Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label வணக்கங்கள். Show all posts
Showing posts with label வணக்கங்கள். Show all posts

ரமளானை வரவேற்போம்!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)


மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.

எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்.

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். 

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.
தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை -  அது ஆணாயினும், பெண்ணாயினும் -  ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் 

மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. 

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்! 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
  
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)

இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான். 

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம்  என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.

அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான்.எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.

ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான். 

மேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ அந்த  ஏழை எளியோரைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ்வுக்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவும் இறையச்சத்தின் ஓர் சாராம்சமாகும். இதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுவதை பேணிக் கொள்ள வேண்டாமா?

இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம்.அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

 ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 2119

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 1894

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1904

படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி  அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று!

மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1901

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நோன்பின் மூலமாக இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

நன்றி- துபாய் ததஜ
0 comments

குர்ஆன் உங்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியதா?


உலகில் தாம் வாழும் காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்ட நபித் தோழர்கள் இஸ்லாத்திற்காக பல சோதனைகளை கடந்து ஈற்றில் உயிரை விடவும் துணிச்சல் பெற்றார்கள் என்றால் அதற்குறிய முக்கிய காரணம் குர்ஆன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய அபார மாற்றமேயாகும். ஸஹாபாக்கள் குர்ஆனை படித்ததுடன் மாத்திரம் நின்று விடாமல், அதனை செயல் வடிவிலும் கொண்டுவர எந்தளவுக்கு ஆர்வம் காட்டினால்கள் என்றால் பத்து வசனங்களை படித்து அதனை தம் வாழ்வில் நடை முறைப்படுத்திய பின்னரே மற்ற வசனங்களை அறிந்து கொண்டார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை கற்றோம்.நபியவர்களிடம் இருந்து பத்து வசனங்களை கற்றுக்கொள்வோம், அதிலுள்ளதை கற்றுக் கொண்டு செயல்படுத்திய பின்னர் தான் பத்து வசனங்களைகடந்து செல்வோம். என்று நபித் தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். “நாங்கள் திருக்குர்ஆனையும், அதன் செயல்பாட்டையும் சேர்த்தே (நபித் தோழர்களிடம்) கற்று வந்தோம்.
அறிவிப்பவர் அபு அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமிய்யு.
நூல் தப்சீர் முஜாஹித் பாகம் 01 பக்கம் 02
பொதுவாக முஸ்லிம்கள் அனைவரினது வீட்டிலும் குர்ஆன் கட்டாயம் இருந்தே தீரும். ஒருவன் தொழுகின்றானோ இல்லையோ குர்ஆன் ஓதுவதற்கு தவறமாட்டான். குறைந்த பட்சம் வியாழன் முடிந்து மஃரிப் ஆனதும் வீட்டிற்கு பரக்கத் கிடைக்கும் என்ற போலி நம்பிக்கை நிமித்தமாகவாவது ஓதுவான்.
நரக விளிம்பினில் இருந்த ஸஹாபாக்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றியமைத்த குர்ஆனைத்தான் நாமும் அன்றாடம் ஓதி வருகின்றோம்.  இருப்பினும் குர்ஆனால் நமக்குள் இதுவரைக்கும் வளர்கப்பட்ட பண்புகள் என்ன? எத்தனை தீய பண்புகளை குர்ஆனால் நாம் விட்டு விலகி வாழ்கின்றோம்? எம் உள்ளத்தை மாற்றியமைத்த வசனங்கள் தான் எத்தனை? குர்ஆன் வசனங்களினால் நாம் அழுது சந்தப்பங்கள் எத்தனை? என்பதை என்றாவது சிந்தித்ததுண்டா?
வீட்டின் பரக்கத்திற்காகவும், நோய் பாதுகாப்பிற்காகவும் (இஸ்மு தட்டிலும், தகடிலும், குப்பி போத்தல்களிலும்) மரண வீட்டிலும் முப்பது ஜுஸ்உக்களை முழுமைப்படுத்தி விட வேண்டும் என்ற தன்மானப் பிரச்சினைக்காகவும், இன்ன பிற சம்பிரதாயங்களுக்காகவுமே குர்ஆன் ஓதப்பட்டால் எங்கனம் குர்ஆன் மனித உள்ளங்களை மாற்றியமைக்கும்?
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின்உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு கூறப்பட்டால் அது அவர்களின்நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன்08:02)
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்று மறுமைக்காக தன் வாழ்கையை தயார் செய்து கொண்டிருக்கும் ஒரு முஃமினுக்குத் தான் அல்லாஹ்வைப் பற்றி நினைப்பதினால் உள்ளம் நடு நடுங்குவதுடன் அவனுடைய ஈமானும் அதிகரிக்கும்.
அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்குஏற்பட்டதை சகித்துக் கொள்வர். (அல்குர்ஆன் 22:35)
ஒருவன் பாவத்தின் வாசலில் நுழையாமல் இருப்பதற்கும் பொருமையைக் கடைப்பிடிப்பதற்கும் ஏழைகளுக்கு உதவுவதற்கும் ஒருவன் முன்வர வேண்டும் என்றால் அவன் அல்லாஹ்வைப் பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இத்தகைய அறிவையும், உள்ளம் பக்குவப்படக் கூடிய வழிமுறைகளையும் குர்ஆன் நமக்கு எடுத்தியம்புகின்றது.
அல்லாஹ்வின் வசனங்கள் கையில் இருக்கும் போதிலும் சீரியலுக்காகவும், சினிமாக்களுக்காகவும் நம் சமுதாயத்தவர்கள் அழுத வரலாறுகள் ஏராளம். ஒருவரின் ஈமானின் அடையாளம் குர்ஆன் ஓதும் போது (அதன் கருத்தாக்க புரிதலினால்) கண்ணீர் வடிப்பதாகும்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்துகொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர்! “எங்கள் இறைவா!நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களை பதிவு செய்வாயாக! எனஅவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 5:83)
அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகின்றது. (அல்குர்ஆன் 17:109)
ஏனைய புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படாத உள்ளுணர்வு ஏன் குர்ஆனுக்கு மட்டும் ஏற்படுகின்றது என்றால் அல்லாஹ்வின் வசனங்கள் நரகத்தின் அச்சுறுத்தல்களையும், அழிக்கப்பட்ட சமுதாய வரலாறுகளையும், நபிமார்கள் மற்றும் நபித் தோழர்கள் மார்க்கத்திற்காக பட்ட துன்பங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் மற்றும் நபித் தோழர்கள் ஆகியோர் அல்லாஹ்வின் வசனங்களுக்காக அழுத சந்தர்பங்களை ஏராளமாக நாம் ஹதீஸ்களின் மூலம் அறிய முடிகின்றது.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிஸா‘அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன்.  “ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியி ருக்கும்?”எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள். நூல் : புகாரி 4582
தன் சமுதாயத்திற்கு எதிராக மறுமை நாளில் தன்னையே அல்லாஹ் சாட்சியாளனாக்குவான் என்ற திருமறையின் வசனத்தைக் கேட்டதும் நபியவர்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். தான் வழிகாட்டிச் சென்ற தனது உம்மத் (சமூகம்) தனது வழிகாட்டளை பின்பற்றாத காரணத்தினால் நாளை மறுமையில் நஷ்டவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தே நபியவர்கள் அழுகின்றார்கள். நபியவர்களைப் போல் இது போன்ற வசனங்களை பார்க்கும் போது நமக்கு என்றைக்காவது அழுகை வந்ததுண்டா?
தொழுகையில் அழுத அபுபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயிலிருந்தபோது, “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்யமுடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்”என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (மக்களிடம்) கூறினார்கள். நான் (உமர் (ரலி) அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், “அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே உமர் (ரலி) அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்கு தொழுகை நடத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிறுத்து! (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், “உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை” என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள். நூல் புகாரி : 716
அபுபக்கர் (ரலி) அவர்கள் தொழுவதற்கு தயாரானால் திருமறைக் குர்ஆனில் வார்த்தைகளை உச்சரிக்கும் போதும், கேட்க்கும் போதும் அழுது விடுவார்கள். இப்படிப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் தொழுகைக்காக இமாமத் செய்தால் குர்ஆன் ஓதும் போது அழுதுவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் உமர் (ரலி) அவர்களை தொழுகை நடத்தும் இமாமாக நியமிக்கும் படி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.
சினிமா சீரியலில் அடுத்த கட்டத்தை பார்ப்பதற்காக வேண்டி தொழுகையை அரைகுறையாக தொழுபவனும், தொழுகையின் இறுதி ரக்அத்தை அவசரமாக எதிர்பார்க்கும் அலட்சியவாதிகளும் அபுபக்கர் (ரலி) அவர்களின் தொழுகையைப் பற்றி சற்று சிந்திக்கட்டும்!
சில நேரங்களில் நமது தொழுகையானது நமக்கே திருப்தியளிக்காமல் ஒரு பிடிப்பில்லாமல் இருக்கின்ற அளவுக்கு நாம் பொடு போக்காக இருக்கின்றோம். தொழுகையில் அபு பக்கர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதும் போது அதைக் கேட்க்கும் ஒவ்வொருவரையும் குர்ஆனின் பக்கம் ஈர்க்க வைக்கும். அபு பக்கர் (ரலி) அவர்களே குர்ஆனின் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு அழுதுவிடுவார்கள்.
அல்லாஹ்வின் வசனத்திற்காக அழுத உபை பின் கஅப் (ரலி) அவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடத்தில் அல்லாஹ் உங்களுக்கு, “வேதம் அருளப்பட்டவர்களிலும் இணை வைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை…” என்னும் (திருக்குர்ஆனின் 98ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று சொன்னார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப்  அவர்கள் அழுதார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நூல் புகாரி – 3809
98 வது அத்தியாயத்தை நபியவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஓதிக் காட்ட சொன்னதாக சொல்லி, ஓதியும் காட்டுகின்றார்கள். இந்த அத்தியாயத்தை தனக்கே ஓதிக்காட்டும் படி அல்லாஹ் சொன்னான் என்பதை அறிந்த நபித் தோழர் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அழுதுவிடுகின்றார்கள்.
98வது அத்தியாயமானது அல்லாஹ்வை மறுப்பவர்களின் தங்குமிடத்தைப் பற்றி விபரிக்கின்றது. இதை உணர்ந்து ஓதும் எந்தவொரு முஃமினும் கட்டாயம் கண்ணீர் சிந்தவே செய்வான். இந்த அத்தியாயத்தை நமது வாழ்நாளில் பல முறை ஓதியிருப்போம், தொழுயைில் செவிமடுத்திருப்போம். எப்போதாவது இவ்வத்தியாயத்தின் கருத்தை படித்தோமா? சிந்தித்தோமா?
இவ்வாறு அல்லாஹ்வை நினைப்பதினாலும், அவனுடைய வசனங்களை படித்து அதன் படி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டு, அல்லாஹ்வின் பயத்தினால் அழுவதினால் மறுமையில் அல்லாஹ்வின் நிழல் அவனுக்குக் கிடைக்கும் என்பது உறுதி. (புகாரி – 6806)
ஆக அன்பின் சகோதர, சகோதரிகளே! திருமறைக் குர்ஆனைப் படிப்பதினால் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிவதினால் உலகம் முழுவதிலும் இருந்து நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களாக பிறந்து வளர்ந்த நாம் குர்ஆனின் வார்த்தைகளைப் படித்துப் பார்த்தோமா? அதன் அர்த்தத்தினால் கவரப்பட்டு குர்ஆனின் வார்த்தைகளினால் உந்தப்பட்டு நமது கண்கள் கண்ணீர் சிந்தியுள்ளனவா? இறைவனின் மார்கத்துடனான நமது தொடர்பு எந்த அளவில் உள்ளது என்பதைப் பற்றி சிந்திப்போமாக! அல்லாஹ்வின் பக்கம் விரைவோமாக!
நன்றி - rasminmisc 
0 comments

