Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

ரமளானை வரவேற்போம்!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)


மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.

எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்.

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். 

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.
தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை -  அது ஆணாயினும், பெண்ணாயினும் -  ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் 

மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. 

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்! 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
  
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)

இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான். 

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம்  என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.

அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான்.எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.

ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான். 

மேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ அந்த  ஏழை எளியோரைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ்வுக்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவும் இறையச்சத்தின் ஓர் சாராம்சமாகும். இதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுவதை பேணிக் கொள்ள வேண்டாமா?

இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம்.அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

 ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 2119

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 1894

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1904

படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி  அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று!

மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1901

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நோன்பின் மூலமாக இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

நன்றி- துபாய் ததஜ
0 comments

குர்ஆனை அதிகம் ஓதிடுவோம் நற்பல நன்மைகளை பெற்றிடுவோம்

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளை எடுத்துக் காட்டி, மக்களை அமல் செய்வதற்கு ஆர்வமூட்டும் விதமான செய்திகள் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன. திருக்குர்ஆனை ஓதுபவருக்கு அல்லாஹ் அள்ளி வழங்கும் நன்மைகளை இக்கட்டுரையில் பார்ப்போம். 

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். ”உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் ”அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். ”உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம் 

ஓதுபவருக்கு உவமை 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020) 

மலக்குகளுடன் சஞ்சரிப்பவர் 

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி  

பொறாமைப்படுதல் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். அறவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி (5025) 

எழுத்துக்குப் பத்து நன்மை! 

”அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி 

சூழ்கின்ற அருட்கொடையும் சுற்றி நிற்கும் வானவர் படையும் 

”அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் இந்தச் செய்திகளின் அடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதி நன்மையை அடைவோமாக!

நன்றி- சஃப்வான் லங்கா
0 comments

வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்!

டந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கை நிறையச் சம்பளத்துடனும் கவர்ச்சியான சலுகைகளுடனும் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் போதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளற்று இருந்த இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து வரத் துவங்கிய அந்நியச் செலவாணிகளில் சுகம் கண்டு, கிடைத்தவரை லாபம் என்ற மனநிலையில் நாடு திரும்ப நேரிடும் வெளிநாடுவாழ் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் ஏதுமின்றி இருந்தன.

2010-2011 ஆம் ஆண்டில் துனீஷியா, எகிப்து, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஆட்சியாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள் இதனை "வளைகுடா வசந்தம்" என்று குறிப்பிட்டனர். பெட்ரோலிய வளம் மிக்க ஏனைய அரபு நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் இருந்தாலும் அரேபிய மன்னராட்சியாளர்கள் அவற்றை ஓரளவு சமாளித்து வருகின்றனர். எனினும், இங்கொன்றும் அங்கொன்றுமாக அவ்வப்போது புரட்சிக்குரல் எழுவதும் அவற்றைத் திரைமறைவுப் பேரங்கள் வாயிலாகவோ அல்லது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பெயரில் சாம/பேத/தண்ட நடவடிக்கைகள் வாயிலாகவோ ஒடுக்குவதும் நடைபெற்று வருகின்றன.
நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்... இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே? இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக் கிடக்கு?
இந்நிலையில் எஞ்சியுள்ள அரேபிய நாடுகளிலும் வளைகுடா வசந்தம் பரவி, இதுநாள் வரை அனுபவித்து வந்த சுகபோக வாழ்வுகள் பறி போய்விடுமோ என்ற கவலை அரபு ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதால், தம் குடிமக்களை வசப்படுத்த பல்வேறு சலுகைகளை, நலத் திட்டங்களை அவர்கள் அறிவித்தனர். ஏற்கனவே குடிமக்களுக்கு நிலம், வீடு, நீர், மின்சாரம், உயர்கல்வி, திருமணம் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வளைகுடா அரசுகள் இலவசமாக வாரி வழங்குவது கவனிக்கப் பட வேண்டியதாகும். எனினும், தற்போது அதிகம் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று வருவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை சிறிது சிறிதாகப் பெருகியதால், இத்தகைய நலத் திட்டங்களில் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

இதனைக் கண்டு கொண்ட ஆளும் வர்க்கம், குடிமக்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது தன் பார்வையைத் திருப்பியது.. அவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ஆள்வோர் விதித்தனர். இதன் விளைவாக, சவூதியின் நிதாகத் (Nitaqat/அறநெறி) சட்டத்தைத் தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது கிடுக்கிப் பிடி சட்டம் பாய்கிறது. இது, உள்நாட்டு மக்களுக்கு உயர் பதவிகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக அமைக்கப்பட்ட Saudization, Omanization, Qatarization, Emiratization போன்றவற்றின் புதிய பதிப்பு என்றாலும், இம்முறை சற்று கூடுதல் கெடுபிடிகள் உள்ளன.


சவூதியின் நிதாகத் சட்டத்தின்படி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பினை இழந்த செய்திகளைக் கடந்த சில மாதங்களாக அறிந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக முன்னறிவிப்பின்றி, குவைத்தும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் சிக்கியவர்களுள் தாய்நாடு திரும்பத் தயங்குபவர்கள், மறுபரிசீலனைக்கு விண்ணப்பிப்பவர்கள், நிபந்தனைக் காலத்திற்குள் வெளியேறாதவர்கள் என எந்தப் பேதமுமின்றிக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையில் அடைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தாய்நாட்டிற்குத் திரும்ப விமானங்களில் இடம் கிடைக்காத குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக் கணக்கானோரை வெளியேற்றிக் கொண்டிருப்பது இந்தியத் தூதரகங்களுக்கே சவாலான விசயமாக உள்ளது. காலக் கெடுவை நீடிக்கக் கோரி இந்தியத் தூதரகம், தமிழக அமைப்புகள், மற்றும் பேரவைகள் சார்பாக முன் வைக்கப்பட்டவேண்டுகோளும் நிராகரிக்கப் பட்டுள்ளது.
 
(வெளியாகும் செய்திகளின்படி, குவைத்தில் இருந்து மட்டும் வருடத்திற்கு ஒரு லட்சம் வீதம் என மொத்தம் 10 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை, பலவந்தமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் மட்டும் மொத்தம் 6.5 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர் என்பதும் அதில் சரிபாதி கேரள மாநிலத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
 
வளைகுடா நாட்டு அரசுகள் மேற்கொண்டு வரும் இந்த அடக்குமுறை, சரியென்றும் தவறென்றும் இருவிதமான கருத்துக்கள் இந்தியர்களிடையே நிலவி வருவதைக் காண்கிறோம்.  "நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்... இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே? இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக்கிடக்கு?" என்பது போன்ற கமெண்ட்டுகளோடு வளைகுடா அரசுகளின் இச்செயல் மிகச் சரிதான் என்று ஓட்டளித்த நபர்கள், நல்ல ஸ்திரமான வேலைகளிலும் உயர் பதவிகளிலும் கை நிறைய சம்பாதிப்பவர்கள்; அதிர்ஷ்டவசமாக இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள்.
 
கடைமட்டத்தில் தொடங்கியுள்ள இந்தச் 'சுத்திகரிப்பு' நடவடிக்கை மேல் மட்டத்திலும் தொடர்வதற்கு அதிகக் காலமில்லை. இப்போதே 60 வயதைத் தொட்ட சீனியர்களுக்குக் குடியேறல் (இக்காமா) புதுப்பித்தல் இல்லை என்று சொல்கிறார்கள். அடுத்து, தொழில் மற்றும் வர்த்தகச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் திறனாளிகள் தவிர்த்து மற்ற பணிகள் மண்ணின் மைந்தர்களுக்கே என்றும் தகவல்கள் வருகின்றன. வெளிநாட்டவர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் துவங்கி டிரைவிங் லைசன்ஸ் வரை கழுத்தை நெரிக்க வைக்கும் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில், நம் அடி மனதில் எழும் கேள்விகளைத் தடுக்க இயலவில்லை. ஆனால், இந்தக் கேள்விகள் மூலம் எழுந்து நிற்கும் "யானைக்கு மணி கட்டுவது யார்?" என்ற கேள்வி அதைவிட பூதாகரமாய் நிற்கிறது.
  • ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுவது, அங்கு பணியாற்றச் சென்றவர்களின் கடமை. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரடைந்தவுடன் பிழிந்து போட்ட கரும்புச் சக்கையாய், இதுநாள்வரை அந்த நாடுகளின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள் மீது இப்படிக் கடுமை செலுத்தி வெளியேற்றுவது எவ்வகையில் நியாயம்?
  • ஸ்பான்ஸரின்கீழ் வேலை செய்யாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடமிருந்து வெளியேறிச் "சட்டத்தை மீறிவிட்ட குற்றத்திற்காக" நாட்டை விட்டுத் துரத்தப்படும் அவல நிலை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வேலைக்குவந்த தொழிலாளி, என்ன காரணத்தால் தப்பித்து ஓடினார் என்று நடுநிலையாக இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட பிறகு, தவறு செய்தவர் பக்கம் நடவடிக்கை எடுப்பதுதானே சரியான அணுகுமுறை?
    • தாய், தாரம், சகோதரிகள் கழுத்தில் கிடந்த கருகமணி / தாலி உட்பட அனைத்தையும் விற்று அடகுவைத்து, டிராவல்ஸ் புரோக்கர் - ஏஜண்ட்டுக்கும் விமான டிக்கெட் என்றும் பணம் கட்டி வளைகுடா கனவில் வரும் தொழிலாளிகள், ரத்தம் சிந்திச் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையை உள்நாட்டு ஸ்பான்ஸருக்குக் கப்பம் கட்டும்படியான ஃப்ரீ விஸா (ஆஸாத் விசா) எனும் அடிமை வியாபாரத்தை வளரச் செய்த இத்தகைய ஸ்பான்ஸர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப் போகின்றன இந்த அரசுகள்?
(நாம் அறிந்த இந்திய டிரைவர் ஒருவர், 800 ரியால்கள் மட்டுமே சம்பளம் தரும் தமது ஸ்பான்ஸர் வீட்டுக் கொடுமை தாங்க முடியாமல், வெளியில் சென்று வேலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அடிமையை "விடுதலை" செய்வதற்காக ஸ்பான்ஸர் கேட்ட கப்பத் தொகை 8 ஆயிரம் ரியால்கள் முதல் 10 ஆயிரம் ரியால்கள் வரை. இந்தக் கடனை அடைக்க எத்தனை மாதங்கள் தனியே உழைக்க வேண்டியிருக்கும் என்பதையும் அந்தக் கடன் தொகை அடைந்த பிறகே அவருடைய குடும்பத்தினருக்காக உழைக்கத் தொடங்க வேண்டும் என்பதையும் சிந்தித்தால் முதுகுத் தண்டு சில்லிடும். இவருக்காவது ஒரு முறையோடு ஆயிற்று. வருடந்தோறும் கப்பம் கட்டும் "கத்தாமா" (பணிப்பெண்கள்) கண்ணீர்க் கதைகள் இங்கே நிறைய உண்டு. இந்நாட்டுக் குடிமகன்களுக்கு மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டித் தரும் அநியாயத் தொழில் இது என்பதை அரசுகள் "அறியாமல்" போனது துரதிருஷ்டம்) -
இந்தக் கொடுமையெல்லாம் கடைநிலைத் தொழிலாளிகளுக்கு மட்டும் தான் என்றில்லை. படித்துப் பட்டம் பெற்ற மேல்தட்டு அலுவலர்கள் கூட இந்த அடிமை வியாபாரத்தில் சிக்கி வாழ்க்கையில் சில வருடங்களை இழந்துள்ளனர்.
  • இத்தகைய நாடுகளில் இயங்கும் தொழிலாளர்களுக்கான அமைச்சகங்கள் (Ministry of Labor) மற்றும் மனித உரிமை மீறல்பற்றி ஏட்டளவில் பேசும் ஐ.நா, ஸ்பான்ஸர் மீதுள்ள தவறுகளைக் காணும் சூழல்களில் மவுனித்து விடுவது அதன் பாரபட்சத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
  • 5.நாட்டை விட்டு ஒரு தொழிலாளியை வெளியேற்றும் தகுதிகள் என்னென்ன என்று குவைத் அரசு விளம்பரப் படுத்தியிருக்கும் பட்டியல் வியப்பை ஏற்படுத்துகிறது. கீழே காண்க:

  • காரை சரியான இடத்தில் பார்க் செய்யவில்லை என்றாலும் நாடு கடத்தல்
  • சீட் பெல்ட் போடவில்லை என்றாலும் நாடு கடத்தல்
  • தமது PRO வின் மொபைல் எண் கையில் இல்லை என்றாலும் நாடு கடத்தல்

என்று நீளும் பட்டியல் மிரள வைக்கிறது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் சிக்கும் அப்பாவிகள் எவரையும், எந்த ஒரு காரணத்தையும் சொல்லி நாடு கடத்தி விட இயலும். இவ்வளவு தூரம் சுற்றி வளைப்பதை விட "வெளிநாட்டவர் என்று சொன்னாலே நாடுகடத்தல்" என்று நேரடியாக அறிவித்திருக்கலாம்.
  • மேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்டுள்ள சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் உள்நாட்டவர்களா அல்லது பிழைக்கவந்த வெளிநாட்டவர்களா என்று ஆதாரங்களுடன் உள்ள புள்ளி விபரங்களைப் பார்வையிட்டால் விடை என்ன என்று தனியே சொல்லத் தேவையில்லை. விபத்துகளின்போது விசாரணைக்குக் காவல்துறை அழைத்துச் சென்றால் உள்நாட்டவரோடு வெளிநாட்டவர் எவ்வாறு நடத்தப்படுவர் என்பதிலும் ரகசியம் ஏதுமில்லை.

இத்தகைய கெடுபிடிச் சட்டநடவடிக்கை மூலம் கடைநிலை வெளிநாட்டுப் பணியாளர்களைப் பலவந்தப்படுத்தி வெளியேற்றி விட்டாலும் வளைகுடா வசந்தம் வீசப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. ஏனெனில் இவ்வாறு வெளியேற்றப்படும் கடைநிலைப் பணியாளர்களால் ஏற்படும் வெற்றிடத்தை உள்நாட்டுப் பணியாட்கள் கண்டிப்பாக நிரப்பப் போவதில்லை. தீயாய்க் கொளுத்தும் வெயிலில் கட்டுமானப் பணிக்கோ, நிரம்பி வழியும் குப்பை கூளங்களை அள்ளவோ அரபு குடிமக்கள், பணியாளர்களாக முன் வரப் போவதில்லை.
 
மேலும், ஓரளவு படித்த அரபு இளைஞர்களும் ஆசிய நாட்டவர்களைப் போன்று எல்லாச் சூழலுக்கும் இயைந்து பணியாற்றும் திறமையும் பொறுமையும் பெற்றவர்களல்லர். சாதாரணமாகவே இவர்களது வேலை நேரம் 3-5 மணி நேரங்களே என்பதையும் கவனத்தில் கொண்டால் இத்தகைய கெடுபிடிச் சட்டங்கள், உள்நாட்டு மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகங்களே அன்றி வேறில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக அதிகாரங்களைத் தக்க வைப்பதற்காகவும் உள்நாட்டுக் கலவரம் - மக்கள் புரட்சி என்ற சிந்தனைகள் குடிமக்களுக்கு வந்து விடாமல் செய்வதற்காகவும் பல்வேறு மானியங்களை அள்ளி வீசுகின்றனர். மேலே சொன்னபடி,  திருமண உதவி, இலவச வீடுகள், இலவச உயர்கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டுமெனில் வெளிநாட்டவர்களின் இருப்பு அவசியம். எனவே, அவர்களைத் துடைத்து விரட்டிவிட்டு,  பெட்ரோலை மட்டுமே நம்பியிருக்கும் உள்நாட்டு உற்பத்தி பெரிதாய் ஏதுமற்ற அரபு நாடுகளால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம். குடிமக்களுக்கான சலுகைகளுக்குச் சிறிதளவு குறைவு ஏற்பட்டாலும் வளைகுடா வசந்தம் எழுச்சி அடையும் அளவிற்கே இங்கே நிலைமை பலவீனமாக உள்ளது.

இச் சூழலில் இந்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது யாதெனில், கோடிக்கணக்கான ரூபாய்களை அந்நியச் செலாவணியாக ஈட்டி, இந்திய நாட்டிற்குப் பெரும் வருவாய்க் கேந்திரமாக இதுநாள் வரை திகழ்ந்த வளைகுடா தொழிலாளர்கள் அடுத்த 10 வருடங்களுக்கு இவ்வாறு கொத்துக் கொத்தாக மூட்டை கட்டி அனுப்பப்படுவது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக அமையும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட நிலையில், உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் - ஆயிரக்கணக்கில் வந்து குவியும் வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்த இளம் முதியோர்களின் மறுவாழ்விற்கான நலத்திட்டங்களை அமைத்து அவர்களை அரவணைப்பதும் இந்திய அரசுக்கு இந்த நிமிடத்திய அவசியமாக உள்ளது.
 அபூ ஸாலிஹா
நன்றி - சத்தியம்

0 comments

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?

பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)

இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.

வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)

தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.

உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது.

மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்
தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.
சில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர்.
வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல.
அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.
தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.
தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.

ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)

இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.

நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தலைப்பாகை 
தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.

தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி)
நூல்: புகாரி 205

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2421

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2418

இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.

எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.

மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.

எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.
நன்றி -sltj
0 comments

சீரழியும் திரைப்பட சமூகம்!

3 வயது பச்சிளம் பெண் குழந்தை வன்புணர்வு; 60 வயது மூதாட்டி வன்புணர்வு - இவை நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்டன.
சமூக சீர்கேடுகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. 10 வருடங்களுக்கு முன் சமூகத்தில் பாரிய குற்றங்களாக கருதப்பட்டு வந்த விபச்சாரம், முறையற்ற உறவுகள், திருமணத்திற்கு முன் சல்லாபம், மது, புகைப்பிடித்தல் ஆகியவை இன்று சர்வ சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
இதற்கான முன்னணி காரணிகளில் ஒன்றாக திரைப்படங்களும் அத்திரைப்படங்களில் தோன்றும் நாயக நாயகிகளும் உள்ளனர் என்றால் அது மிகையல்ல.
ஓசூரில் அமையப் பெற்றுள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வந்த சென்னையச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரது அறையில் படுகொலை செய்யப்படுகின்றார். அவரை கொலைச் செய்த கொலையாளிகள் மிளகாய்ப் பொடிகளை தூவிச் சென்றுள்ளனர். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக படமாக்கப்பட்டது இப்போது வாழ்வில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. ஆட்டோ சங்கர் போன்ற கொடூர கொலையாளிகள் உருவாக காரணமாக இருந்தவையும் திரைப்படங்களே என்று வரலாறு நமக்கு பாடம் நடத்துகிறது
தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த மகன், தம் தந்தையையே குத்திக் கொன்ற துயர சம்பவம் ஆந்திர மாநிலம் நிலுமாபாத் மாவட்டம் கும்மரிவாடா பகுதியில் 10 தினங்களுக்கு முன் நடைபெற்றது. கணவன் மனைவிக்கிடையே தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தூண்டப்பட்ட மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட விபரீதம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்ன மண்டம் அருகே சகிபந்த் என்ற கிராமத்தில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்றது.
இன்றைய சமுதாயத்தில் திரைப்படங்களின் பாதிப்பு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதை கீழ் வரும் சம்பவம் நமக்கு உணர்த்திக் காட்டுகின்றது. காதலனுடன் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறார் இந்தி நடிகையொருவர். இது குறித்த செய்தி தொகுப்புகள், அந்த நடிகை நடித்த திரைப்பட காட்சிகள் போன்றவை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதனை கவனித்து வந்த 5ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயதே நிரம்பிய பள்ளிச்சிறுவன் கவலையுற்றிருக்கிறான். வீட்டில் யாருமில்லா நேரத்தில் அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.
0 comments

கைபேசி ஆபத்துகளும், ஆலோசனைகளும்.

இன்றைய நாட்களில் தொலை பேசி உபயோகிபவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .தொலை பேசி ஒரு தொல்லை பேசி என்று நாம் கூறினாலும் அதை நம்மால் விட முடிய வில்லை .ஏனென்றால் தொலைபேசி யின் பயன் எவ்வளவு வளர்த்து கொண்டே வருகிறதோ அதே அளவுக்கு பிரச்சனைகளும் வளர்த்து வருகிறது .உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.நாம் பயன்படுத்தும் தொலைபேசியை  எவ்வாறு உபயோக படுத்த வேண்டும் என்று பார்போம் 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்  இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து எஸ் எம் எஸ் வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை வைப்ரேட் மோடில் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் இன்டேர்ர்னல் அண்டனே பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் மனுவல்  புத்தகத்தில் பார்த்து கொள்ளவும். 


செய்தி: தினகரன், 21.11.2011
புதுஆத்தூர்
0 comments

கற்பா? கல்லூரியா?

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 ஆட்டோ அல்லது வேன் பயணம்

 சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

 ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள். 

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள்  நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

 வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. 

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

 'கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

நன்றி
ஏகத்துவம்
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger