மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம்!

சென்னை: மாமல்லபுரத்தில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் ஒன்றினை இயற்கைச் சூழலில் உள்ளது போல் அமைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மீன்வளத்துறையின் தொழில்நுட்ப உதவியுடன், பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்புடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக உலகத் தரம் வாய்ந்த கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தை 250 கோடி ரூபாய் செலவில் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடல்வாழ் உயிரினக் காட்சியகம், கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடல் சூழலில் உள்ளது போன்று உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டு ஒரு கடல் போல் காட்சி அளிக்கும். இக்கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில், பெரிய நீர்வாழ் பாலூட்டிகளான டால்பின், கடற்பசு மற்றும் சுறா, கடல் அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ் மீன்கள், கடற்புற்கள், கடற்பாசிகள், பவளப்பாறைகள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட வாழிடத்தில் காட்சியளிக்கும்.
பார்வையாளர்கள் அக்ரிலிக் கண்ணாடி சுரங்கங்களின் மேற்கூரையில் நீந்தும் சுறாக்களை காணும் பொழுது கடற்சூழலை உணரும் வண்ணம் இக்காட்சியகம் அமைக்கப்படும். இந்தக் காட்சியகம் வண்ணமீன் தொட்டிகள் கொண்ட காட்சியரங்குகள், உணவகங்களுடன் கூடிய ஓய்வரங்கங்கள், திறந்தவெளி வண்ணமீன் தொட்டிகள், செயற்கை ஏரிகள், இசை நீரூற்றுகள், திறந்தவெளி அரங்குகள், கல்வி அரங்குகள், கருப்பொருள் அரங்குகள், பசுமை வெளிகள், ஆராய்ச்சிக் கூடம் மற்றும் பல வசதிகளைக் கொண்டிருக்கும்.
இந்தக் காட்சியகம் சென்னைக்கு அருகில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் அழகான கடற்கரையினைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். இக்காட்சியகம், கடல் சூழலியலையும் அதன் வளங்களையும் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பொது மக்களையும், ஆராய்ச்சியாளர்களையும் மற்றும் மாணாக்கரையும் குறிப்பாக சிறுவர், சிறுமியர்களையும் வெகுவாக கவரும்.
இந்த கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தினை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை
தயாரிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நிறுவனமாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் செயல்படும். விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger