பெண் பார்க்கும் போது மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஓதத் தெரியுமா ? தொழத் தெரியுமா ? என்று கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில் என்னைத் திருமணம் செய்தார்கள். ஆனால் இது போன்று ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா ? தொழுகை உள்ளவரா? என்று கேட்டுத் திருமணம் செய்ய முடியுமா?
இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் தவ்ஹீத் கொள்கை உள்ளவராக, திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவராக, தொழும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்ணிடம் எப்படி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதோ அதே அடிப்படையில் பெண் வீட்டு சார்பாக மணமகனையும் விசாரித்தே தேர்வு செய்ய வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனதுவிருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இந்த வசனம் தவ்ஹீத் கொள்கை உள்ளவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கும் போது, நல்ல மனிதரைத் தேர்வு செய்ய அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
... நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள். நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உஸாமாவை மணந்து கொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2953)
Post a Comment