சக நண்பன் ஒருவன் தீக்காயங்கள் அடைய காரணமாக இருந்தமைக்காக பன்னிரண்டு வயதேயான சிறுவனுக்கு சவூதி அரேபியாவின் துரைஃப் நகர நீதிமன்றம் சவூதி ரியால்கள் 9,00,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஃபாயிஸ் முஹம்மது அவ்வாத் என்னும் பெயருடைய அச்சிறுவன் தன் சக நண்பனுடன் பார்பிக்யூ எனப்படும் சுடுகோழி உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, நண்பனின் வேண்டுகோளின் பேரிலேயே மண்ணெண்ணெய்க் குடுவையை எடுத்து வந்துள்ளான். சமைத்துக் கொண்டிருந்த கரி அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்ற முற்பட்டபோது, அது காற்றின் வேகத்தாலோ என்னவோ நண்பனின் ஆடை மீதே முழுவதும் கொட்டியுள்ளது. உடனடியாக அந்நண்பன் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
இச்சம்பவம் குறித்து சிறுவன் அவ்வாத் கூறுகையில் "இப்படி நண்பன் தீக்காயம் அடைவான் என்று தெரிந்திருந்தால், சுடுகோழி உணவு தயாரிக்கவே சென்றிருக்க மாட்டேன். இப்போது என் நண்பன் நலமாகவே இருக்கிறான். அவனுடன் எனக்கு இன்னமும் நல்ல நட்பும் உள்ளது" .
தந்தையை மணவிலக்கு செய்து வாழும் தாயுடன் வசித்து வரும் சிறுவன் அவ்வாத் ஆறுமுறை நீதிமன்ற விசாரணைக்காகச் சென்று வந்துள்ளான். இச்சம்பவம் குறித்து தன் தந்தையிடம் தெரிவிக்கவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் அவர் அறியப்பெற்றார் என்றும், சிறுவர்கள் நீதிமன்றம செல்ல நேரிட்டால், தந்தை போன்ற பிரதான பொறுப்பாளர்கள் உடனிருக்க வேண்டும் என்று சட்ட விதி இருக்கும் போது, தன் மகன் தனியாகவே ஆறு நீதிமன்ற அமர்வுகளுக்குச் சென்று வந்துள்ளதை நீதிமன்றம் எவ்வாறு அனுமதித்தது என்று அவர் கேள்வி எழுப்பியதாகவும், தனக்காகவே தந்தை இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் சிறுவன் அவ்வாத் தெரிவித்துள்ளான்.
Post a Comment