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை - தொடர்: 2


ஆக்கம் - அப்துந் நாசிர், கடையநல்லூர்


சென்ற இதழில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், மற்றும் உளூச் செய்த பின் ஓதும் துஆ ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக, தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதைக் காண்போம்.
பாங்கு கூறுவதன் சிறப்புகள்
தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.
பல பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கென்று முஅத்தின்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முஅத்தின்கள் நியமிக்கப்படாத பள்ளிகளும் உள்ளன. முஸ்லிம்களில் அதிகமானோர் பாங்கு கூறுவதற்கு வெட்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே பல பள்ளிவாசல்களில் சப்தமிட்டு பாங்கு கூறுவதற்குச் சக்தியில்லாத வயோதிகர்கள் முஅத்தின்களாக உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட விளங்க முடியாத வகையில் பாங்கின் வாசகங்களைக் கூறுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகும்.
தொழுகைக்காக நாம் கூறுகின்ற பாங்கிற்கு, பாங்கு சொல்பவருக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.
பாங்கு சொல்வதற்குப் போட்டி
ஒரு தடவை பாங்கு சொன்னால் ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தால் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகப் பலர் பாங்கு சொல்வதற்குப் போட்டி போடுவார்கள். ஆனால் இந்த உலகில் கிடைக்கின்ற பல கோடிகளை விட மறுமையில் கிடைக்கின்ற ஒரு நன்மை மிகச் சிறந்ததாகும்.
பாங்கு சொல்லுதல் என்ற நற்காரியத்திற்கு இறைவன் நன்மைகளை வாரிவழங்குகிறான். அவன் வாரிவழங்குவது இவ்வுலகில் நமது கண்களுக்குத் தெரியாது. இதன் காரணமாகத் தான் நாம் அந்த நற்காரியத்தைச் செய்வதில் அசட்டையாக இருக்கின்றோம். பாங்கு சொல்வதால் கிடைக்கும் நன்மையை அல்லாஹ் நமது கண்களுக்குக் காட்டினால் நிச்சயமாக அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக, பாங்கு சொல்பவரை சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்து எடுக்கும் நிலைதான் ஏற்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூற்கள்: புகாரி (615, 654, 2689), முஸ்லிம், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அபூ தாவூத், அஹ்மத்
பாங்கு சொல்வது எவ்வளவு பெரிய நற்பாக்கியம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது. தொழுகைக்காக பாங்கு சொல்பவர் நிச்சயம் தொழுகையாளியாகத் தான் இருப்பார். எனவே தொழுகை என்ற வணக்கம் தான் இந்தப் பாக்கியத்தை அடைவதற்குக் காரணமாக அமைகிறது. இதன் மூலம் தொழுகை என்பது பாரமல்ல. அது பலன்களை வாரி இறைக்கும் செழிப்பான ஒரு தோட்டம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பாங்கு சொல்பவர்களுக்கு நபியவர்களின் பிரார்த்தனை
சாதாரண மனிதர்களின் பிரார்த்தனையை விட நபியவர்களின் பிரார்த்தனை வலிமை மிக்கதாகும். அகில உலகங்களின் இரட்சகன் ஏற்று, பதிலளிப்பதற்குத் தகுதியானதாகும். அந்த இறைத்தூதரின் பிரார்த்தனை, பாங்கு சொல்லும் முஅத்தின்களுக்குக் கிடைக்கின்றதென்றால் இது எப்படிப்பட்ட நற்காரியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் என்பவர் (பின்பற்றி தொழுபவர்களின் தொழுகைக்கு) பொறுப்பாளியாவார். பாங்கு சொல்பவர் (முஅத்தின் தொழுகை நேரங்களில் சரியாக பாங்கு சொல்வதற்காக) நம்புவதற்குரிய ஒருவராவார். எனவே அல்லாஹ் இமாம்களை நேர்வழியில் செலுத்துவானாக! பாங்கு சொல்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவானாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: அஹ்மத் (9418)
தொழுகை நேரங்களை சரியாகக் கவனித்து அதனை மக்களுக்கு அறிவிப்புச் செய்தவற்காகத் தான் முஅத்தின். மக்கள் அவருடைய பாங்கை வைத்துத் தான் தொழுகை நேரங்களை அறிகிறார்கள். எனவே நம்பிக்கைக்குரியவராக ஒரு முஅத்தின் செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் முஅத்தினுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் மன்னிப்பும், சுவனபதியும்
பள்ளிவாசலில் மட்டுமல்ல. பள்ளி அல்லாத எந்த இடத்தில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவது நம்முடைய பாவங்களை மன்னித்து சுவனத்தைப் பெற்றுத் தரக்கூடிய காரியமாகும். இதனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலை உச்சியின் மீதுள்ள பாறையில் தொழுகைக்காக பாங்கு சொல்லி, தொழுகையை நிறைவேற்றும் ஆட்டு இடையனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றான். "இதோ என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள் என்னைப் பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுகையை நிலைநாட்டுகிறான். நிச்சயமாக நான் என்னுடைய அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்து விட்டேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி),
நூற்கள்: அபூதாவூத் 1017, அஹ்மத், நஸாயீ
தொழுகைக்காக பாங்கு சொல்பவருக்குத் தான் இந்தப் பாக்கியம். இதனை தொழுகையாளிகள் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். நாம் நிறைவேற்றும் தொழுகை ஒரு அற்புத பாக்கியம் என்பதை மேற்கண்ட நபிமொழி வலுப்படுத்துகிறது.
அனைத்தின் சாட்சியும் அழைப்பாளருக்கே!
பாங்கு சொல்பவரின் சப்தம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அந்தப் பகுதியில் வாழும் மனிதர்கள்,ஜின்கள், விலங்குகள், புற்பூண்டுகள், மலைகள், மரங்கள், செடி கொடிகள், பள்ளங்கள், ஏரிகள்,ஆறுகள், குளங்கள் மொத்தத்தில் அனைத்துப் பொருட்களும் அவர் செய்த நற்காரியத்தை உறுதிப்படுத்தி அல்லாஹ்விடம் சாட்சி கூறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவ்வாறு சாட்சி கூற வைப்பான். இது பாங்கு சொல்பவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஒரு அருளாகும்.
அபூ ஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் "ஆட்டை மேய்த்துக் கொண்டோ' அல்லது "பாலைவனத்திலோ' இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன''என்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.
நூல்:  புகாரி (609)
தொழுகைக்காக பாங்கு கூறுபவருக்கே இப்படிப்பட்ட பெரும்பாக்கியம் என்றால் தொழுகை எப்பெரும் பாக்கியத்தை தொழுகையாளிகளுக்குப் பெற்றுத் தருகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அழகிய தோற்றம் பெறும் அழைப்பாளர்
பாங்கு சொல்பவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் காண்பதற்கு அழகிய தோற்றத்தை வழங்குகிறான். ஆம்! அவர்களின் கழுத்து மறுமையில் நீளமானதாக இருக்கும். இவ்வுலகில் கழுத்தை நீளமானதாக வைத்து நாம் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் காண்பவர்கள் கவரும் விதத்தில் மறுமையில் பாங்கு சொல்பவர்களுக்குத் தோற்றம் வழங்குவான்.
"மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி),
நூல்: முஸ்லிம் (631)
அழகிய தோற்றத்தைப் பெற்றுத்தரும் இந்த அற்புத பாங்கிற்கு அடிப்படை வணக்கம் தொழுகை தான் என்பதை நாம் இங்கே நம்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
ஷைத்தானை விரட்டும் பாக்கியம்
அல்லாஹ்வின் எதிரி ஷைத்தானை புறமுதுகிட்டு நெடுந்தொலைவுக்கு விரட்டும் மாபெரும் ஆயுதம் தான் பாங்கு. பாங்கு சொல்பவர் அல்லாஹ்வின் எதிரியை விரட்டியடிக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி (608), முஸ்லிம் (634)
ஷைத்தானை விரட்டும் இந்தப் பாக்கியத்தை பெற்றுத் தருவதும் தொழுகை தான்.
பாங்கிற்குப் பதில் சொல்வதன் சிறப்புக்கள்
தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக நபியவர்கள் வழிகாட்டிய ஒரு அற்புத நடைமுறை தான் பாங்கு சொல்லுதல். ஒருவர் முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்கும் போது அந்த பாங்குகிற்குப் பதில் கூறுவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருகிறது.
இன்றைக்கு பெரும்பாலான சகோதரர்கள் பாங்கு சொல்லும் போது அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. ஒரு மார்க்க மீட்டிங் நடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதில் சொல்வதற்காக இடைவெளி விடப்படுகிறது. ஆனால் அந்நேரத்தில் பாங்கிற்குப் பதில் சொல்லாமல் பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இவை தவிர்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.
பாங்கிற்கு நாம் பதில் கூறுவது நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பெரும் பாக்கியமாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளர் "அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் நீங்களும் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள். பின்பு அவர், "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர், "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொன்னால் நீங்கள் "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் "ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று சொன்னால் நீங்கள், "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் நீங்களும் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள். பின்பு அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் நீங்களும் "லா இலாஹ இல்லல்லாஹ்'என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி),
நூல் முஸ்லிம் (629)
உறுதியாகச் சொன்னால் சொர்க்கமும் உறுதி
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யமன் நாட்டில் அருவிகள் கொட்டும் இடத்தில் இருந்தோம். அப்போது பிலால் (ரலி) அவர்கள் எழுந்து பாங்கு கூறினார். அவர் முடித்த போது நபி (ஸல்) அவர்கள் "யார் உள்ளத்தில் உறுதி கொண்டவராக இவர் கூறியதைப் போன்று கூறுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்'' என்று கூறினார்கள்.
நூல்: அஹ்ம்த் (8609)
பாங்கிற்குப் பிறகு ஓதும் துஆக்களின் சிறப்புகள்
பாங்கு சொன்ன பிறகு ஓதும் துஆக்களுக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இது போன்ற நல்லறங்களில் கவனமற்றவர்களாகப் பலர் இருக்கின்றனர். நாம் செய்யும் சின்ன சின்ன நல்லறங்கள் கூட மறுமையில் இறைவனின் திருப்தியையும், சுவர்க்கத்தையும் பெற்றுத்தரும். பாங்கிற்குப் பிறகு ஓதும் துஆக்களுக்கு எத்தகைய சிறப்புகளை அல்லாஹ் வழங்குகிறான் என்று பார்ப்போம்.
பாங்கிற்குப் பதிலும் படைத்தவனின் சுவர்க்கமும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு)
"அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன்'
என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்).
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் (630)
ஸலவாத்தும் அற்புத ஷஃபாஅத்தும்
பாங்கிற்குப் பிறகு நாம் நபி அவர்கள் மீது ஸலவாத் ஓதினால் அல்லாஹ் நமக்குப் பத்து முறை அருள்புரிகின்றான். ஒருவன் தான் செய்த பாவத்தினால் அவன் நரகத்திற்குச் சென்றாலும் நபியவர்களின் ஷஃபாஅத்தின் மூலம் சுவர்க்கம் செல்கின்ற பாக்கியத்தை அவனுக்கு இந்த பாங்கு துஆவினால் கிடைக்கச் செய்கின்றான்.
நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது "ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில்,என்மீது  யார் ஒருமுறை "ஸலவாத்' சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா'என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), 
நூல்: முஸ்லிம் (628)
பாங்கினால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு
இதுவரை தொழுகைக்கு பாங்கு கூறுவதால் கிடைக்கும் பல பாக்கியங்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதனை மீண்டும் ஒருமுறை தொகுப்பாகக் காண்போம்.
1.   பங்கு சொல்வதற்காக அல்லாஹ் வழங்கும் நன்மைகளை அறிந்தால் மக்கள் அதற்காகப் போட்டியிடுவார்கள். அப்படிப்பட்ட பெரும் நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.
2.   பாங்கு சொல்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
3.   எவ்விடத்தில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுபவனை அல்லாஹ் நேசிக்கிறான். அவனுடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வழங்குகிறான்.
4.   பாங்கு சொல்பவருக்காக, அவருடைய சப்தம் எட்டும் தொலைவில் உள்ள மனிதர்கள், ஜின்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள்.
5.   பாங்கு சொல்பவர்கள் மறுமையில் நீண்ட கழுத்து உடையவர்களாக அழகிய தோற்றம் பெறுவார்கள்.
6.   பாங்கு சொல்பவர் பாங்கு கூறும் போது அல்லாஹ்வின் எதிரியான ஷைத்தானை விரட்டியடிக்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
7.   உள்ளத்தில் உறுதிகொண்டவராக பாங்கிற்குப் பதில் கூறுபவருக்கு  அல்லாஹ் சுவர்க்கத்தை கூலியாகக் கொடுக்கின்றான்
8.   பாங்கு கூறிய பிறகு ஓதும் துஆவினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
9.   பாங்கு கூறிய பிறகு நபியவர்கள் மீது ஸலவாத் ஓதுவதினால் நமக்கு அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான்.
10.  ஒருவன் தான் செய்த பாவத்தினால் நரகத்திற்குச் சென்றுவிட்டாலும் பாங்கிற்குப் பதில் கூறியிருந்தால் நபியவர்களின் ஷஃபாஅத்தின் மூலம் அல்லாஹ் சொர்க்கம் செல்லும் பாக்கியத்தை வழங்குகிறான்.
தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
நன்றி -   பிப்ரவரி  ஏகத்துவம் 2013 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger