சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷென்சுன் நகரில் உள்ள திடீர் பணக்காரர்களிடம் ஒரு புதிய பழக்கம் தென்பட்டு வருகின்றது.
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் என்றும், அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இது நல்ல பலன்களை அளிக்கும் என்றும் இவர்கள் எண்ணுகின்றனர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு சின்சின்யூ என்ற தரகு நிறுவனம் பணத்திற்காக பல இளம் தாய்மார்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றது.
ஏழ்மை நிலையில் உள்ள இளம் தாய்மார்கள் பணத்தேவைக்காக தங்களின் தாய்ப்பாலை சில நாட்களில் இருந்து சில வாரங்களுக்கு 2000 முதல் 4 000 டொலர் வரை விற்று வருகின்றனர்.
தங்களின் வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது அவர்கள் கருவி மூலம் எடுத்துத்தரும் பாலையோ அருந்தலாம் என்று இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இது நெறிமுறையற்ற செயல் என்று தங்களின் கோபத்தை இணையதளத்தில் வெளிப்படுத்தியுள்ள மக்கள், பணக்காரர்கள் பெண்களிடம் காட்டும் அலட்சியமும், அகம்பாவமும் இதில் வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பெண்களை விற்பனைப் பொருளாக கருதும் மனப்பான்மையும், பணக்காரர்களின் தரக்குறைவான ஒழுக்கப்பண்புகளும் சீனாவின் பிரச்சினைகளாக உள்ளதை இந்த செய்கை வெளிப்படுத்துகின்றது என்று ஊடகங்களில் அறிவிப்பாளராக இருக்கும் கவோ பவோயின் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் வெளியிட்டுள்ள கருத்துகளால், ஷென்சுன் நகர நிர்வாகம் இந்த நிறுவனத்தின் விற்பனை உரிமத்தைத் தடை செய்துள்ளது. ஆயினும், இதுபோல் பதிவு பெறாத எத்தனையோ நிறுவனங்கள் வெளியில் தெரியாமல் இதனைத் தொடரக்கூடும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
Post a Comment