போதுமென்ற மனம்

நம்மிடத்தில் செல்வங்கள் இருக்கும் போது அதை வைத்து நமது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் பிறரைப் பார்த்து அவனை விட நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக பிறரிடம் யாசகம் கேட்கிறோம். எனவே யாரிடமும் கையேந்தாமல் இருக்கின்ற செல்வத்தை வைத்து நமது உள்ளம் திருப்தி கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமென்ற மனம் இருக்க வேண்டும்.

 "யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் யார் பொறுப்பு ஏற்கிறார்களோ அவருக்கு சுவனத்தை நான் பொறுப்பு ஏற்கிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸவ்பான் (ரலி) அவர்கள், "நான் (அவ்வாறு இருப்பேன்)' என்று கூறினார்கள். அவர் யாரிடமும் எதையும் கேட்காதவராக ஆகிவிட்டார். 

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அபூதாவூத் 1400 

நாம் பிறரிடத்தில் யாசகம் கேட்காமல் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். 

ஏழைக்கு தர்மம் செய்ய வேண்டும் 

பிறருக்குத் தருவதாகயிருந்தால் ஏழைக்குக் தர வேண்டும். நமது அந்தஸ்திலுள்ள பணக்காரனுக்குக் தரக் கூடாது. 

வாழ்க்கையில் போதிய செல்வம் இல்லாமலிருந்தாலும் யாரிடமும் கேட்காமல் இருப்பதை வைத்து போதுமாக்கிக் கொள்பவரே ஏழையாவார். அப்படிக் கேட்டாலும் பிறரிடத்தில் கெஞ்சிக் குழைந்து கேட்காமல் தனது சுய மரியாதையைப் பேணுபவன் தான் ஏழை. இப்படிப்பட்டவர்களுக்குத் தான் நமது செல்வங்களை தர்மம் செய்ய வேண்டும்.  

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக, தன் வாழ்க்கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந்தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்றவனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1476 

கேட்கக் கூடாது; தந்தால் வாங்கலாம் 

நாம் ஏழையாக இருந்தாலும் பிறரிடத்தில் கேட்கக் கூடாது. நமது சுயமரியாதையை நாம் பேண வேண்டும். அவர்களே நமது கஷ்டங்களைப் பார்த்து நமக்குத் தந்தால் அதை வாங்கலாம். அதை மறுக்கக் கூடாது.      

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள். 

நூல்: புகாரி 1473 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வலிந்து) கேட்காமலும் உள்ளம் ஆசைப்படாமலும் தனது சகோதரனிடமிருந்து ஏதாவது பொருள் ஒருவருக்கு வந்தால் அதை அவர் ஏற்கட்டும். அதை மறுக்க வேண்டாம். அது அல்லாஹ்விடமிருந்து வந்த உணவாகும். 

அறிவிப்பவர்:  காலித் பின் அதீ அல்ஜுஹ்னி (ரலி) நூல்: அஹ்மத் 17257 

பிறருக்காகப் பரிந்துரைத்தல் 

நமக்குப் போதுமான செல்வம் இருக்கும் போது நமக்கு யாராவது அன்பளிப்பு வழங்கினால், அது நமக்குத் தேவையில்லையென்றால் அதைப் பிறருக்குத் தருமாறு பரிந்துரைக்கலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடமும் கேட்காமலும் உள்ளம் ஆசை வைக்காமலும் இந்த உணவிலிருந்து ஏதாவது ஒன்று ஒருவருக்கு வந்தால் அவர் அதைத் தனது உணவில் சேர்த்து விசாலமாக்கிக் கொள்ளட்டும். அவர் தேவையில்லாதவராக இருந்தால் அவரை விடத் தேவை உடைய ஒருவருக்குக் கொடுக்கட்டும்     

அறிவிப்பவர்: ஆயித் பின் அம்ரு (ரலி) நூல்: அஹ்மத் 19726 

போதுமென்ற மனமுள்ளவன் பணக்காரன் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1898 

போதுமென்ற மனமுள்ளவன் வெற்றியாளன் 

அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்திலிருந்து போதுமாக்கிக் கொள்ள வேண்டும். யாரிடத்தில் போதுமென்ற மனம் இருக்கிறதோ அவர் தான் வெற்றியாளர் ஆவார். 

அவன் மாடி வீடு கட்டுகிறான்; நாமும் மாடி வீடு கட்ட வேண்டும். அவன் பைக் வாங்குகிறான்; நாமும் பைக் வாங்க வேண்டும். அவள் நகை வாங்குகிறாள்; நாமும் நகை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 

வீடு கட்டுவதற்கும், பைக் வாங்குவதற்கும், நகை வாங்குவதற்கும் நாம் கடன் வாங்குகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கியது போதும் என்ற மனம் நம்மிடத்தில் இருந்தால் யாரிடத்திலும் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்தலாம். 

நாம் கடன் வாங்கி விட்டு அதை திருப்பித் தருவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். நாம் மரணித்து விட்டால் நம்முடைய குடும்பத்தாரிடம் அந்தக் கடனைக் கேட்கிறார்கள். அதைச் செலுத்துவதற்கு அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தைப் போதுமென்ற மனதுடன் நாம் பொருத்திக் கொண்டால் நாம் தான் வெற்றியாளர்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1903   

 உனக்கும் கீழே உள்ளவர் கோடி 

நாம் ஏழையாக இருக்கும் போது நமக்குக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும். நாம் ஏழை என்றால் நமக்குக் கீழ் உள்ள பரம ஏழையைப் பார்க்க வேண்டும். நாம் நடுத்தர பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள ஏழையை பார்க்க வேண்டும். நாம் பெரும் பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள நடுத்தர பணக்காரனைப் பார்க்க வேண்டும். இப்படி இருந்தால் நமக்குப் போதுமென்ற மனம் வந்துவிடும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5671 

ஒரு மனிதர் நம்மை விட செல்வந்தராகவும், அழகானவராகவும் இருந்தால், அவரைப் பார்த்து நமது மனதை அலைய விடாமல், செல்வத்திலும் அழகிலும் நம்மை விடக் குறைந்தவரைப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் நமது மனதைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம். நமது உள்ளத்தில் போராசையும் வராது. இந்த வழிமுறைகளை நாம் அனைவருமே கடைபிடிக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல்: புகாரி 6490 

உலகத்தில் அன்னியனைப் போல் வாழ வேண்டும் 

இவ்வுலகில் நாம் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; நம்மிடத்தில் தோட்டம், துறவு, வீடு, பங்களா, கார் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். இப்படி ஆசைப்படும் போது இவ்வுலகில் தடுக்கப்பட்ட அனைத்து செயல்களையும் செய்வதற்குத் தயங்க மாட்டோம். இவ்வுலகில் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இருக்கிற செல்வத்தை வைத்துப் போதுமாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது இவ்வுலகில் வழிப்போக்கனைப் போன்று வாழ வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி பெற்று விடலாம். 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்கüல் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாüல் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். 

நூல்: புகாரி 6416 

செல்வத்திற்கு அடிமையானவன் துர்பாக்கியசாலி 

இந்த உலக ஆசாபாசங்களுக்காகவும் தனது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் நாம் இந்த உலகத்தில் செல்வங்களைச் சேமிப்பதற்கு ஆசைப்படுகிறோம். ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் செல்வத்தின் மீது உள்ள மோகத்தால் நாம் நஷ்டவாளியாக ஆகிவிடுகிறோம். அல்லாஹ் நமக்குத் தாராளமாக செல்வத்தை வழங்கும் போது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை போற்றிப் புகழ்கிறோம்; வணக்க வழிபாடுகளையும் சரியான முறையில் செய்கிறோம். 

ஆனால் அல்லாஹ் செல்வத்தைக் குறைவாகத் தந்து நம்மை சோதிக்கும் போது அல்லாஹ்வை நாம் திட்டுகிறோம். அல்லது வணக்க வழிபாடுகளில் குறை வைக்கிறோம். வணக்க வழிபாடுகளில் குறை வைக்கும் போது நாம் நஷ்டவாளியாக மாறி விடுகிறோம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி  ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான்.  அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.   

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6435 

செல்வத்திற்கு அடிமையானால் மார்க்கம் போய்விடும் 

செல்வத்தின் மீதுள்ள மோகத்தால் மார்க்கத்திற்குக் கட்டுப்படாமல், மார்க்கம் அனுமதிக்காத செயல்களில் ஈடுபடுகிறோம். ஒருவர் செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி பதவியின் மீது ஆசை கொள்கிறான். 

தற்காலத்திலுள்ள அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் அரசியலுக்கு வருவதில்லை. நாம் முன்னேற வேண்டும்; பணக்காரனாகவும் மதிப்புமிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள். 

இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் தன்னால் முடிந்த அளவு கடைபிடிப்பார்கள். ஆனால் இந்தச் சாக்கடையில் விழுந்த பிறகு இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் மறந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் மார்க்கமும் இவர்களிடத்திலிருந்து அழிந்து விடும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதானது, ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்குவதை விட மோசமானது கிடையாது. அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதி  2298 

நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger