ரமளானை வரவேற்போம்!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)


மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.

எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்.

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். 

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.
தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை -  அது ஆணாயினும், பெண்ணாயினும் -  ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் 

மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. 

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்! 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
  
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)

இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான். 

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம்  என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.

அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான்.எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.

ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான். 

மேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ அந்த  ஏழை எளியோரைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ்வுக்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவும் இறையச்சத்தின் ஓர் சாராம்சமாகும். இதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுவதை பேணிக் கொள்ள வேண்டாமா?

இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம்.அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

 ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 2119

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 1894

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1904

படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி  அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று!

மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1901

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நோன்பின் மூலமாக இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

நன்றி- துபாய் ததஜ
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger