கோவை: ஒழுங்காகப் படிக்கச் சொன்ன பெற்றோரை தண்டிப்பதற்காக மாணவி ஒருவர் கடத்தல் நாடகம் ஆடியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கோவை பொன்னையராஜபுரம் அருகே உள்ள தனிப்பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவர் சனிக்கிழமை காலை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் நின்றுகொண்டு சாலையில் சிலரிடம் மர்ம நபர்கள் தன்னைக் கடத்திச் சென்று 3.5 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு இந்த இடத்தில், இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.
உடன் அப்பகுதி மக்கள் அந்த மாணவியை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு காவல்துறையினர் மாணவி கடத்திச் சென்றதாக சொன்ன வழிகளில் மாநகரக் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவையும் சோதனை செய்து பார்த்தனர். இறுதியில் அப்படி ஒரு கடத்தல் சம்பவமே நடைபெறவில்லை என்று தெரியவந்தது.
பின்பு மாணவியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, தன்னை படி படி என்று கண்டித்த பெற்றோரை தண்டிக்கவே இப்படி ஒரு நாடகம் ஆடியதாக அந்த மாணவி ஒப்புக் கொண்டுள்ளார். பின்பு அந்த மாணவிக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர் பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
Post a Comment