இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை

பொறுமையின் சிகரம் நபிகளார்
கோபத்தின் போது பொறுமையைக் கடைபிடித்தல்
ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய முதல் வேலை மனிதனுக்கு கோபத்தைச் சீண்டி விடுவதுதான். தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கடும் சொற்களால் காயப்படுத்துவார். சிலவேளை அதையும் கடந்து சட்டைக் கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். அதே போல் கோபத்தினால் பல விபரீதமான காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான், இவருக்கு சமுதாயம் வீரன் என்று பட்டம் சூட்டி விடும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவன் வீரனல்ல. வீரன் என்பவன் யாரென்றால் தனக்கு கோபம் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கக் கூடியவன் தான் வீரன் என்று இஸ்லாம் கூறுகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்'' என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 5086

கோபம் மனிதனுக்குத் தேவைதான். தேவை இல்லை என்று கூறிட முடியாது ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும்.

பழி தீர்ப்பதை விட பொறுமையே சிறந்தது 
ஒருவரை பலிழிக்குப் பழிலி வாங்குவதை விட பொறுமையை கடைப்பிடிப்பதே சிறந்து என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்! அல்குர்ஆன் 16:126-127

லுக்மான் தனது மகனுக்கு பொறுமையை போதித்தார்
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான லுக்மான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர் தன் மகனிடம் இறைவனுக்கு இணைகற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், பெற்றோருக்கு உதவ வேண்டும், பிறரிடத்தில் அழகிய முறையில் நடக்க வேண்டும், நல்லவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும், தர்மம் வழங்க வேண்டும், நன்மையை ஏவி, தீமையைத் தடு, சோதனை வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும், பிறரிடத்தில் கண்ணியமாக நடக்க வேண்டும், கர்வமாக நடக்கக் கூடாது என்று மிக அழகான முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்துக் கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர்கள் தன் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும். அல்குர்ஆன் 31:17

யூசுப் (அலை) அவர்களின் பொறுமை 
"எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை'' என்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். "உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்'' என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:17-18

அய்யூப் (அலை) அவர்களின் பொறுமை
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இவர் அமைந்துள்ளார்.

(அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை. அல்குர்ஆன் 21:83-84

நபி (ஸல்) அவர்களின் பொறுமை 
பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான். அல்குர்ஆன் 11:115

தன் மகனாரின் மரணத்தை சந்தித்த நபியவர்கள் வரம்பு மீறியதில்லை. மடத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை. மாறாக பொறுமையாக இருந்துள்ளார்கள்.

மகன் இறந்த போது
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். 

அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் 

"அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவ்ஃபின் புதல்வரே!'' என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு "கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்'' என்றார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 1303

கொலை செய்வதாக மிரட்டியவரிடம்
நபிகளாரை வாளால் மிரட்டி பின்னர் வாள் தன்னிடம் வந்த போதும் அந்த நபரை நபிகளார் எதுவும் சொல்லாமலும் கண்டிக்காமலும் பொறுமையை கடைபிடித்தார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("தாத்துர் ரிகாஉ' எனும்) போருக்காக "நஜ்த்' நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க் கொண்டிருந்தனர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிருந்து) உருவப்பட்ட வாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?'' என்று என்னிடம் கேட்டார்.

நான், "அல்லாஹ்' என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?'' என்று கேட்டார். நான் "அல்லாஹ்' என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை (கண்டிக்கவில்லை).
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி), நூல்: முஸ்-லிம் 4585

கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிட்டு அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "ஹுனைன்' போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; "சமுரா' என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, "என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி), நூல் : புகாரி 2821

நபிகளாரின் நீதத்தை சந்தேகித்த போது
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். 

அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்'' என்று (அதிருப்தியுடன்) கூறினார்.

நான், "நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் சொல்வேன்'' என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்களிடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி-), நூல் : புகாரி 6100

வரம்புமீறிய பெண்ணிடம் பொறுமை போதித்த நபிகளார்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், "இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். 

அப்பெண்மணி, "ஆம் (தெரியும்)'' என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, "அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், "என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)'' என்று சொன்னாள்.

நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?'' என்று கேட்டார். அப்பெண், "எனக்கு அவர் யாரென்று தெரியாது'' எனக் கூறினாள். அம்மனிதர், "அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)'' என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. 
ஆகவே அவள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை'' என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள், "பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி 7154

மகளுக்கு பொறுமை போதித்த நபிகளார்
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ரலி) "தமது குழந்தை' அல்லது "தம் மகன்' இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், "என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!'' என்று கூறியனுப்பினார்கள். 

அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து "தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ர-லி), நூல் : முஸ்லிம் 1682, புகாரி7448

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், "என் மகளே! வருக!'' என்று வரவேற்றார்கள். 

பிறகு அவரை "தமது வலப் பக்கத்தில்' அல்லது "இடப்பக்கத்தில்' அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது அவரிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?'' என்று கேட்டேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சென்னார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை'' என்று கூறிவிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான், "உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்'' என்றேன். ஃபாத்திமா, "சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)'' என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:

முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். 

எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, "ஃபாத்திமா! "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?'' என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 4844

மகன் இகழ்ந்த போது பொறுமை மேற்கொண்ட நபித்தோழி ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? 

அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்'' என்று கூறினார்கள். 

நபி (ஸல்) அவர்கள் "ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த்தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 2809

பொறுமை கடைபிடித்து சொர்க்கவாதியான பெண்மணி

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான் "சரி! (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். 



அவர்கள், "(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்'' என்று சொன்னார்கள். இப்பெண்மணி "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்'' என்றார்கள்.நூல் : முஸ்லிம் 5032

ஆக்கம் : குழுமூர் - ராஜ்முஹம்மத், சுவாமிமலை
Thanks
ஏப்ரல் 2013 -  தீன்குலப்பெண்மணி
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger