வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை 'இயற்கையின் சீற்றம்' என்று அரசாங்கம் தனக்கு வசதியாக வர்ணிப்பதாக நாளிதழ்கள் பலவும் விமர்சித்துள்ளன.
விளைவுகளை சிந்திக்காத, தூரநோக்கற்ற மனித நடவடிக்கைகள் தான் வெள்ள அழிவுக்கு காரணம் என்று ஹிந்து நாளிதழ் கூறுகிறது.
பாரியளவிலான நீர்மின்சாரத் திட்டங்களும் ஆறு குளங்கள் சட்டவிரோதமாக குடிமனைகளாக மாறுகின்றமையும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்க்கின்றமையுமே மலைப் பிரதேச மாநிலங்களில் இந்த வெள்ள அழிவு ஏற்படக்காரணம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் பல அறுகள் வற்றிவிட்டதாகவும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு தரவுகளையும் முன்வைத்து ஊடகங்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
உயிர்ப் பலி 200-ஐ தாண்டிவிட்டது
இதற்கிடையே, இந்த வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 200-ஐ தாண்டி விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பெருமளவான வீடுகளும் சாலைகளும் சேதமடைய, சுமார் ஐம்பதாயிரம் பேர் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Post a Comment