எட்வர்ட் ஜோஸஃப் ஸ்னோடென்! - யார் இவர்? - அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபடும் பெயராக இருக்கிறதல்லவா?
அப்படி என்ன செய்துவிட்டார் இந்த ஸ்னோடென்? வேறு ஒன்றுமில்லை. உங்கள் வீட்டுப் படுக்கையறையை; குளியலறையை பல வருடங்களாக எட்டிப்பார்த்துவந்த ஒரு பெரும் ரவுடியை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் - அந்த உலக மகா ரவுடியால் தனது சொகுசான வாழ்வாதாரத்துக்கும், உயிர், உடமைக்கும் ஆபத்து வரும் என்று தெரிந்தும் கூட.
ஜார்ஜ் ஆர்வெல்லைத் தெரியுமா உங்களுக்கு? கடந்த நூற்றாண்டின் ஆங்கில நாவலாசிரியர்களுள் ஒருவர். ஸ்காட்லாந்து காரர். 1949ல் அவர் எழுதிய மகா பிரசித்திப் பெற்ற புதினத்தின் பெயர் 1984. ஆம், பெயரே 1984 தான். ( 'பெரியண்ணன்' (Big Brother) போன்ற சொல்லாடல்கள் பிரபலமானது அந்த நாவலுக்குப் பிறகு தான் ). அந்த நாவலில் சொல்லப்பட்டதெல்லாம், ஒரு சர்வாதிகார அரசு தன்னுடைய சுயநலனுக்காக மற்ற நாடுகளின், பொதுமக்களின் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் கேவலத்தைப் பற்றியது தான். அப்படி அந்த நாவலின் பேசுபொருளாயிருந்த கேவலம் ஒன்று இதோ இன்று முழுக்க முழுக்க உண்மையாகியிருக்கிறது. அதுவும் தொட்டது தொடாததற்கெல்லாம் மனித உரிமை என்று வாய் கிழியப் பேசும் அமெரிக்க ஏகாதிபத்தியம், பொதுமக்களின், பிறநாடுகளின் படுக்கையறையை, குளியலறையை எட்டிப் பார்க்கும் மானங்கெட்ட செயலை செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறது.
அமெரிக்காவின் இந்த ஈனச்செயலை அம்பலப்படுத்தியவர் தான் இந்த ஸ்னோடென். உள்ள உறுதி கொண்ட மனிதனுக்கு முன் வல்லரசு சாம்ராஜ்யமும் மண்டியிடும் என்று நிரூபித்துக் காட்டியிருப்பவர் அவர். தனிமனித ஒழுக்கத்தில் அடுத்தவரின் அந்தரங்கத்தைப் புனிதமென்று போற்றிவந்த அமெரிக்க தேசம் இன்றோ கேவலத்தின் சேறு அப்பிய தன் முகத்தை மறைக்க சிறு கைக்குட்டை கூட இல்லாமல் அம்மணத்துடன், அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிறது.
சி ஐ ஏ எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வு முகவத்தின் முன்னாள் பணியாளர் தான் எட்வர்டு ஜோஸஃப் ஸ்னோடன். தேசிய பாதுகாப்பு முகவம் (NSA) என்கிற இன்னொரு அரசுசார் உளவு நிறுவனத்தில் முறைமை நிர்வாகி (ஸிஸ்டம் அட்மின்) என்று பணிபுரிகையில் ஹவாயில் பூஸ் ஆல்லன் ஹாமில்ட்டன் என்னும் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டி வந்தது. அங்கே தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனிநபர் சுதந்திரமிக்கவர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்கர்களின் அனைத்து அந்தரங்கங்களையும் அமெரிக்க அரசே ஆவணப்படுத்தி வைத்திருந்தது. முப்பட்டக கண்காணிப்புத் திட்டம் (PRISM surveillance programme) என்று அதற்குப் பெயராம். தொலைபேசிகள், இணையத் தளத் தொடர்பாடல்கள், தனிமனிதர்கள், அரசுகள் என்று அனைவரின் அந்தரங்கத் தொலைத்தொடர்புகளும் அங்கே 'சேகரித்து'வைக்கப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரும் அதிதிறன் கணினி(Super Computers)களையும் சங்கேத மொழிபெயர்ப்புக் கணிதவியலாளர்களையும் கொண்டதாம் இந்த என் எஸ். ஏ .
அமெரிக்கர்கள் என்றில்லை, அனைத்து நாட்டு மக்களின், அரசுகளின் மிகப் பிரத்யேகமான அந்தரங்க, இராணுவத் தகவல்களும் கூட அங்கே 'திருடப் பட்டு' வைக்கப்பட்டிருந்தன. உலகப் போலீஸாகத் தன்னைக் காண்பித்துக்கொள்பவன் தான் உள்ளதிலேயே மிகப் பெரிய திருடன் என்று அறியவந்தபோது ஸ்னோடென் அதிர்ந்துபோனார். தன்னுடைய, சக அமெரிக்கர்களுடைய. பிற மனிதர்களுடைய உரிமையை மீட்க உறுதி பூண்டார்.
ஒரு கொடும் வல்லரசை தனிமனிதனாகத் தன்னால் எதிர்க்க முடியாது என்பதை ஸ்னோடென் உணர்ந்தே இருந்தார். இரண்டு இலட்சம் டாலர்கள் கிடைத்துக்கொண்டிருக்கும் வேலை பறிபோகும். குடும்பத்தினருக்கு பெரும் சிரமங்களும் கஷ்டங்களும் ஏற்படும். தன்னல அறிவுள்ள எந்த மனிதனும் இப்படிப்பட்ட சூழலில் வல்லரசை எதிர்க்கத் துணியமாட்டான். ஆனால், நரி இடம் போனாலென்ன; வலம் போனாலென்ன, என்னைக் கடிக்காமல் இருக்கட்டும் என்கிற சராசரி மனநிலையிலிருந்து மாறுபட்டார் ஸ்னோடென்.
உடனடியாக கார்டியன் என்கிற பிரசித்தி பெற்ற ஊடகத்தின் செய்தியாளர் க்ளென் க்ரீன்வால்ட்டையும், நாற்பது வருடங்களுக்கு முன்பு இதேபோல் மக்கள் உரிமைக்குப் போராடிய டேனியல் எல்ஸ்பெர்க் என்பவரையும் தொடர்பு கொண்டார். அமெரிக்க அரசின் அயோக்கியத்தனத்தைத் தோலுரிக்கும் தன் முயற்சியில் இணையும் ஊடகத்தார்கள் தன்னால் துன்பம் அனுபவிக்கக் கூடாது என்று கருதிய ஸ்னோடென், கார்டியனிலும், வாஷிங்ட்டன் போஸ்ட்டிலும் தானளிக்கும் செய்திகளையை ரகசியமாகவே வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் தேவைப்பட்டால் இந்தத் தகவல்களை அளிப்பவராகத் தன்னை இனங்காட்டலாம் என்றும் தெளிவாகத் தெரிவித்தும்விட்டார்.
கடந்த மே மாதம் 20 ம் தேதி சீன ஆட்சிக்குட்பட்ட ஹாங்காங் சென்றார் ஸ்னோடன். ஜூன் 6 முதல் உலகையே அதிரவைத்த அமெரிக்க அரசின் அயோக்கியத் தனங்களை காட்சிப்படுத்தத் தொடங்கினார். அமெரிக்காவின் கேவலமான முகம் உலகிற்கு மீண்டுமொரு முறை வெளிப்பட்டது. அதைப் படம் பிடித்துக் காட்டிய ஸ்னோடென்னோ ஹாங்காங்கின் பல்வேறு விடுதிகளில் ஒளிந்து வாழ நேரிட்டது. இப்போதும், ரஷ்யா வழியாக ஈக்வடார் செல்ல விரும்புகிறார் ஸ்னோடென். அங்கே தான், விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே இருக்கிறார். உண்மையான மனித உரிமை உடையதாகக் கருதப்படுகின்றன ஈக்வடார் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். ஸ்னோடென்னின் தைரியத்தைப் பாராட்டும் ஜூலியன் அசாஞ்சே "எப்படியாவது ஈக்வடார் வந்துவிடு தம்பி" என்று ஸ்னோடென்னை அழைத்துக்கொண்டிருக்க, அமெரிக்க ஏகாதிபத்தியமோ "ஒழுங்கு மரியாதையாக ஸ்னோடென்னை ஒப்படைத்துவிடு" என்று ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. "அப்படியெல்லாம் ஒப்படைக்க முடியாது" என்று ரஷ்யா போன்ற நாடுகள் மறுத்தாலும், "உலக நாடுகளின் அந்தரங்கங்களை நீ எப்படி எட்டிப் பார்க்கலாம்?" என்று அமெரிக்காவைக் கேள்வி கேட்கும் தைரியத்தை அவை பெறவில்லை. இந்தியாவும் தான். அப்படிப் பார்த்தால், மானங்கெட்ட செயல் செய்த அமெரிக்காவைத் தட்டிக் கேட்கும் திராணியற்று மானங்குலைந்து நிற்பவை மற்ற நாடுகளே.
- இப்னு ஹம்துன்
Post a Comment