கோலாலம்பூர் - எலும்பு மஜ்ஜைகளை மாற்றுவதன் (Bone Marrow Transplant) மூலம் எச்.ஐ.வி. நோயினைக் குணப்படுத்த முடியும் என பாஸ்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் குருதிப் புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுடைய புற்றுநோயினைக் குணப்படுத்துவதற்காக எலும்பு மஜ்ஜைகளை மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த மாற்றத்திற்குப் பின்பு அவர்களுடைய உடலில் எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் மறைந்தன. புதிய எலும்பு மஜ்ஜைகளில் உள்ள செல்கள் இவர்களது பழைய செல்களை மாற்றி விட்டதால், நோய்க் கிருமிகள் மறைந்துள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தற்போது நோயாளிகளில் ஒருவர் நான்கு மாதங்களாகவும், மற்றொருவர் ஏழு மாதங்களாகவும் மருந்துச் சாப்பிடாமல் இருந்தும் அவர்களுக்கு எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலினை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் சொசைட்டி மாநாட்டில் மருத்துவர் டிமோதி ஹென்ரிச் தெரிவித்துள்ளார்.
எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்கான செலவு மிக அதிகமாக இருந்தாலும், எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிப்பது பற்றி ஆய்வுகள் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த நோயினால் ஏறத்தாழ மூன்றரைக் கோடி மக்கள் உலகில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment