காலம் எனும் ஆயுதம்!





'இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (16:12)
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளை (?) செய்து புத்தாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தட-புடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள(?) எஸ்.எம்.எஸ்-கள், ஈ-மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும் அன்பு(?) வெளிப்படுத்தப்படும்.
இந்த விழாக்கோலம் நம் சகோதரர்களையும் விட்டபாடில்லை. இஸ்லாமிய வருட பிறப்பானாலும், ஆங்கில வருட பிறப்பானாலும் அல்லது பிறந்த நாளானாலும் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிந்தித்து பார்த்தால் அதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
உலகத்தில் ஏதாவது சாதனை செய்தோ அல்லது கஷ்டப்பட்டு எதையாவது அடைந்தாலோ அதில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உள்ளது. முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரு பெருநாட்களும் இவ்விதத்திலேயே அமைந்துள்ளன. ஒரு மாதம் இறைவனுக்காக தன்னுடைய பசியையும், தாகத்தையும் இச்சைகளையும் துறந்து இறையச்சம் என்ற உன்னதத்தை அடைந்தோம் என்பதற்காகத்தான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.
எல்லா தியாகங்களையும் செய்து தன்னுடைய வாழ்விலே மனித குலத்திற்கு முன்னுதாரணமாக உள்ள நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாகவும் நாமும் இறைவனுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத்தயார் என வெளிகாட்டும் விதமாக இறைவன் சொன்ன வழியிலே அறுத்து பலியிட்டு ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டை அடைவதற்கு நம்முடைய உயிரை நம்முடைய கையிலா பிடித்து வைத்திருந்தோம் கொண்டாடுவதற்கு? புத்தாண்டு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் வல்ல இறைவன் கொடுக்கும் வரம் அதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அதை கொண்டாடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.

ஒருதினம் கொண்டாடப்படுவதற்கு அறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதும் அடிப்படையாக இருக்குமேயானால் அதில் மனித சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்திட வாய்ப்புண்டு.வெறும் கூத்து-கும்மாளம்-போதை-ஆட்டங்கள் போன்ற கேளிக்கைகளால் ஒருதினம் அனுஷ்டிக்கப் படுகிறதென்றால் அதனால் பெரும் பயன் எதுவும் உலகிற்கு கிடைத்து விடுவதில்லை. புதுவருடத்தை அடைந்து விட்டோம் என்பதாலும், அதில் வரக்கூடிய நாட்கள் சந்தோஷமாகவும், நல்லதாகவும் அமைய வேண்டும் என்பதாலும் அவ்வருடத்தின் முதல் தினத்தை கொண்டாடுவதாக மக்களில் சிலர் கூறுகின்றனர்.


நாட்களும், வருடங்களும் நல்லதாகவும், சந்தோஷமாகவும் அமையவேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கான அணுகுமுறை வீண் கேளிக்கை ஆட்டங்கள்தான் என்பது நியாய உணர்வுள்ள யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது.

பகல்-இரவு, நாட்கள்-வருடம் என மாறி மாறி வரும் காலநிலைகளை படைத்ததும் மாறி வரச் செய்வதும் மகத்தான வல்லமைமிக்க அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பேராற்றலாகும். அவனது பேராற்றலால் தோன்றும் தினங்களை மது குடித்தும், ஆடிப்பாடியும் இன்னும் பல வரம்பு மீறிய செயல்களாலும் கொண்டாடுவது தகுமான முறையான காரியமாகுமா? இஸ்லாத்தில் அதற்கு அனுமதி உள்ளதா? ஒருபோதும் கிடையாது. நாட்களையும், வருடங்களையும் தனது தனிப்பெரும் ஆற்றலால் அல்லாஹ்தான் நம்மை அடையச்செய்கின்றான். அவறை அடைந்ததில் நம்முடைய முயற்சி என்று எதுவும் இருக்கிறதா?

மிகப்பெரும் மகான்கள் என்று சொல்லப்பட்ட, சொல்லப்படும் மனிதர்களுக்காவது தினங்களை படைப்பதில் ஏதாவது பங்கிருந்திருக்கிறதா? எள்முனையை ஏழு கோடியாகப் பிரித்து அதில் ஒரு பிரிவு அளவுக்காவது காலத்தைப் படைப்பதில் அல்லாஹ்வைத் தவிர்த்து பிற மனிதர்களுக்கோ, சக்திகள் எனப்படுபவைகளுக்கோ ஆற்றல் இருக்கிறதா என்றால் கொஞ்சம்கூட இல்லையென்ற முடிவுக்கே வர முடியும். அல்லாஹு அக்பர்!

இப்படி நம் வாழ்நாளில் ஒவ்வொரு தினங்களை அடைவது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாக இருக்க அந்த ஒவ்வொரு தினத்தை அடையும்போதும் காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வாக்கு களையும், காரியங்களையும் கூறுவதும் செய்வதும்தான் ஒரு நன்றியுள்ள அடியானின் பொறுப்பாகும்.
நபி(ஸல்) அவர்கள் காலையிலும், மாலையிலும் பின்வருமாறு பிரார்தித்தார்கள், 'அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூத்து, வ இலைகன் னுஷுர். 
 
பொருள்: யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே காலைப் பொழுதை நாங்கள் அடைந்தோம். உன்னைக் கொண்டே மாலைப் பொழுதை அடைவோம். உன்னைக் கொண்டே உயிர் பெற்றோம். உன்னைக் கொண்டே இறப்பெய்துவோம். உன்பாலே (மரணத்திற்குப் பிறகு) எழும்பி வருதலும் உண்டு.

மாலைப்பொழுதை அடையும் பொழுது

'அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூத்து, வஇலைஹில் மஸீர் என்று கூறுவார்கள். (நூல்: புகாரி) 
இப்படித்தான் காலத்தை கண்ணியப்படுத்தும் விதத்தை மார்க்கம் கற்றுத்தருகின்றது.

காலத்தை ஏசாதீர்!

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்;து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. (103: 1-3)
சிலர் எப்போதுமே காலத்தை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். காலத்தை ஏசுவது வல்ல அல்லாஹ்வை ஏசுவதை போல என பின்வரும் நபிமொழியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போதித்துள்ளதால் அதை முழுமையாக தவிர்ப்போம்.
'அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது. என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 6181 

தேவை எதிர்கால திட்டம்!

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...  'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)
நம்முடைய வாழ்வில் நமக்காகவும் நம்முடைய குடும்பத்திற்காகவும் எப்படி எதிர்கால திட்டங்களை தீட்டுகிறோமோ அதைப்போலவே நிரந்தர மறுமை வாழ்விற்காக நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் எனச் சிந்தித்து அதற்கேற்றார்போல் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என இந்த திருமறை வசனம் நமக்கெல்லாம் போதிக்கிறது.

வீண் விளையாட்டிற்கு இடமில்லை!

வல்ல இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மீறுமளவிற்கு அளவுக்கு அதிகமாக வீண் விஷயங்களில் கேளிக்கைளில் நம்முடைய பொழுதுகளை போக்கி கொண்டு டைம் பாஸ் (TIME PASS) என சொல்லிக் கொண்டிருக்கிறோம். வணக்க வழிபாடுகளுக்கு மாத்திரம் நேரமில்லை என்ற ஒரு சொதப்பல் வாதத்தை நாம் முன் வைக்கிறோம். மறுமையிலும் இந்த புலம்பல் தொடரும். அதற்குமுன் உஷாராகிக்கொள்ள வல்ல இறைவன் பின்வருமாறு எச்சரிக்கிறான்.
ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்? என்று (இறைவன்) கேட்பான். ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக! என்று கூறுவார்கள். குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா? என்று அவன் (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன் 23: 112, 113, 114)
இறுதி நேர அவலம்!

தங்களுடைய வாழ்வை வல்ல இறைவன் சொன்னது போல் அமைத்துக் கொள்ளாமல் மரணிக்க நேரிடுபவர்களுக்கு இறுதி நேரத்தில் (மரண தருவாயில்) ஏற்படப்போகும் அவலத்தை திருமறையில் வல்ல அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

'உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ''இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான். அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 63: 10, 11)
இந்த அவல நிலையை தவிர்க்க நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை இறைவன் சொன்னபடி பயன்படுத்த முயற்சிப்போம்.

காலம் கடந்த ஞானம்!

மரணத்தருவாயில் வாய்ப்பு மறுக்கப்பட்டது போல், மறுமையிலும் அந்த உன்னத வாய்ப்பும் மறுக்கப்படும் என வல்ல அல்லாஹ் எச்சரிக்கிறான்.
'எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம் என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். ''படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை (என்று கூறப்படும்)  அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம் என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா? (அல்குர்ஆன் 14:44) என்ற அல்லாஹ்வின் வாக்கை மனதில் நிறுத்திக்கொள்ளவும்.
காலம் படைக்கப்பட்டதின் நோக்கம்!

'இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிpவுபடுத்தினோம். (அல்குர்ஆன் 17:12) 

'இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்.(அல்குர்ஆன் 41:37

மேற்கூறிய ஆயத்துக்களில் வல்லநாயன் அல்லாஹ் காலம் படைக்கப்பட்டதின் நோக்கத்தை தெளிவுபடுத்துவதுடன், அதன் பயன்பாட்டையும், அந்த பயன்களை அனுபவிப்பதன் மூலம் படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தையும் சொல்லித்தருகிறான்.

முஸ்லிம்களாக வாழ்ந்து, மரணிக்க வேண்டிய நாமோ, அதை விட்டு விட்டு பிற கலாச்சாரங்களை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் பெருமை கொண்டு நம்முடைய பொருளாதாரம் மற்றும் நேரத்தை வீணாக செலவு செய்து நம் வாழ்வை நாமே நஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட தூய மார்க்கத்தை அற்பமான சுகங்களுக்காக விலை பேசிக்கொண்டிருக்கிறோம். இது முறைதானா? நீதம்தானா? அல்லாஹ்வுக்கு நாம் செய்கின்ற நல் உபகாரமா? எண்ணிப்பார்க்க வேண்டாமா அருமைச் சமுதாயமே!


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'எவர் ஒருவர் ஒரு சமுகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே! அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: அஹ்மது 4968

இந்த ஹதீஸின் விளக்கத்தின்படி தேவையில்லாத கலாச்சாரங்களையும்,கொண்டாட்டங்களையும் கைகொள்வதிலிருந்து விட்டு விலகி வல்ல ரஹ்மானின் அருளுக்கு பாத்தியப்பட்டவர்களாக ஆவோமாக! அல்லாஹ் மகத்தானவன்!

நன்றி - tntj rahmathnagar 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger