலை முதல் மாலை வரை நன்றாகச் சப்பிட்டு விட்டு நோன்பாளிகளுடன் நோன்பாளிகளாக தொப்பி போட்டும் முக்காடு போட்டும் ஏன் நடிக்க வேண்டும்? இவர்கள் நடிக்கிறார்கள் என்பதைக் கூட முஸ்லிம் பொதுமக்கள் விளங்க மாட்டார்களா? 

நோன்பு நோற்ற சிலரை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்து இவர்கள் நோன்பு வைத்திருப்பது போல் நடிக்காமல் பரிமாறினால் நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

இரண்டு சாராரும் ஒரு அடிப்படையான விஷயத்தை மறந்து விட்டனர். மார்க்கத்தை மதித்துப் பேணுவதிலும் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்துடன் அமைய வேண்டும் என்பதிலும் மக்கள் தெளிவாக உள்ளனர். 

அரசியல்வாதிகளை அழைத்து நோன்பு துறப்பது பொதுவான முஸ்லிம்களுக்கு அருவருப்பையே ஏற்படுத்தும். நம்முடைய வணக்கத்தை ஏன் இவர்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற கோபத்தையே இது பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். 

இவர்கள் முஸ்லிம்களுக்கு என்னவோ அதிகம் செய்வதாக முஸ்லிமல்லாத மக்களும் நினைப்பார்கள். 

கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் தங்களுக்கு நெருக்கம் என்று காட்டிக் கொள்ள புகழ் விரும்பும் முஸ்லிம் பிரமுகர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

இவர்கள் நோன்பையும், நோன்பாளிகளையும் மதித்தால் குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலில் அல்லது பல பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் மக்களுக்காக கருணாநிதி அல்லது ஜெயலலிதா செலவில் நோன்பு துறக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் முஸ்லிம்களுக்கு அது தேவையற்றதாக இருந்தாலும் நடிக்கவில்லை. அரசியலாக்கவில்லை. நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

செய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் இப்படி செய்யலாம். 

நம் தலைமையகத்தில் சில நாட்களுக்கான நோன்பு துறக்கும் செலவுகளை முஸ்லிமல்லாதவர்கள் செய்கின்றனர். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இது போல் அவர்களும் தங்களுக்கு விருப்பமான பள்ளிவாசல்களைத் தேர்வு செய்து அரசியல் கலப்பில்லாத நோன்பு விருந்தை நடத்தலாம்.. பள்ளிவாசலில் வழக்கமாக நோன்பு துறப்பவர்கள் மட்டும் கலந்து கொள்வதால் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை வைத்து பிழைப்பு நடத்துவதையும் தவிர்க்கலாம்.

onlinepj.com
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger