சகோதரி ரிஸானாவின் மரணம்; பொறுப்புக் கூறுவோர் யார்?


சகோதரி ரிஸானாவின் மரணம்; பொறுப்புக் கூறுவோர் யார்?
அபூஆஸியா,காத்தான்குடி.

நேற்று முன்தினம் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நபீக்கின் மரணத்தை அடுத்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அது தொடர்பான சில அவதானங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணுகின்றோம்.

அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக சவூதி அரேபியா இஸ்லாமிய சரீஆ சட்டத்தை அமுலில் வைத்திருக்கும் ஒரு நாடாகும். இஸ்லாமிய சரீஆ சட்டமென்பது ஒரு பூரணப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டம்.

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு இஸ்லாமிய குற்றவியல் சட்ட முறைகள் அமுல் படுத்தப்படாமல் இருப்பதை ஒரு பிரதான காரணமாக குறிப்பிட முடியும்.

இன்று நமது இலங்கை உட்பட அதிகமான நாடுகளில் நடை முறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள், அந்தந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டவையாகும்.

அதன் காரணமாகவே இன்று வரைக்கும் மேற்குறிப்பிட்ட பாரிய குற்றச் செயல்கள் அனைத்தும் மிகவும் பகிரங்கமாகவே நடந்தேறி வருகின்றன.

இதிலிருந்து அக்குற்றவியல் சட்டங்களால் குற்றச் செயல்கள் குறைவதை விடுத்து அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன என்பதை உணர முடியும்.

ஆனால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பொறுத்தமட்டில், அது இந்த உலகையும் உலகில் வாழும் சகல் உயிரினங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனான அல்லாஹ் தஆலாவினால்இயற்றப்பட்ட சட்டமுறையாகும். அதனால் அது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அது கொடூரமாகத் தென்பட்டாலும், இன்று உலகளாவிய ரீதியில் நடந்தேறிவரும் குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு அது ஒன்றே சிறந்த வழியாகும். அதனையே தற்போதைய உலக நடப்புக்களும் நிரூபிக்கின்றன.

இன்று இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்ற சில போலி மனிதநேய அமைப்புக்கள், உலகிலுள்ள, குறைந்த பட்சம் ஒரு நாட்டிலுள்ள குற்றச் செயல்களையாவது ஒழிப்பதற்கு முடியாவிட்டாலும் குறைப்பதற்காகவாவது மாற்றுவழிகளை கூறுகின்றதா என்றால் அது கேள்விக் குறியாகவே உள்ளது.

எனவே, இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் கொடூரமானது என்று ஒப்பாரிவைப்பதில் உண்மைகள் ஏதுமில்லை.

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
"நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்." (அல்-குர்ஆன் 02:179)

இஸ்லாத்தில் கடுமையான தண்டனைகள் ஏன்?

எந்தவொரு குற்றத்தையும் இஸ்லாம் குற்றமிழைக்கப்பட்டவர்களின் இடத்தில் இருந்தே நோக்குகின்றது. பொதுவாக எந்தவொரு தண்டனை முறையை நாம் எடுத்து நோக்கினாலும் அதன் நோக்கங்கள் மூன்று.

01) குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையானது அக்குற்றத்தை மறுபடியும் செய்வதிலிருந்து அக்குற்றவாளியை மீட்க வேண்டும்.

02) ஒரு குற்றவாளிக்கு வழங்கும் தண்டனையிலிருந்து அக்குற்றத்தை செய்ய எத்தனிக்கும் ஏனையவர்கள் அதனை கைவிட வேண்டும்.

03) குற்றமிழைக்கப்பட்ட மனிதன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக திருப்தியடைய வேண்டும்.

இம்மூன்று நோக்கங்களையும் மனதில் இருத்திக் கொண்டு இஸ்லாம் அல்லாத தண்டனை முறைகளை பார்த்தோமானால்...

அண்மையில் இந்தியாவில் ஒரு மருத்துவ மாணவி மீது அறுவர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுக்கற்பழிப்புச் சம்பவம்.

இந்திய நாட்டில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படும்போது, மனித நேயத்தையும் மனித உரிமைகளையும் பற்றி நெடுநாட்களாகப் பேசிவந்த அமைப்புக்கள் அனைத்தும் தற்போது மௌனம் சாதிக்கின்றன.

அதற்குக் கரணம், இவ்வாறான பாரிய குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒரே வழி இஸ்லாம் காட்டிய தண்டனை முறைகளே அன்றி வேறு எந்தவொரு முறையிலும் தீர்வை எட்ட முடியாது என்பதேயாகும்.

எனவே, விரும்பியோ விரும்பாமலோ இன்று உலகம் முழுவது இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.

இஸ்லாமியக் குற்றவியல் தண்டனை முறைகள் முழுக்க முழுக்க மனிதனுக்கு நன்மை பயப்பதற்கே என்பதை நிரூபிப்பதற்கு நாம் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம் அந்தளவிற்கு உலகம் முழுவது இன்று அது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது.

ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உற்று நோக்குமிடத்தில் இங்கே பலவாறான கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் தொக்கி நிற்கின்றன.

தவறு யார் மீது?

-'வீடு கட்டித் தந்தால் மட்டுமே உங்களின் மகளை எனது மகன் திருமணம் முடிக்க நாம் சம்மதிப்போம்' என்று தங்களின் ஆண்(?)மக்களை ஏலம் விடும் பெற்றோர்கள் மீது,

-குடும்பத்தில் புரையோடிப்போயுள்ள வறுமையை போக்குவதற்காக, வெறும் பதினேழு வயது மட்டுமே நிரம்பிய ஒரு கன்னிப்பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பி, பணம் சம்பாதிக்க நினைத்த அவ்விளம் பெண்ணின் குடும்பத்தின் மீது,

-போதியளவு அனுபவமற்ற ஒரு இளம்பெண்ணை கடவுச் சீட்டில் வயது மோசடி செய்து வெளிநாடொன்றிற்கு அனுப்பிவைத்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மீது,

-முன் அனுபவம் இல்லாத ஒரு பெண்ணிடம் தங்களின் நான்கு மாதக் குழந்தைக்கு உணவூட்டும் பொறுப்பை ஒப்படைத்த அரபு நாட்டுப் பெற்றோர்கள் மீது,

-வேலைக்கு அமர்த்தப்படும் பணியாட்கள் மீது காட்டு மிராண்டித்தனத்தை பிரயோகிக்கும் அரபு நாட்டு எஜமானர்கள் மீது,
-அரபிகளுக்கும் அஜமிகளுக்கும் (அரபி அல்லாதவர்கள்) இடையில் பாரபட்சம் பார்க்கும் அரபு நாட்டில் வெளிநாட்டவர்களிடம் வேலை கொள்ளும் எஜமானர்கள் மீது,

-சகோதரி ரிஸானாவினால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் குறித்த குழந்தையின் பெற்றோர்கள் மீது,

-சவூதி அரேபியாவிற்கு அடிக்கடி சென்று அங்கே நாட்கணக்கில் தங்கியிருந்தும் மரணித்த குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து இக்கொலை வழக்குத் தொடர்பில் ரிஸானாவின் நிலைமை பற்றி எடுத்துக் கூற முற்படாத எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்(?) மீது,

இவ்வாறு அப்பட்டியல் நீளுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் மரணித்த நமது சகோதரியையும் இன்றைய நாட்களில் அவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த அவரின் குடும்பத்தின் நிலையையும் நினைக்கும் போது இதயங்கள் கனக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ இச்சகோதரியின் மரணத்திற்கு நமது முஸ்லிம் சமூகமும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.

தலை விரித்தாடும் சீதனம்

அல்லாஹ் நமக்களித்த அழகிய பேறுகளை மறந்து அந்நியர்களுடன் போட்டியிட்டு வெற்றிகொள்ளும் அளவிற்கு இன்று நமது சமூகத்தில் இந்த சீதனம் என்னும் கொடிய நோய் தொற்றியுள்ளது. பெண் வீட்டார் பிச்சை எடுத்தேனும் சரி வீடு கட்டித் தந்தால் மாத்திரமே பெண்ணுடன் திருமணம், இல்லையேல் அப்பெண் காலம் முழுக்க முதிர் கன்னியாகவே இருக்கவேண்டும் என்ற சித்தாந்தம் எதிர்காலத்தில் இவ்வாறான ஆயிரக் கணக்கான ரிஸானாக்களின் உயிர்களைப் பறிக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சமூகத்தில் புரையோடியுள்ள வறுமை நிலை

வாழ்வியல் வழிகாட்டியான புனித இஸ்லாம் வறுமையை ஒழிப்பதற்காக மிகவும் சிறந்த ஓர் ஊடகமாக ஸகாத் மற்றும் ஸதகா ஆகியவற்றை ஊக்குவித்துள்ளது. அனால் அல்லாஹ் அருளிய செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்ற குறுகிய மனப்பான்மையுடன் வாழும் தனவந்தர்கள் இவ்வாறான ஏழைக் குடும்பங்கள் இன்று வடிக்கும் கண்ணீருக்கு நாளை மறுமையில் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.

மோசடிகளை மேற்கொள்ளும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள்

அரபிகள் கொடுக்கும் தரகுகளுக்காக நம் சமூகத்தின் ஏழ்மை நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றிவிட்ட இவ்வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அங்கே நமது சகோதரிகள் எதிர்நோக்கும் சவால்களை ஒருபோதும் கண்டு கொள்வதே கிடையாது. வேலை வாய்ப்பிற்காக செல்கின்ற பெண் அவ்வேலைக்குத் தகுதியானவள்தானா என்பதைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் யார் எக்கேடு கேட்டால் என்ன, தனக்குப் பணம் கிடைத்தால் போதும் என்ற கேவலமான குறுகிய எண்ணமே இன்று நமது உடன்பிறப்பின் தலை துண்டிக்கப்பட்டதற்கான பிரதான காரணமாகும்.

மரத்துப்போன முஸ்லிம் தலைமைகள்

இன்று சகோதரி ரிஸானாவின் மரணச் செய்தியைக் கேட்டு அனுதாப மடல்களை வரைவதற்கு நேரம் கடத்துகின்ற அரசியல் தலைமைகள், ரிஸானா சிறையில் அடைக்கபட்டிருந்த, ரிசானாவின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த கடந்த 7 வருட காலத்தில் சவூதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். பல வாரங்கள் அங்கே தங்கியிருந்தவர்களும் உண்டு.

ஆனால், அதில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் மரணித்த குழந்தையின் பெற்றோர்களை முறையாகச் சந்தித்து ரிஸானாவின் நிலை பற்றி எடுத்துக்கூற முன்வரவில்லை.

சகோதரி ரிஸானா விடுதலையாவதற்காக இருந்த ஒரேயொரு துருப்பு மரணித்த குழந்தையின் பெற்றோர்கள் கொடுக்கும் மன்னிப்பிலேயே தங்கியிருந்தது.

மன்னிப்பே மிகச் சிறந்த தீர்வு

الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
"(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்." (அல்-குர்ஆன் 03:134)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى ۖ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنثَىٰ بِالْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ

"ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும். ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு." (அல்-குர்ஆன் 02:178)

மேற்குறித்த திருமறை வசனங்களில் இருந்து இஸ்லாமியக் குற்றவியல் சட்ட முறையினையும் அதன் தீர்வுகளையும் அறிந்து கொள்ள முடியும். கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதித்த அல்லாஹ்வே மன்னிப்பதே அதை விட சிறந்தது எனவும் கூறுகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரழி) அவர்களைக் கொன்று ஈரலைக் கடித்துத் துப்பிய ஹிந்தா என்னும் பெண்ணைக் கூட நபியவர்கள் மக்கா வெற்றியின் போது பெருமனது கொண்டு மன்னித்தார்கள்.

இருப்பினும் அந்த தூய நபி பிறந்து அவர்கள் வாழ்ந்து மறைந்த மண்ணின் சொந்தக் காரர்களான அரபிக்களிடம் மிகச்சிறந்த நல்ல பண்புகள் பல காணப்பட்டாலும், குறித்த விடயத்தில் மரணித்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்காதது அனேகரின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்திருப்பது உண்மையே.

மன்னிப்பென்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு பண்பாகும். இறைவனே தனக்கு இணை வைப்பதைத் தவிரவுள்ள ஏனைய அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறான்.

இன்று உலகில் வேண்டுமென்றே நடக்கின்ற உயிர்க் கொலைகள், கற்பழிப்புக்கள், திருட்டுக்கள் என்பன நிச்சயமாக இஸ்லாமிய குற்றவியல் சட்ட அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டியவைகளே.

ஆனால், சகோதரி ரிஸானா மீது சாட்டப்பட்ட குற்றமானது, மேற்குறித்த வகைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த பிழைப்புக்கு வழி தேடிவந்த எந்தவொரு இளம்பெண்ணுக்கும் நான்கு மாதங்கள் மாத்திரமே நிறைந்த ஒரு பச்சிளம் குழந்தையை கொலை செய்வதற்கு மனம் இடமளிக்காது.

இறுதியாக!

இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் அறிந்தும் அறியாத அந்நிய சக்திகள் சில, இவ்விடயத்தின் மூலம் இஸ்லாத்தின் மீது சேறு பூசுவதற்கு முற்படுகின்ற இவ்வேளையில், முஸ்லிம்களாகிய நாம் மிகத் தெளிவுடன் நடந்துகொள்ள வேண்டியவர்களாகவுள்ளோம். இஸ்லாமிய சரீஆ சட்டமானது ஒரு போதும் மனிதர்களுக்கு அநீதியிளைக்காது.

அனால் சகோதரி ரிஸானாவின் விடயத்தில் மரணித்த குழந்தையின் பெற்றோர்களோ, அல்லது இந்த வழக்கை முறையாக விசாரிப்பதில் சவூதி அரேபிய காவல் துறையோ தவறுகள் இழைத்திருந்தால் அது மறுமையில் அல்லாஹ்வுக்கும் அவர்களுக்குமிடையில் உள்ள விவகாரமாகும்.

அத்தோடு நாம் இது விடயத்தில் சரீஆ சட்டத்தையோ, குறித்த குழந்தையின் பெற்றோர்களையோ குறை கூறுவது இறைவனின் வார்த்தைகளையே குறை கூறுவதாக அமைய வாய்ப்புள்ளது.

எனவே, இது குறித்த சர்ச்சைகளில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் தெளிவுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவேண்டிய மிகவும் அவசியமானதாகும்
நன்றி - முக நூலில் இருந்து 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger